இரண்டு நாள் மாநாடு எனத் திட்ட மிடப்பட்டு, முதல் நாள் மாநாடு ஞாயிறன்று மாலை 04.30 மணிக்குத் தொடங்கி, இரவு 07.30 மணிக்கு முடி வடைந்தது. அதேபோல திங்கட்கிழமை காலை முதல் இரவு வரை தொடர்ந்து மாநாடு நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் நேரலை, பெரியார் வலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்டு, பதிவாகி உள்ளது. ஞாயிறன்று நடைபெற்ற மாநாட்டில் இணையம் மூலம் தொடக்க உரையும், திங்கட்கிழமை மாநாட்டில் சிறப்புரையும் ஆற்றினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். சற்று உடல்நிலைச் சரியில்லாத காரணத்தால் ஆசிரியர் அவர்களால் மாநாட்டில் பங்கேற்க இயலவில்லை.
இணைக்கும் பாலமாக இருந்த பெரியாரியம்!
இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு அரசின் முன்னாள் திட்டக்குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன், சமூக ஆர்வலர் ஃபுகாவோ ஜூனிச்சி, திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தொடர்ந்து மனித உரிமை செயற்பாட் டாளர்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்த பெசவாடா வில்சன் மற்றும் ஜப்பானின் ஒசிடா கோரா ஆகியோரும் மக்கள் மனதை நெகிழ வைக்குமளவு உரைகளை நிகழ்த்தினர். “மனிதக் கழிவுகளை மனி தர்களே அள்ளும் கொடுமையில் இருந்து மீட்கப் போராடும் பெசவாடா வில்சன், தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளை மீட்கப் போராடும் ஜப்பானியர் ஒசிடா கோரோ ஆகிய இருவரையும் ஒரே மேடையில் இணைக்கும் பாலமாக எங்க ளுக்கு இருந்தது பெரியாரியம் தான்”, எனத் தோழர் ரா.செந்தில்குமார் குறிப்பிட்டார்.
ஆய்வுரைகளின் தலைப்புகள்!
மேலும் ‘வாசகர் வட்டங்கள் மூலம் திராவிடத் தமிழ் பண்பாட்டுச் சிந்தனை யைப் பரப்புதல்’ எனும் தலைப்பில் விக்னேஷ் ராஜாமணி, ‘மனிதநேய மற்றும் பகுத்தறிவுக் கல்விக்கான கொள்கைக் கட்டமைப்பு மற்றும் இந்தியாவின் மனிதவள மற்றும் கல்வி மேம்பாட்டில் உள்ள குறைபாடுகள்’ குறித்து ரேகா தாக்கூர், ‘புறக்கணிக்கப்பட்ட நிலையிலிருந்து நிறுவன அங்கீகாரம் வரை’ எனும் தலைப்பில் ஜெய்செலி ராதிகா குமார், ‘சமூகநீதி மற்றும் பாகு பாடற்ற கற்பித்தல் முறைகள் மூலம் இளைய தலைமுறையினரிடம் பகுத்தறிவுச் சிந்தனையையும் மனிதநேய விழுமியங்களையும் வளர்த்தல்’ எனும் தலைப்பில் சு.குமணராசன் ‘மலேசியாவில் திராவிட இயக்கமும், அதன் மனிதநேயப் பணிகளும்’ எனும் தலைப்பில் முனைவர் எம். கோவிந்தசாமி, ‘மனிதநேய ஆர்வத்தின் மூலம் உலகை மாற்றுவோம்’ எனும் தலைப்பில் நிவிதா மோகன் ஆகியோர் பேசினர்.

தொடர்ந்து ‘இளம் உள்ளங்களில் பண்பாடு, இலக்கியம் மற்றும் தத்துவத்தின் தாக்கங்கள்’ குறித்து அன்பரசன் குப்புசாமி, ‘நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கற்றல் மற்றும் வகுப்பறையில் பகுத்தறிவு, உரிமைகள் மற்றும் மனிதர்களின் செயலாற்றல்’ குறித்து அமரன் மோகன், ‘பரம்பரையாகத் தொடரும் ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து, இளம் தலைமுறையினரிடம் சமத்துவ விழுமியங்களை உருவாக்குவதில் இறைமறுப்பு மற்றும் மனிதநேயத்தின் பங்கு’ குறித்து முத்துகிருஷ்ணன் அழகர்சாமி, ‘திராவிட இயக்கம் – நிறைவுபெறாத புரட்சி’ குறித்து பாலசுப்பிரமணியன் முத்துச்சாமி,
‘21-ஆம் நூற்றாண்டிற்கான திராவிட இயக்கத்தின் மறுகட்டமைப்பு – செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு’ எனும் பொருளில் முனைவர் கணேஷ் ஏழுமலை, ‘பெரியார் கருணை மற்றும் மனித மாண்பு – அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தப்படும் விழுமியங்களாக, வளர்ச்சி உளவியல் நோக்கில் ஓர் ஆய்வு’ குறித்து பேராசிரியர் ராம் மகாலிங்கம், ‘பெண்களின் உரிமைகள் மற்றும் வாக்குரிமைக்காக உலகளவில் குரல் கொடுத்த முன்னோடிகள்’ எனும் பொருளில் முனைவர் சரோஜா இளங்கோவன், ‘ஜப்பானில் துப்புரவுத் தொழிலாளியாகிய நான், உலகெங்கிலும் உள்ள எனது தோழர்களுடன் இந்தப் போராட்டத்தில் ஒன்றுபட்டு நிற்கிறேன்’ எனும் உருக்கமான தலைப்பில் ஒசிடா கோரோ ஆகியோர் பேசினர்.
ஆற்றல் மிகுந்த செயல்வீரர்
தோழர் ச.கமலக்கண்ணன்!
ஜப்பான் வரலாற்றில் பொன்னெழுத் துகளால் பொறிக்கப்பட வேண்டிய உலகளாவிய சமத்துவம், சகோதரத்துவம், மனிதப் பண்புகள், சுயமரியாதை ஆகியவைகளை உள்ளடக்கிய இரண்டு நாள் மாநாடு மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது. இது ஜப்பான் தோழர்களின் கூட்டு முயற்சி என்றாலும், தன் முழுத் திறனையும் வெளிப்படுத்தி, தனித்துவம் படைத்த ச.கமலக்கண்ணன் எனும் தங்கள் தோழருக்கு “ஈவண்ட் மேஸ்ட்ரோ நின்ஜா விருதை” (Event Maestro Ninja Award) வழங்கி, மாநாட்டுக் குழுவினர் சிறப்பு செய்தார்கள். இவ்விருதை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்தும் மனிதர்களுக்கு, அவர்கள் அமைப்பின் சார்பாகவே வழங்கப்படும் ஓர் அங்கீகாரமே இந்த விருதாகும். உலகம் முழுவதிலும் இருந்த வந்த பங்கேற்பாளர்கள், கமலக்கண்ணன் தோழருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
(தொடரும்)
