விருகம்பாக்கம் தொகுதிகளில் கழகத் தலைவர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பரப்புரை!

8 Min Read

என்னுடைய ‘கால்வலி’யை விட தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ‘தலைவலி’க்குத்தான் முக்கியத்துவம்! ஒரு பக்கம் தேர்தல் போராட்டத்தை நடத்தினாலும் உரிமைப் போராட்டத்தையும் நடத்தத் தவற மாட்டோம்! சைதாப்பேட்டை, 

சைதை, ஏப். 19- சைதாப்பேட்டையில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள், “பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, காலில் அடிபட்டு வலியோடு மேடையேறி வந்திருக்கிறார்” என்று, வருத்தப்பட்டு பேசினார். அதற்கு, கழகத் தலைவர் பேசும் போது, “என்னுடைய ‘கால் வலி’யை விட, தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ‘தலைவலி’ தான் முக்கியம். தொகுதி மறு வரையறை பிரச்சினை நடந்திருக்க கூடிய சூழலில் தேர்தல் போராட்டத்தில் மட்டுமல்ல உரிமைப் போராட்டத்தையும் நடத்தத் தவற மாட்டோம்” என்று, சுயநலம் பொதுநலம் என்பதற்கான எளிமையான விளக்கத்தை வாழ்வியலாகவே உணர்த்தி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டார்.

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பொதுக்கூட்டம் 15.04.2026, புதன்கிழமை அன்று, மாலை 5 மணிக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈக்காட்டுத்தாங்கலில், கங்கை அம்மன் கோயில் அருகில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், தி.மு.க. மாமன்ற உறுப்பினர் இரா.துரைராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஞானசேகரன், ஆடிட்டர் இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். முன்னதாக திராவிடர் கொள்கை இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

என்னுடைய வலி பெரிதல்ல

வேட்பாளரும், அமைச்சருமான மா.சுபிரமணியம், கழகத் தலைவருடன் இணைந்து மேடைக்கு வருகை தந்தார். அமைச்சர் கழகத் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இந்தியா கூட்டணியின் பொறுப்பாளர்கள், தோழர்கள் கழகத் தலைவருக்கு பயனாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் மரியாதை செய்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து, அமைச்சர் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து சுருக்கமாக உரையாற்றினார். அதில், “இந்த 93 வயதிலும், காலில் அடிபட்டு கடும் வலி ஏற்பட்டுள்ள நிலையிலும், பெருமதிப்பிற்குரிய அய்யா ஆசிரியர் அவர்கள், பரப்புரை செய்வதற்காக மேடை ஏறி வந்ததைக் கண்டு, தான் மிகவும் சங்கடம் அடைந்ததாக குறிப்பிட்டு அமர்ந்தார்.  நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார். அவர் தமது உரையின் தொடக்கத்தில், “அமைச்சர் அவர்கள், எனக்கு காலில் அடிபட்டு வலியோடு வந்திருக்கிறேன் என்றும், அதைக் கண்டு தான் சங்கடப்பட்டதாகவும் சொன்னார். தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் தலைவலியை விட, என்னுடைய வலி பெரிதல்ல” என்று அமைச்சருக் கும், மக்களுக்கும் பதில் அளித்துவிட்டு தனது பரப்பு ரையை தொடர்ந்தார்.

இப்போது வீசுவது ஸ்டாலின் அலை

அவர் தமது உரையில், “கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் தாய்மார்களும், பெரியோர்களும் வருகை தந்திருக்கிறீர்கள். இந்த எழுச்சியை காணும் போது, மே 4 ஆம் தேதிக்குப் பிறகு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் மறுபடியும் முதலமைச்சர் ஆவார் என்பது உறுதியாகத் தெரிகிறது” என்று பலத்த கைதட்டல்களுக்கும், ஆரவாரங்களுக்கும் இடையில் குறிப்பிட்டார். மேலும் அவர்,  “சைதாப்பேட்டை கலைஞர்  நின்ற தொகுதி” என்ற ஒரு வரலாற்று குறிப்பை மக்களுக்கு நினைவு படுத்தினார். மக்கள் தன்னிச்சையாக மகிழ்ந்து கைகளைத் தட்டினர். மக்களின் உற்சாகத்தைக் கண்டு கழகத் தலைவர், “இப்போது வீசுவது ஸ்டாலின் அலை” என்றார். மேலும் அவர், தொகுதி வரையறை பற்றி நினைவூட்டி,  “ஒரு பக்கம் தேர்தல் போராட்டம் நடைபெற்றாலும், உரிமைப் போராட்டத்தையும் நடத்தத் தவற மாட்டோம்” என்று உரக்கச் சொன்னார். அதே உணர்ச்சியை தாங்களும் பெற்றதை, கைதட்டல்கள் மூலம் மக்கள் வெளிப்படுத்தினர். மேலும் அவர், “இந்த தொகுதி வரையறை என்பது எல்லோருக்கும் சமமாக நடக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்டவர்கள் சொல்வது, இனிப்பு பூசிய விஷ உருண்டை போன்றது” என்று உவமித்து, பளிச்சென்று விளங்க வைத்தார். அடுத்து, பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு, “அதில் மக்கள் நலத்திற்காக எந்தவொரு திட்டமும் இல்லை” என்பதை அம்பலப்படுத்தினார். பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை, விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஊக்கத்தொகை குறித்த அவர்களின் நிலைப்பாட்டையும், வெளிப்படையாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம், ‘வரப்புயர நீர் உயர’ என்று அவ்வையார் பாடலைப் பாடி, விவசாயிகளை ஏமாற்ற முயல்வதையும் சுட்டிக்காட்டி பேசினார். அடுத்து, அப்படிப்பட்ட பா.ஜ.க.வுடன், அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வதையும் சுட்டிக்காட்டி, “இதிலிருந்து தமிழ்நாடு மீளவும், கடந்த  5 ஆண்டுகளில் நடைமுறையில் இருக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரவும், மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

விருகம்பாக்கம்

தி.மு.க.வின் ‘காட்பாதர்’ ஆசிரியர்

அதைத் தொடர்ந்து, அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் பிரபாகர ராஜா அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க புறப்பட்டார். சென்னை மேற்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், இரவு 8 மணிக்கு மேல், கலைஞர் கருணாநிதி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் சுப்பிரமணியன், ஜெயசீலன், தி.மு.க.கண்ணன் MC, கதிரேசன், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். முன்னதாக கிராமப் பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் தொடக்க உரையாற்றினார். வேட்பாளர் பிரபாகர ராஜா வருகை தந்து வாகனத்தின் மீதிருந்து, “தி.மு.க.வின் ‘காட் பாதர்’ ஆசிரியர் அய்யா, எனக்கு வாக்கு கேட்டு வந்திருப்பதை நான் என்றென்றும் மறவேன்” என்று பேசி தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.

ஆசிரியர் பிரச்சாரம் – எனக்கு கிடைத்த பேறு!

“பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள், மேடைக்கு வரும்போது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. செங்குத்தான படிகள். ஆசிரியர் அய்யா அவர்களின் முட்டியில் அடிபட்டு, கால் கன்னிப் போயிருக்கிறது. அவருடைய வயது 93. இந்த வயதிலும் முட்டியில் ஏற்பட்ட வலியுடன் மேடைக்கு வந்திருக்கிறார். சிலர் சொல்கின்றனர். ‘நான் வலியை தாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று, நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஆசிரியர் அய்யாவுக்கு ஏற்பட்டிருக்கும் வலியை விட, இந்த திராவிடர் இனத்திற்கு வேறு எந்த வலியும் வந்து விடக்கூடாது என்று, தன்னுடைய 93 வயதிலும் உழைக்கின்ற ஆசிரியர் அய்யா அவர்கள், சைதாப்பேட்டை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்பது என்பது, எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு ஆகும்”
– சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம். 15.04.2026

எந்த தேர்தலிலும் இல்லாத மகிழ்ச்சி…

அவர் தமது உரையில், 1952 க்கு முன்னால் ஒரு தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தல் உட்பட, இந்த 17 ஆம் சட்டப்பேரவை தேர்தலுடன் 18 தேர்தல்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். வேறு எந்த தேர்தலிலும் இல்லாத மகிழ்ச்சி, மக்களிடம் குறிப்பாக மகளிரிடம் இருக்கிறது” என்று குறிப்பிட்டு விட்டு, “இதே மகளிரைத்தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு, ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு?’ என்றனர் சிலர். இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கின்றது. இந்த மாற்றம் எப்படி வந்தது? அந்த மாற்றத்தை தந்த இயக்கம் தான், திராவிடர் இயக்கம்! அதன் தொடர்ச்சியாகத் தான், விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பிரபாகர ராஜாவுக்கு நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்!” என்று திமுகவின் நீண்ட… நெடி…ய கொள்கை வரலாற்றுப் பின்னணியை சுருக்கமான நேரத்தில் விவரித்தார். தொடர்ந்து, திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிடத் தொடங்கினார். அடுத்து, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 2,533 கோடி ரூபாயும், தமிழ் உட்பட 5 செம்மொழிகளுக்கும் சேர்ந்து 145 கோடி ரூபாய்தான் ஒதுக்கி இருக்கிறார்கள்” என்ற ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை அம்பலத்தில் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு விளக்கினார். அதில், “ஒரு மதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கின்றது” என்பதைச் சுட்டிக்காட்டி, “பன் மதங்கள், பல கலாச்சாரங்கள் இருக்கின்ற ஒரு நாட்டில் கலவரத்தை தூண்டும் முயற்சி இது” என்றும் கண்டித்தார். மேலும் அவர், வேட்பாளரின் தந்தை வணிகர் சங்க பொறுப்பாளர் விக்கிரம ராஜா அவர்களை நினைவூட்டி, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள இல்லத்தரசிகள் திட்டத்தைப் பற்றி பேசினார். அதாவது, இந்தத் திட்டமும் இல்லத்தரசிகளுக்கு மட்டும் பயன்படும் திட்டமாகவே பார்க்கப்படுவதையும், அதனுடைய இன்னொரு பக்கமாக வியாபாரிகளின் கண்ணோட்டத்தில் மிகச்சிறந்த திட்டமாகவும், உள்ளூர் பொருளாதாரம் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி அடையும் என்பதை, வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜா குறிப்பிட்டதை மக்களுடன் பகிர்ந்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களின் ஆக்கத்தையும், தாக்கத்தையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. பற்றிய விமர்சனங்களை முன்வைத்து, “திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடர்வதற்காக, விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.

கடும் கால் வலியுடன்
கழகத் தலைவர் தேர்தல் பிரச்சாரம்!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் 11.04.2026 அன்று வாக்கு சேகரிக்க நடைபெற்ற, வாகனப் பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, ஒரு சின்ன விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டு விட்டது. கடுமையான வலியுடனேயே அந்தக் கூட்டத்தில் சிறப்பாக உரையாற்றினார். உடனிருந்த மருத்துவர் ராகுல் ஆசிரியர் அவர்களை, பரிசோதித்து விட்டு மருந்து போட்டுவிட்டார். மருத்துவமனைக்கு செல்லலாம் என்று தோழர்கள் அவரிடம் கேட்டபோது, ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை’ என்று, கழகத் தலைவர் மறுத்து விட்டார். அடுத்த நாளும் (12.04.2026) அதே வலியுடன் நடக்க மிகவும் சிரமப்பட்ட நிலையில் இருந்தாலும், முகாமிட்டிருந்த இடத்திலேயே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அடுத்து கோபிசெட்டிபாளையத்தில் கொளப்பலூர் மற்றும் அந்தியூரில் முறையே என்.நல்லசிவம் மற்றும் எம்.சிவபாலன் ஆகிய தி.மு.க.வேட்பாளர்களை ஆதரித்து உற்சாகமாகப் பரப்புரையில் ஈடுபட்டார். கழகத் தோழர்கள் மற்றும் அந்தியூர் வேட்பாளர் ஆகியோர் அடுத்தடுத்து வலியுறுத்தியதன் காரணமாக, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, அந்தியூர் பரப்புரை கூட்ட நிகழ்வின் அருகிலேயே இருந்த ஜீவா மருத்துவமனையில், எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டது. பாதிப்பு ஏதுமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தோழர்கள் நிம்மதி பெருமூச்சுடன் பயணத்தை தொடர்ந்தனர்.

இந்நிகழ்வில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் தோழர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கழகத் தலைவரின உரையை கண்டும், கேட்டும் பயன் பெற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *