கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மீது 8,630 புகார்!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

தகவல் அறியும் உரிமை ஆணையம் தரும் அதிர்ச்சித் தகவல்!

புதுடில்லி, ஜூலை 30- கடந்த 10 ஆண்டுகளில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது 8,630 புகார்கள் பெறப் பட்டுள்ளன என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் உச்சநீதிமன்ற கூடுதல் பதிவாளர் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 25 உயர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை, இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கு நீதி பரிபாலனை வழங்கி வருகின்றன.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை தவிர்த்து 34 பேர் நீதிபதிகளாக உள்ளனர். அரசு ஊழியர்கள் மீது புகார் அளித்தால், விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவது போன்று உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது அளிக்கும் ஆதாரப்பூர்வமான புகார்கள் குறித்தும் முறையான விசாரணை நடைபெறும்.

புகார்கள் மீது வலுவான ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் நீதிபதிகள் குழு மூலம் இந்த விசாரணை நடைபெறும். நீதிபதிகள் குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பதவிநீக்கம் போன்ற அதிகபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு எனில், நாடாளு மன்றத்தில் பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படுவார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் பணியாற்றிய நீதிபதிகள் பலர் கடுமையான குற்றச்சாட்டின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது எத்தனை புகார்கள் வந்துள்ளன? என நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக் கட்டளை அமைப்பை நடத்தி வரும் பரஞ்சோதிபாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டுள்ளார்.

அதற்கு உச்சநீதிமன்ற மத்திய பொதுத்தகவல் அலுவலரான கூடுதல் பதிவாளர் எஸ்.கே.காமேஷ் நூகலா பதில் அளித்துள்ளார்.

அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது 8,630 புகார்கள் பெறப்பட்டது தெரியவந்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு அதிகபட்சமாக 1,170 புகார்கள் பெறப்பட்டுள்ளது என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பரஞ்சோதிபாண்டியன் கூறும்போது, ‘சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கையும், அடைக்கலமும் நீதிமன்றம்தான். சமூகத்தில் ஒடுக்கப்படும் எளிய மக்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடும் எளிய மனிதர் களுக்கும் நீதித்துறை ஒரு அரணாக செயல்படுகிறது.

இத்தகைய நீதித்துறையில் உச்சபட்ச அதிகாரத்தை கொண்டிருக்கும் நீதிபதிகள் மீது இவ்வளவு புகார்கள் வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *