விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

3 Min Read
- Advertisement -

சென்னை, அக்.20- அரசு பொது விடுமுறை மற்றும் அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் விடுமுறை நாள்களில் தனியார் பள்ளிகள் எவ்விதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது எனத் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மெட்ரிக், சிபிஎஸ்இ, அய்சிஎஸ்இ மற்றும் நர்சரி, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் என அனைத்து வகை தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாள்களில் பள்ளி வளாகத்தில் நேரடி வகுப்புகளோ அல்லது வீடுகளில் இருந்தபடியே கற்கும் இணையவழி சிறப்பு வகுப்புகளோ நடத்தக் கூடாது எனவும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) வாயிலாக இந்த உத்தரவு கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் ஓய்வை கருத்தில் கொண்டு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

விடுமுறை நாள்களிலும் மாணவர்களுக்கு தொடர் கல்விச் சுமை அளிக்கும் வகையில் செயல்படும் பள்ளிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறிச் சிறப்பு வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் மீண்டும் எச்சரித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுச் சிகிச்சை மறுப்பு!

கொதிக்கும் ஊழியர் சங்கம்

சென்னை, அக்.20- “காப்பீட்டுத் திட்டத்தை புதிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து அமல்படுத்துவதால், தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற முடியாமல் அல்லல்பட்டு கொண்டிருக்கிறார்கள்” என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் லியாக்கத் அலி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்  ”கடந்த மூன்று நாள்களாக புதிய நல்வாழ்வுக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்து வருகின்றன.

இது தொடர்பாக மருத்துவமனையில் விசாரித்த பொழுது., கீழ்க்காணும் விவரங்களை தெரிவித்தனர். அதாவது, அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை யுனைடெட் இந்தியா நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. முந்தைய திட்டத்தில் யுனைடெட் இந்தியா நிறுவனம், எம் டி இந்தியா மற்றும் மெடி அசிஸ்ட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து இத்திட்டத்தை அமல்படுத்தி வந்தது.

தற்போது எம்டி இந்தியா நிறுவனம் அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ், வீடால் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் இந்தியா என்ற நிறுவனங்கள் மூலம் இத்திட்டத்தை அமல்படுத்த முயற்சி எடுத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

காப்பீட்டுத் திட்டத்தை புதிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து அமல்படுத்துவதால், தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற முடியாமல் அல்லல்பட்டு கொண்டிருக்கிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

புதுவண்ணையில்
24 மணி நேர மின்தடை

மக்கள் சாலை மறியல்

தமிழ்நாடு

சென்னை, அக். 20- புதுவண்ணையில், 24 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பொன்னுசாமி தெரு, செரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (19.10.2026) மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மின்சாரம் வழங்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் வள்ளலார் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மின்தடையால் கொசுத்தொல்லை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படு வதாகவும், புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *