கொலம்பியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து: 14 பேர் உயிரிழப்பு!

2 Min Read
- Advertisement -

நரினோ, அக். 20- தென்மேற்கு கொலம்பியாவில் முறையான பாதுகாப்பு வசதிகள் எதுவுமின்றி இயங்கி வந்த சட்டவிரோத தங்கச் சுரங்கம் ஒன்று திடீரென சரிந்து விபத்துக்குள்ளானதில், 14 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொலம்பியா நாட்டின் நரினோ மாகாணத்திற்கு உட்பட்ட சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகராட்சிப் பகுதியில் உள்ள கிராமப்புற சம்பெரோ செக்டாரில் உள்ள இந்த சுரங்கம் இடிந்து விழுந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாக நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழுவதும் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொலம்பியாவின் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் இதுபோன்ற முறைசாரா, கட்டுப்பாடற்ற மற்றும் சட்டவிரோதமான சுரங்கத் தொழில்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பெரிய அளவில் முதலீடுகளோ அல்லது முறையான பாதுகாப்பு உள்கட்டமைப்புகளோ இல்லாமல் தற்காலிக முறையில் நடத்தப்படும் இத்தகைய சுரங்கப் பணிகளால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு அப்பாவித் தொழிலாளர்களின் உயிர்கள் பறிபோவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

இதற்கு முன்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே நரினோ மாகாணத்தில் உள்ள பாலிகார்பா நகரில் செயல்பட்டு வந்த மற்றொரு சட்டவிரோத சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சில மாத இடைவெளியில் மீண்டும் அதே மாகாணத்தில் பெருமளவிலான உயிர்ப்பலி நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காசாவில் 5 லட்சம் பேருக்கான
உதவிகளைக் குறைத்த அய்.நா

காசா, அக். 20- நிதிப் பற்றாக்குறை காரணமாக காசாவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை உலக உணவுத் திட்டம் (WFP) வெகுவாகக் குறைத்துள்ளது. இதனால் அங்கு பசியில் வாடும் மக்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்குப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா முனையில் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதில் அய்.நா.வின் உலக உணவுத் திட்டம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தினால், காசாவுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு உதவிகளை அந்நிறுவனம் குறைத்துள்ளது.

இதன் காரணமாக, இதுவரை 1.6 மில்லியன் (16 லட்சம்) பேருக்கு வழங்கப்பட்டு வந்த உதவி, தற்போது 1.1 மில்லியன் பேருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாள்தோறும் வழங்கப்பட்டு வந்த சமைக்கப்பட்ட உணவுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதால், காசா மக்கள் உணவுப் பற்றாக்குறையையும் பசியையும் எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பன்னட்டு நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உடனடியாக நிதியுதவி அளித்தால் மட்டுமே காசாவில் ஏற்பட்டுள்ள இந்த தீவிர உணவு நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்று உலக உணவுத் சங்கம் எச்சரித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *