சென்னை, அக்.21 நேற்று (20.10.2026) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், அதுகுறித்து தனது சமூக வலை தளப்பதிவில் சமூகப் பிணி களையப் பெரியாரியத்தைத் தொடர்ந்து பரப்புவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவின் விவரம் வருமாறு
“ஆசிரியர் அய்யா அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்வியுற்றதும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
அடிக்கடி தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதையும், ஓய்வில்லாமல் உழைப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டுமென உரிமையோடு அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
‘‘ஆக்ஸ்போர்டில் தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து உலக அளவில் பெரியாரியத்தை நிலைநிறுத்தியது போன்றே, #DravidianModel அரசால் உருவாக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் கோவைக்கே புதிய அடையாளமாக நிலைக்கும்’’ என நிறைவோடு வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
சமூகப் பிணி களையப் பெரியாரியத்தைத் தொடர்ந்து பரப்புவோம்!
