சென்னை, அக். 20- சென்னை யில் பட்டப்பகலில் ரூ.36 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பெண் ஊழியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொளத்தூர் சாஸ்திரி நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்த கந்தன் (52), பாரிமுனை வரதமுத்தப்பா தெருவில் உள்ள மொத்த விலை மளிகைக்கடையில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி மதியம், முந்தைய நாள் வியாபார மான ரூ.36 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக, கடை ஊழியர் கணேசனுடன் பணப்பையை எடுத்துக்கொண்டு பாரிமுனை குடோன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பைக்குகளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கந்தனை தலைக்கவசத்தால் தாக்கினர். தொடர்ந்து கணேசனைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.36 லட்சம் அடங்கிய பணப்பையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்கு தலில் ரத்தக் காயமடைந்த கந்தன், ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பூக்கடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வர்களை அடையாளம் கண்டனர். இதையடுத்து, வழிப்பறியில் ஈடுபட்ட சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாலாஜி (28), பிராட்வேயைச் சேர்ந்த சீனிவாசன் (29), கல்யாணபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (30), விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த ஜெகன் (19), தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ஷாலினி (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட பணத்தில் ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது. மேலும், குற்றச்செயலுக்கு பயன்படுத்தியதாக ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப் பட்டது. காவல் துறையினர் விசாரணையில், ஷாலினி ஏற்கெனவே சம்பந்தப்பட்ட மளிகைக் கடையில் வேலை செய்து, சில ஆண்டுகளுக்கு முன்பு பணியை விட்டு நின்றவர் என்பது தெரியவந்தது. மேலும், இவர்தான் வழிப்பறிக்கு மூளையாக செயல்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மற்றவர்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
