சிறந்த முறையிலே வாழ்க்கையை அமைத்துக் கொண்டு,
பெரியார் என்ற மாமருந்தை உட்கொண்ட காரணத்தால்,
அரங்கராசன் குடும்பம் ஓர் இலட்சியக் குடும்பமாக இருப்பது மட்டுமல்ல; ஓர் அறிவுக் குடும்பமாகவும் திகழ்கிறது!
ஆசிரியர் பணியிலிருந்து அவர் ஓய்வு பெறுவது என்பது பதவிக்குத்தான் ஓய்வு; கொள்கைக்கு அல்ல! இன்றைக்கும் அவர் பாடம் போதித்துக் கொண்டே இருக்கிறார்!!
வசிஷ்டபுரம், அக்.30 சிறந்த முறையிலே வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, பெரியார் என்ற மாமருந்தை அரங்கராசன் உட்கொண்ட காரணத்தால், அவருடைய குடும்பம் ஓர் இலட்சியக் குடும்பமாக இருப்பது மட்டுமல்ல; ஓர் அறிவுக் குடும்பமாகத் திகழ்கிறது. ஆசிரியர் பணியிலிருந்து அவர் ஓய்வு பெறுவது என்பது பதவிக்குத்தான் ஓய்வு! கொள்கைக்கு அல்ல; இன்றைக்கும் அவர் பாடம் போதித்துக் கொண்டே இருக்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அசோதை – இரா.அரங்கராசன்
இல்ல அறிமுக விழா!
கடந்த 9.9.2026 அன்று பெரம்பலூர் வட்டம் வசிஷ்ட புரத்தி்ல், கொள்கை விளக்க இல்லமாக அமைந்துள்ள அசோதை – இரா.அரங்கராசன் இல்லத்தினைத் திறந்து வைத்து, வாழ்த்துரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
95 வயதிருக்கிற தலைவருக்குக் கீழே
நான் பணியாற்றுகின்றேன்!
நான், இளைஞர்தான்; எப்படி என்றால், 95 வயதிருக்கிற தலைவருக்குக் கீழே நான் பணியாற்று கின்றேன். ஆகவே, பெரிய கோடு – சின்ன கோடு; அவ்வளவுதானே தவிர, வேறொன்றும் கிடையாது.
தந்தை பெரியாருடைய புரட்சி – அமைதிப் புரட்சி!
அப்பேர்ப்பட்ட சிறப்புடைய ஓரிடத்தில், நல்ல அளவில் கல்வி கற்று, படிப்பு, ஆசிரியர் தகுதிக்கும் உரியவராக ஆகி, ஆசிரியராகப் பணியில் இருந்தார். ஒரு காலத்தில் நாமெல்லாம் படிக்கவே தகுதி இல்லாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள். ‘‘ஓய், உனக்குப் படிப்பு வராதுடா! போய், மாடு மேய், உனக்கு எதுவும் வராது. உங்க அப்பன், சிரைக்கின்ற தொழிலில் இருக்கிறான்; நீயும் போய், சிரைக்கப் பழகு; உனக்கு எதற்குப் படிப்பு?’’ இப்படி எல்லாம் ஆணவத்தோடு ஆரிய ஆசிரியர்கள், மற்றவர்கள் நம்மை நடத்தின காலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு; பெரியார் பிறப்பதற்கு முன்னால்! சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னால்! ஆனால், இன்றைக்கு, அதையெல்லாம் மாற்றி அமைத்திருக்கிறது, அய்யாவினுடைய புரட்சி – அமைதிப் புரட்சி!
இன்றைக்கு அம்மா இந்திரா இங்கே அமர்ந்தி ருக்கிறார்கள் என்றால், நூறாண்டுகளுக்கு முன்பு இப்படி பெண்கள் நாற்காலியில் அமர முடியுமா? நம்முடைய பாட்டிகள் எல்லாம் நாற்காலியில் உட்கார மாட்டார்கள். ‘‘ஆம்பளைக்கு முன்னால் நான் எப்படி, உட்காருவது?’’ என்று கேட்பார்கள். இன்றைக்கு ஆண்கள் இவ்வளவு பேர் நிற்கிறார்கள், பெண்கள் எல்லாம் ‘ஜம்’மென்று அமர்ந்திருக்கிறார்கள். இதுதான் பெரியார் செய்த புரட்சி!
வெறும் படம் அல்ல; ஒரு பாடம்!
வீட்டிற்குள்ளே அழைத்துக் கொண்டு போய், பெற்றோருடைய படத்தை அரங்கராசன் அவர்களும், அசோதை அம்மையாரும் திறக்கச் சொன்னார்கள். நீங்கள் எல்லோரும், வீட்டிற்குள்ளே போய் அந்தப் படங்களைப் பார்க்கவேண்டும். அவர்களுடைய பெற்றோர் படங்களைப் பெரிதாக வைத்திருக்கிறார்கள். நன்றி உணர்ச்சி, மரியாதையின் காரணமாக. அந்தப் படத்தில், உள்ள வயதான அம்மையார் அவர்கள் ரவிக்கை இல்லாமல் இருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினர் படங்களும் அங்கே உண்டு. ஆனால், அந்த ஒரு படம், அவருடைய தாய் படத்தினை அப்படியே எழுதியிருக்கார்; மாற்றம் செய்யவில்லை. அதற்காக அவரைப் பாராட்டுறேன். அது பெரிய பாடம் – வெறும் படம் அல்ல; ஒரு பாடம். என்னவென்றால், அந்த அம்மையார் ரவிக்கைப் போடவில்லை. அந்தக் காலத்தில், கிராமங்களில் ரவிக்கைப் போட மாட்டார்கள். அய்யா தந்தை பெரியார் அவர்கள், ஒவ்வொரு கூட்டங்களிலும் சொல்வார், ரவிக்கையை யாராவது அணிந்தால், வெளியூரிலிருந்து ஒரு புது ஆள் ரவிக்கை அணிந்துகொண்டு வந்தால் அல்லது படித்துவிட்டு வந்தால், என்ன சொல்லுவார்களாம் தெரியுமா? இப்படிச் சொல்வதற்கு, மன்னிக்க வேண்டும் தாய்மார்கள், அன்றைய நிலையை எடுத்துச் சொல்வதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இதை நான் சொல்றேன். ‘‘ஏய், யார் இந்தப் பொம்பளை? என்ன தேவடியா மாதிரி ரவிக்கைப் போட்டு வந்திருக்கா?’’ என்று கொச்சைத்தனமாகப் பேசுவார்களாம். ஆகவே, ரவிக்கைப் போடுவதே தவறு என்று அன்றைக்குச் சொன்னார்கள். தோள் சீலைப் போராட்டம் என்று, கேரளாவில் ஒரு நூறாண்டு பெரிய அளவுக்கு நடந்தது எல்லாம் வரலாற்றில் இருக்கிறது. நேரமின்மையால் அதற்குள் நான் செல்லவில்லை. பெண்கள் ரவிக்கைப் போடக்கூடாது; நம்முடைய பெண்கள் மாராப்புப் போடக்கூடாது. மார்பகத்தை மறைக்கக் கூடாது. உயர்ஜாதி பார்ப்பனர்கள் மட்டும்தான் ரவிக்கை அணிய வேண்டும்.
வாஞ்சிநாத அய்யர், ஆஷ் துரையைச்
சுட்டுக் கொன்றது வைதீகத்தை, ஸநாதனத்தை காப்பாற்றுவதற்காகத்தான்!
ஆஷ் துரையை, வாஞ்சிநாத அய்யர் சுட்டுக் கொன்றார் என்றால், சுதந்திரத்திற்காகச் சுட்டுக் கொல்லவில்லை. வருணாசிரமக் கட்டுப்பாடு களை வெள்ளைக்காரர்கள் மாற்றினார்கள் என்பதற்காகத்தான், வைதீகத்தை, ஸநாதனத்தை காப்பாற்றுவதற்காகத்தான், ஆஷ் துரையை, வாஞ்சிநாத அய்யர் சுட்டுக்கொன்றார். இன்றைக்கு யாராவது, அது மாதிரி ரவிக்கை அணியாமல் போவதற்கு விடுவார்களா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். இந்த இயக்கம் என்ன செய்தது? நம்முடைய பெண்களுக்காக மட்டுமல்ல, எல்லோ ருக்கும் வழி செய்தது. பார்ப்பனர்களுக்கு எதிரி என்று எங்களை நினைக்கிறார்கள். உண்மை அப்படி இல்லை; பார்ப்பனப் பெண்களுக்குக் கூட சுயமரியாதையைப் பெற்றுத் தந்தது இந்த இயக்கம்.
உதாரணத்திற்கு, ஒன்று சொல்கிறேன், தாய்மார்கள், பெரியோர்கள், கிராமத்தில் இருக்கிறீர்கள். ஒரு கிராமத்தில் இரண்டு அல்லது மூன்று, நான்கு அய்யர் வீடுகள் இருக்கும். அந்த அய்யர் வீட்டில், வயதான பாட்டி யாராவது இருந்தால், அவர்கள் முக்காடு போட்டுக் கொண்டிருப்பார்கள். எதற்காக அவர்கள் முக்காடு போட்டிருக்கிறார்கள் என்றால், அவர் கணவனை இழந்தவராக இருப்பார். அவர்களுக்கு என்ன பெயர் என்றால், ‘‘மொட்டப்பாப்பாத்தி’’ என்று அழைப்பார்கள்.
இன்றைக்கு எங்கேயாவது மொட்டைப் பாப்பாத்தியைப் பார்க்க முடியுமா?
இன்றைக்குத் தமிழ்நாட்டில் கணவனை இழந்தப் பெண்கள் இருக்கிறார்கள்; பார்ப்பன சமுதாயத்திலேயும் கணவனை இழந்த பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், எங்கேயாவது, அவர்கள் மொட்டை அடித்துக்கொண்டு, ‘‘மொட்டை பாப்பாத்தி’’ மாதிரி இன்றைக்கு இருக்கிறார்களா? அப்படி யாராவது இருப்பதைச் சொன்னால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுக்கலாம். ஏனென்றால், அப்படி யாரும் கிடையாது. அவர்கள்தான் முதலில், சீர்திருத்தக் கொள்கையால் பயன் பெற்றவர்கள். நம்முடைய பெண்களாவது, கணவனை இழந்த பெண்கள் வெள்ளைச் சீலை உடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பார்ப்பனப் பெண்கள்தான் இன்றைக்குப் பொட்டு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது மொட்டைப் பாப்பாத்தி அம்மாவை எங்கே யும் பார்க்க முடியாது. வேண்டுமானால், கமலகாசன் நடித்த ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் பார்க்கலாம். 10 அவதாரத்தில் ‘மொட்டைப் பாப்பாத்தி’ அவதாரமும் எடுத்திருப்பார்.
ஒரு துளி இரத்தம் சிந்தாமல்…
இந்த அளவுக்குச் சமுதாயத்தில் ஒரு துளி இரத்தம் சிந்தாமல், யாரையும் பலி கொடுக்காமல், அகிம்சையை சொல்லக்கூடிய, வன்முறையற்ற ஒரு முறையினால், கருத்துப் போராட்டத்தினால்தான் இந்த இயக்கம் இதைச் சாதித்தது. மூன்றாவது தலைமுறையைப் பார்த்தீர்கள் என்றால், விக்டோரியா எப்படி இருக்கிறார்? எலிசபெத் எப்படி இருக்கிறார்? பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்? அவருடைய அம்மா, பழைய தலைமுறை எப்படி இருந்தது? என்பதைக் காட்டுவதற்காகவே, அந்தப் படத்தைத் திறந்திருக்கிறார்; மாற்றாமல், அப்படியே போட்டிருக்கிறார், அதுதான் அவரைப் பாராட்ட வேண்டிய அம்சமாகும். அதுவே ஒரு பாடம்; அவரே ஓர் ஆசிரியர். ஆசிரியருக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று தெரியும். ஆகவே அப்படிப்பட்ட ஓர் அருமையான நிகழ்ச்சி இது.
அதே மாதிரி ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்பது எமகண்டம், மேற்கு திசை, கைம்பெண்கள். எங்களுக்குத் தேவையில்லாத ஒரு விழா அது. ஆனால், அதை ஏன் தேவைப்படுத்துகிறார்கள் என்றால், மற்றவர்களுக்குத் தைரியம் வர வேண்டும் என்பதற்காகத்தான். பிரச்சார வாய்ப்பாக அவ்விழாவைப் பயன்படுத்தினார். அதே மாதிரி, கடைத்திறப்பு விழாவை ராகுகாலத்தில் நடத்தினார். பூனையைக் குறுக்கேவிட்டார். பூனையைக் குறுக்கே விட்டால், அது எலி பிடிக்கத்தான் போகும். ஆனால், இவையெல்லாம் நம்முடைய நாட்டில் ஒரு மூடநம்பிக்கை. அதை முறியடிக்கத்தான்.
பெண்களே பாடையைத் தூக்கிக்கொண்டு
சுடுகாடு வரை சென்றனர்!
கடைத் திறப்பு விழாவை ராகு காலத்தில்தான் நடத்தியிருக்கிறார். 2002 ஆம் ஆண்டில், வீரமணி வருகை – குத்துவிளக்கு, சூடத்தை நிறுத்தல். அதுபோல, பகுத்தறிவுப் பால் புகட்டு விழா – தேய்பிறை நாள் – இவை எல்லாவற்றையும் விட, மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களிலே இருக்கக்கூடிய நம்முடைய அறிவுக்கரசு அவர்களுடைய தலைமையில், பெண்களே பாடையைத் தூக்கக் கூடிய அளவிற்கு, சடங்குகள் இல்லாமல், சுடுகாடு வரை தூக்கிக் கொண்டு சென்றனர். ஆண்கள் மட்டும்தான் பாடையைச் சுமக்கவேண்டும் என்ற நிலையை உடைத்து, ஆண்களும் சுமக்கலாம், பெண்களும் சுமக்கலாம் என்று சொல்லக்கூடிய வாய்ப்பை உருவாக்கி, அதை நடத்திக் காட்டினார்.
ஒரு சுயமரியாதை வீரர் செய்த சாதனை!
மிகப்பெரிய அளவுக்கு விவசாயம், 500 மூட்டை நெல்; 500 டன் கரும்பு. இந்த கிராமம் ஒரு சாதாரண கிராமம். ஒரு மனிதர், ஒரு சுயமரியாதை வீரர் செய்த சாதனை! எப்படித் தன்னந்தனியாகத் தந்தை பெரியார் புறப்பட்டு, இந்தச் சமுதாயத்தை மாற்றினாரோ, அதுபோல தன்னந்தனியாக ஓர் அரங்கராசன், இந்த வசிஷ்டபுரத்தில முதல் முதலாக முதன்மையான டிவி. ஓ! நீங்கள் அதற்கு முன்பு இதையெல்லாம் பார்த்ததில்லை. சிலிண்டர், கழிப்பறை – அதற்கு முன்பெல்லாம் கிராமங்களில் கழிப்பறைகள் என்பதெல்லாம் கிடையாது. அதற்காக மாலை நேரம் வருகின்ற வரையில், இருட்டு வருகின்ற வரையில், பெண்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.
இப்பொழுது பாத்தீர்கள் என்றால், கழிப்பறை இல்லாத வீடு மட்டுமல்ல, ‘மாஸ்டர் பெட் ரூம்’ என்று சொல்லி, வீடு கட்டும்போதே, வீட்டினுள் கழிப்பறை வைத்துத்தான் கட்டுகிறார்கள். ‘‘அய்யயோ இது என்னங்க கழிப்பறையை வீட்டுக்குள்ளே வைப்பதா?’’ என்கிறார்கள் சிலர்.
வாஸ்து சாஸ்திரத்தில் எங்கேயாவது கழிப்பறைக்கு இடம் உண்டா?
இப்பொழுது வீடு கட்டுகிறவர்களுக்கு எல்லாம் இன்னொரு வியாதி பிடித்திருக்கிறது, என்ன அந்த வியாதி என்றால், வீடு கட்டுவதற்காக ‘வாஸ்து ஸ்பெஷலிஸ்ட்’டை அழைத்துக் கொண்டு வந்து, அவர் சொல்கிறபடி வீடு கட்டுவதாம். வாஸ்து என்றால், என்ன தெரியுமா? ஜாதியைக் காப்பாற்றுவதற்காக பார்ப்பனர்கள் அண்மையில் கண்டுபிடித்த வியாபாரம் தானே தவிர, வேறொன்றும் கிடையாது.
எதைக் கேட்டாலும், வாஸ்துப்படி என்பார்கள். ரியல் எஸ்டேட் விளம்பரம் செய்கிறார்கள், வாஸ்துப்படி என்றுதான். அவர்களை ஒரு கேள்வி கேளுங்கள், வாஸ்து சாஸ்திரத்தில் எங்கேயாவது கழிப்பறைக்கு இடம் உண்டா? என்று. நிச்சயமாக வாஸ்து சாஸ்திரத்தில் அதற்கு இடம் கிடையாது.
நியூயார்க்கில் உள்ள
எம்பயர் ஸ்டேட் பில்டிங்
ஓர் அனுபவத்தை உங்களுக்கு நான் சொல்கிறேன். நாமெல்லாம் பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம், மிக உயரமான கட்டடம் எங்கே இருக்கிறது? என்றால், எம்பயர் ஸ்டேட் பில்டிங், நியூயார்க்கில் இருக்கிறது, 102 மாடிக் கட்டடம் என்று. அமெரிக்காவுக்கு முதன்முறையாக நான் சென்றபோது, என்னுடன் வந்தவர், இயக்கத்தைச் சார்ந்தவர் அல்ல; என்னுடைய நண்பர் – அவருடைய இல்லத்தில்தான் தங்கியிருந்தோம். அவர், எம்பயர் ஸ்டேட் கட்டடத்திற்கு அழைத்துச் சென்றார். உள்ளே லிப்ட்டிற்குள் சென்று, ஒரு பொத்தானை அழுத்தினார். கண்மூடிக் கண் திறப்பதற்குள் 84 ஆம் மாடியின் மேல் நிற்கிறோம்.
நான், அப்படியே சுற்றிப் பார்த்தேன்.
என்னுடைய நண்பர், ‘‘என்ன பார்க்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.
‘‘இல்லீங்க, பூசணிக்காய் ஏதாவது கட்டியிருக்கிறதா? என்று பார்க்கிறேன்’’ என்றேன்.
‘‘ஏன்?’’ என்றார் அவர்.
இவ்வளவு பெரிய கட்டடம் விழாமல் இருப்பதற்கு நம் ஊரில் பூசணிக்காய் கட்டுவார்களே, அதைத்தான் பார்த்தேன் என்றேன்.
புரட்சிக்கவிஞரின்
‘பூசணிக்காய் மகத்துவம்!’
ஆனால், புரட்சிக்கவிஞர் அவர்கள், ‘பூசணிக்காய் மகத்துவம்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார்.
‘‘மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க
விடுகின்றார்கள்;
செய்வண்ண வேலைசெய்து திருமாடம்
முடிக்கின்றாய் நீ!
பொய்வண்ணப் பூசணிக்காய்!கறியுனைச்
செய்துண்டேன் உன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்;
கறிவண்ணம்
இங்குக் கண்டேன்!’’
பூசணிக்காய் அல்வா செய்யலாம், கூட்டுச் செய்ய லாம், குழம்பு வைக்கலாம் – சத்தான உணவு அது. அதைக் கொண்டு போய், சுத்திப் போட்டு, நடுச் சாாலையில் உடைத்து, அதன் மேல் இரு சக்கர வாகனம் ஏறி, வழுக்கி விழுந்து, எலும்பு முறிந்து போகக்கூடிய அளவிற்கு இல்லாமல், இவ்வளவும் நடைபெறுகின்ற கூத்தெல்லாம் இங்கு கிடையாது. அறிவுப் பூர்வமாகவே வீடு கட்டுவதைச் செய்தார். அதோடு பெண்களைக் கல்லூரியில் படிக்க வைத்தார். முதலில் பி.ஏ. அடுத்து எம்.ஏ. அடுத்துக் கொள்ளுப் பெயரன் முதல் இன்றைக்குச் சிங்கப்பூரில். ஒரு மனிதர் இப்படிச் சாதித்தார் என்றால், இவருடைய வெற்றிக்கு யார் காரணம்? பெரியார் காரணம்! சுயமரியாதை இயக்கம் காரணம்.
முத்தமிழறிஞர் கலைஞர்
தருமபுரியில், பெரியார் சிலை திறப்பு விழாவின்போது, முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னார், ‘‘நான் மாணவராக இருக்கும்போது பெரியாரிடம் சென்றேன். என்னைப் பார்த்து, என் ஜாதிக்காரர்கள், உறவுக்காரர்கள் எல்லாம் சேர்ந்து, ‘‘இவன் உருப்படுவானா, கருப்புச் சட்டைக்காரர்கள் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறானே?’’ என்றார்கள். நான் உருப்பட்டேனா, இல்லையா என்பதை ஊரறியும், உலகறியும்’’ என்றார்.
சுயமரியாதைக் கொள்கையை ஏற்றவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள்!
அதுபோன்று அரங்கராசன் அவர்கள் வளர்ந்தி ருக்கிறார். எங்களை ஏன் அழைத்தார்? இந்த வாசகங்களை ஏன் போட்டார்? ஏன் இதை ஒரு பிரச்சார விழாவாக ஆக்கினார்? என்று சொன்னால், ‘‘இந்தக் கொள்கையை ஏற்ற நான், விழுந்து விடவில்லை, தாழ்ந்து விட வில்லை. இந்தக் கொள்கை ஏற்கிற எல்லோரும் வெற்றி பெறுவார்கள், வளர்ச்சி அடைவார்கள்’’ என்பதைக் காட்டுவதற்குத்தான். அதற்குக் காரணம் சிக்கனமாக இருந்திருப்பார். வரவுக்கு உட்பட்டு செலவு செய்திருப்பார். கடன் வாங்கினால், திருப்பிக் கொடுத்திருப்பார். அல்லது வாங்கியே இருக்க மாட்டார். அப்படி எல்லாம் அவர் வளர்ந்துதான், பிள்ளைகள் படித்து பெருமிதத்தோடு இன்றைக்கு இருக்கிறார்கள்.
நாங்கள் பதவிக்குப் போகாதவர்கள்;
புகழ் நாடாதவர்கள்!
