குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதற்கு மாணவர்களை காரணம் சொல்வதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம்

- Advertisement -

மதுரை, அக். 17- திண்டுக்கல் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததற்கு மாணவர்களை காரணம் சொல்வதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் தண்ணீர்த் தொட்டிக்குள் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தனி குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘தண்ணீர் தொட்டியில், 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விளையாட்டுத்தனமாக மனிதக் கழிவு கலந்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், “குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பது, வாடிக்கையாக உள்ளது. அதற்கு மாணவர்களை காரணம் காட்டுவது ஏற்கத்தக்கதாக இல்லை. விசாரணையின் நிலை என்ன என்பது குறித்த நிலை அறிக்கையை திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் தாக்கல் செய்ய வேண்டும்.

இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு பள்ளிகளில், குறிப்பாக ஆதி திராவிட பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த இயலுமா? அதற்கு ஆகும் செலவு என்ன என்பது குறித்து அரசிடம் தகவல் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தமிழ்நாட்டில் தெளிவில்லாத அரசு நிர்வாகம் அரங்கேறுகிறது: துரைமுருகன் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு

வேலூர், அக். 17- தமிழ்நாட்டில் தெளிவில்லாத அரசு நிர்வாகம் நடைபெற்று வருகிறது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று (16.10.2026) கூறியதாவது:

இதுவரை எந்த மாநிலமும் 35 ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்கியது இல்லை. நம்மிடம் உள்ள மின் நிலையங்களில் ஏன் மின் உற்பத்தியை செய்யவில்லை. இதில், ஏதாவது உள்ளடி உண்டா என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

முதலமைச்சர் வெளிநாடு செல்கிறார். வெளிமாநிலம் செல்கிறார். ஆனால், எந்தத் திட்டமும் தமிழ்நாட்டிற்கு வந்ததுபோல் தெரியவில்லை. அரசாங்கப் பணத்தை தொடமாட்டேன். தொட்டவர்களையும் விடமாட்டேன் என்றுதான் முதலமைச்சர் விஜய் சொன்னாரே தவிர, மற்றவர்களிடம் பணம் வாங்க மாட்டேன், வாங்கியவர்களை விடமாட்டேன் என சொன்னாரா?

நான் யாரிடத்திலும் பணம் வாங்க மாட்டேன். வாங்கியவர்களையும் விட மாட்டேன் என சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். சினிமா எடுக்கும்போது முதலில் ஒரு தலைப்பு வைப்பார்கள். பிறகு வேறொரு தலைப்பு வைப்பார்கள். அதுபோன்றுதான் வெற்றிப் பயணம் திட்டம். தெளிவில்லாத ஓர் அரசு நிர்வாகம் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *