சென்னை, அக்.13- தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தொடர்ந்து மின்வெட்டு பிரச்சினைகள் நீடிக்கின்றன. தொடக்கத்தில் கிராமங்களில் தொடங்கிய மின்வெட்டு, நகரங்களுக்கும் நீண்டது.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆய்வு செய்யும் இடங்கள், முக்கிய அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் என மின்வெட்டுப் பிரச்னை நாளுக்குநாள் பெரிதானது. இந்த நிலையில், நேற்று (அக்.12) தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட மின்தடையால், முதல் தளத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின. இது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அரசு மீதான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
தலைமைச் செயலகத்திலும் மின்வெட்டு
இந்த நிலையில், தமிழ்நாடு மின்வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில்,“சென்னை தலைமைச் செயலகத்தின் முக்கிய கட்டடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் மட்டும் நேற்று (12.10.2026) காலை மின் வழங்குவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டது. மற்ற அனைத்து தளங்களிலும் மின்சாரம் வழங்குவது எவ்விதத் தடையுமின்றி இயல்பாக இருந்தது. தலைமைச் செயலக வளாகத்திற்குள் உள்ள மின்சாரம் வழங்கும் கட்டமைப்புகள் பொதுப்பணித் துறையின் (கட்டடங்கள்) பராமரிப்பில் உள்ளன.
முதல் தளத்திற்கு மின்சாரம் வழங்கும் நான்கு மின் சுவிட்சுகளில், ஒரு சுவிட்சின் பி-பேஸ் (B-Phase) மின்சாரம் வழங்குவதில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மின் சுவிட்சில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்து, மின்சாரம் வழங்குவதை மீண்டும் சீரமைத்தனர். இதனையடுத்து, காலை 11.25 மணியளவில் முதல் தளத்தில் இயல்பான மின்சாரம் வழங்குவதை முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தின் அனைத்து தளங்களிலும் தற்போது மின்சாரம் வழங்குவது சீராக உள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