எல்லா வகையிலும் இவர்கள் நல்வாழ்வோடு, மேலும் சிறக்க வேண்டும் என்று சொல்லி, இந்தக் கொள்கை வாழ்க்கையைப் பார்த்து நீங்களும் துணிவு கொள்ளுங்கள்! நீங்களும் சாதிப்பீர்கள். எனவே, பெரியாருக்காக இந்தக் கொள்கையை நீங்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. எங்களுக்காக, நீங்கள் இந்த இயக்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று கேட்கமாட்டோம்.
நாங்கள் பதவிக்குப் போகாதவர்கள்; புகழ் நாடாத வர்கள். அப்படிப்பட்டவர்களான நாங்கள் உங்களைப் பார்த்து ஒன்றை மட்டும் கேட்கிறேன்.
ஒருவரைப் பார்த்து, ‘‘ஏங்க நீங்க மருந்து சாப்பிடு கிறீர்கள்?’’ என்று கேட்டால்,
எதற்காக மருந்து சாப்பிடுகிறோம்?
‘‘டாக்டர் எழுதிக் கொடுத்துவிட்டார்; அதனால், மருந்து சாப்பிடுகிறேன். மருந்து சாப்பிடவில்லை என்றால், டாக்டர் வருத்தப்படுவார் என்று சொல்வீர்களா?’’ அல்லது ‘‘மருந்துக் கடைக்காரருக்கு வியாபாரம் ஆக வேண்டும் என்பதற்காக மருந்து சாப்பிடுகிறேன் என்று சொல்வீர்களா?’’
இல்லவே இல்லை. என்னுடைய நோய் தீரவேண்டும் என்பதற்காகத்தான் மருந்து சாப்பிடுகிறேன் என்று சொல்வார்.
ஒரு சிறந்த முறையிலே வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, பெரியார் என்ற மாமருந்தை அவர் உட்கொண்ட காரணத்தால், இந்தக் குடும்பம் ஓர் இலட்சியக் குடும்பமாக இருப்பது மட்டுமல்ல; ஓர் அறிவுக் குடும்பமாகத் திகழ்கிறது. ஆசிரியர் பணியி லிருந்து அவர் ஓய்வு பெறுவது என்பது பதவிக்குத்தான் ஓய்வு! கொள்கைக்கு அல்ல; இன்றைக்கும் அவர் பாடம் போதித்துக் கொண்டே இருக்கிறார். இந்த வீட்டுக்குள்ளே ஓர் அய்ந்து நிமிடம் வந்துவிட்டுச் சென்றால், ஒரு பெரிய காலத்தையே கற்றுக் கொண்டு போகிற அளவுக்கு, ஒரு பத்தாண்டுப் பாடத்தைப் படிப்பதைவிட, இந்த வாசகங்களைப் படித்து, படத்தைப் பார்த்து, வீட்டைப் பார்த்து, அவர் செய்த சாதனைகளைப் பார்த்தால், நன்றாகப் புரிந்துகொள்ளலாம் – இதுதான் வெற்றி!
தொண்டர்களுக்குத் தொண்டன் –
தோழர்களுக்குத் தோழன்!
ஆகவேதான், இவ்விழாவில் கலந்து கொள்வதில், பெருமையடைகிறேன். நான், தொண்டர்களுக்குத் தொண்டன் – தோழர்களுக்குத் தோழன்.
இப்படி எல்லாம் எங்கள் தோழர்கள் இருக்கிறார்கள்; குடும்பம் குடும்பமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிற போதுதான், மேலும் மேலும் நான் மகிழ்ச்சி அடை கிறேன், பாராட்டுகிறேன். திரும்பும் போது இளமைப் பெறுகிறேன். உங்களுக்கு உழைக்க உறுதி கூறுகிறேன்.
வாழ்க பெரியார்! வாழ்க அன்னை மணியம்மையார்! வாழ்க அரங்கராசன் – அசோதை இணையரும், குடும்பங்களும். தொடர்ந்து இதைப் பின்பற்றுங்கள், கிராமங்கள் மாறும்!
நன்றி, வணக்கம்!
–இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
