ஆஸ்திரேலிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்துக்குப் பாராட்டு!

4 Min Read
- Advertisement -

மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது!
ஆஸ்திரேலிய நியூசவுத் வேல்ஸ் நாடாளுமன்ற சட்ட மேலவையில்
தந்தை பெரியாருக்கும், அவரது சமூக சீர்திருத்தத்துக்கும் புகழாரம்!

நியூசவுத் வேல்ஸ், அக்.22 ஆஸ்திரேலிய நியூசவுத் வேல்ஸ் நாடாளுமன்ற சட்ட மேலவையில் தந்தை பெரியாருக்கும், அவரது சமூக சீர்திருத்தத்துக்கும் அங்கீகாரம்! பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்துக்குப் பாராட்டு!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் சட்ட மேலவை, தந்தை பெரியார் அவர்களையும், சமூகச் சீர்திருத்தத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளையும், ‘பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா’ (PATCA) அமைப்பின் முன்னெடுப்புகளையும் அங்கீ கரிக்கும் தீர்மானம் ஒன்றை கடந்த அக்டோபர் 13 அன்று நிறைவேற்றியது. ‘கிரீன்ஸ்’ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேட் ஃபேர்மன் முன்மொழிந்த இந்தத் தீர்மானம், ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான பெரியாரின் போராட்டம், பெண்களின் விடுதலைக்கான அவரது குரல், மற்றும் சமத்துவம், பகுத்தறிவு, மனித கண்ணியம் ஆகியவற்றின் மீதான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி அங்கீகரித்துள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவில் விளிம்புநிலை சமூகங்களுக்காக ஆஸ்திரேலிய பெரியார்– அம்பேத்கர் சிந்தனை வட்டம் ஆற்றி வரும் பணிகளையும் இது பாராட்டியுள்ளது.

இது தந்தை பெரியாருக்கும், திராவிட இயக்கத்துக்கும் கிடைத்துள்ள மிக முக்கியமான அங்கீகாரமாகும்.

கடந்த செப்டம்பர் 24 அன்று , காலை 10.36 மணியளவில் கேட் ஃபேர்மன் அம்மையார் தீர்மானத்தை முன்மொழிந்து ஆற்றிய உரை பின்வருமாறு:-

தலைவர் அவர்களே, அடுத்த அமர்வு நாளில் நான் பின்வரும் தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2026 செப்டம்பர் 20 அன்று, ஆஸ்திரேலியாவின் ‘பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம்’ (Periyar Ambedkar Thought Circle of Australia), பெரியார் ஈ.வெ. ராமசாமியின் 148 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, பரமட்டா பூங்காவில் (Paramatta Park) ‘சமத்துவ நடைப்பயணம்’ (Equality Walk) என்ற நிகழ்வை முதன்முதலாக நடத்தியது.

இந்த நடைப்பயணமானது, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் ஜாதி எதிர்ப்பு போதனைகளை ஏற்றுக்கொண்ட, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து நடைபெற்றது.

மேலும், இந்த அவை பின்வருவனவற்றையும் கவனத்தில் கொள்கிறது:

1925 இல், தற்போதைய கேரளாவில் ஜாதி அடிப்ப டையிலான ஒதுக்குதலுக்கு எதிராக நடைபெற்ற ‘வைக்கம் சத்தியாகிரகத்தில்’ பெரியார் ஈ.வெ. ராமசாமி பங்கேற்றதைத் தொடர்ந்து, ஜாதிப் படிநிலையைச் சவாலுக்குள்ளாக்கியும், சமூக சமத்துவத்தையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் அவர் ‘சுயமரியாதை இயக்கத்தை’ நிறுவினார்.

பெரியாரின் கருத்துகள் வர்க்கம், இனம் மற்றும் பாலினப் பாகுபாடுகள் சந்திக்கும் புள்ளியில் அமை கின்றன; அனைத்து மனிதர்களுக்கும் பிறப்பின் அடிப்படையில் பேதம் கூடாது என்றும், இத்தகைய அடையாளக் கூறுகளைச் சுற்றி சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது என்றும் அவர் வாதிட்டார்.

சுயமரியாதை இயக்கம் முதன்மையாகத் தமிழ் பேசும் பகுதிகளில் கவனம் செலுத்தியது. இருப்பினும், படிநிலை சார்ந்த அழுத்தங்களை எதிர்கொள்ளும் பல்வேறு இந்து சமூகங்களிலும் இது பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

கல்விச் சீர்திருத்தத்தில் பெரியார் ஆற்றிய தலை மைத்துவம்தான், 1951 இல் இந்தியாவின் முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குக் காரணமாக அமைந்தது. இதன் மூலம் சேர்க்கப்பட்ட 15(4) பிரிவு, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்குக் கல்வி இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்தது.

குழந்தைகளின் வளர்ப்பில் ஆண்களுக்கும் சமமான பொறுப்பு உண்டு என்ற கருத்து, இனப்பெருக்க உரிமைகளுக்கான பாதுகாப்பு மற்றும் பெண்களின் தன்னாட்சி ஆகியவை பெரியாரின் போதனைகளில் அடங்கும். சுயமரியாதையைப் பெறுவதற்கான அடிப்படை அம்சங்களாகவே அவர் இவற்றைக் கருதினார்.

இன்று ஆஸ்திரேலியாவில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு நிலவுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ‘பெரியார்– அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா’ வலியுறுத்தியது. இதன் விளைவாக, 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம், ஜாதிப் பாகுபாட்டை ஒரு வகை இனவெறியாக (racism) அங்கீகரித்தது.

2024 ஆம் ஆண்டில், ஜாதிப் பாகுபாட்டிற்கு எதிரான சட்டப் பாதுகாப்புகள் குறித்த ஆய்வை, இனவெறிக்கு எதிரான தேசியக் கட்டமைப்பில் ஒன்றாக அந்த ஆணையம் ஏற்றதையும் நினைவூட்டுகிறேன்.

இந்த அவை, விளிம்புநிலை சமூகங்களுக்காகக் குரல் கொடுத்து வரும் ‘பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா’ அமைப்பைப் பாராட்டுகிறது; அத்துடன் சுயநிர்ணய உரிமை, சமத்துவம் மற்றும் சுயமரியாதை ஆகிய முக்கியமான விழுமியங்களை அங்கீகரிக்கிறது” என்னும் தனிநபர் உறுப்பினர் தீர்மானத்தினை (எண் 3721) முன்மொழிந்தார் .

இந்தத் தீர்மானம் 13.10.20206 அன்று கவ னத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது அவைத்தலைவர் பென்பிராங்கிளின், “திருமதி ஃபேர்மேன் முன்மொழிந்து, பரிசீலனைக்கு வருகிறது. இதற்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா?” என்று கேட்டார். பின்னர், “எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆதரவு அதிகம், ஆதரவு அதிகம்” என்று கூறி, “மாண்புமிகு உறுப்பினர் தொடர்ந்து பேசலாம்” என்று திருமதி ஃபேர்மெனைப் பேச அழைத்தார். அவர் முறைப்படி அதனை முன்மொழிவதாக அறிவித்தும், தீர்மானம் பேராதரவுடன் பிற்பகல் 12.39 மணியளவில் நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியாருக்கும், சுயமரியாதை இயக்கத்துக்கும் அதன் நோக்கங்களுக்கும் கிடைத்துவரும் உலகளாவிய அங்கீகாரங்களுள் இது குறிப்பிடத்தக்கதாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *