1943 இல் தந்தை பெரியார் கணித்த ‘‘இனி வரும் உலகம்’’ சிந்தனைகள் இதோ நம் கண் முன்னே!

7 Min Read
- Advertisement -

செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்பைக் குறைக்குமா? மகிழ்வாக வாழும் நேரத்தை அதிகரிக்குமா?
விஞ்ஞானம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்தே தீரும்! அதற்கேற்றாற்போல சமூகம் தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும்!

செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்பைக் குறைக்குமா? மகிழ்வாக வாழும் நேரத்தை அதிகரிக்குமா? விஞ்ஞானம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்தே தீரும்! அதற்கேற்றாற்போல சமூகம் தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும்! 1943 இல் தந்தை பெரியார் கணித்த ‘‘இனி வரும் உலகம்’’ சிந்தனைகள் இதோ நம் கண் முன்னே! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அமேசான் தளத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

உலகப் புகழ்பெற்ற இணையதள வணிக நிறுவனமான அமேசான் தளத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் கடந்த வாரம் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில், “செயற்கை நுண்ணறிவால் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வேலை செய்யும் சூழலும், ஒரே ஒரு நபர் மட்டும் வருமானம் ஈட்டும் குடும்ப அமைப்புகளும் உரு வாகப்போகின்றன’’ என்றும் கூறியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும். இதனால், வேலை இழப்பு ஏற்படுமோ என்று எதிர்மறையாகச் சிந்திக்காமல், நேர்மறையான பார்வையில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதுகிறோம்.

‘‘சிலர், ‘வாரத்திற்கு மூன்று நாட்கள் வேலை செய்தாலே என் குடும்பத்தைக் காப்பாற்றிவிட முடியும்’ என்று முடி வெடுப்பார்கள். குடும்பத்தில் இருவருமே வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்காது. விரும்பினால் வேலை செய்யலாம், இல்லையென்றால் ஒருவர் வேலையிலிருந்து விலகிக்கொள்ளலாம். பொருளாதாரத்தில் உற்பத்தித்திறன் உயர்வதால், மக்கள் இரண்டு வேலைகளைச் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. எனவே, பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது கடினமாகிவிடும். பொருளாதாரத்தில் உற்பத்தித்திறன் அதிகரிப்பதன் அர்த்தம் இதுதான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். (https://www.foxnews.com/media/jeff-bezos-reveals-his-vision-americas-next-frontier-ai-moon)

அதாவது, செயற்கை நுண்ணறிவு காரணமாக, வேலை இல்லாத் திண்டாட்டம் ஏற்படும் என்பதற்கு மாறாக, செயற்கை நுண்ணறிவு காலத்தில் செல்வமும், வளங்களும் பெருகும் என்பதால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள தாகவும் அவர் கூறுவது பெரும்பாலோருடைய அச்சத்துக்குப் பதிலாக அமைந்துள்ளது.

நாம் தான் உரத்துக் கூறினோம்!

‘‘அறிவியலின் வளர்ச்சிகளை, மனிதகுலம் பயன்படுத்தி மேம்பட வேண்டும் என்பதே பகுத்தறிவு! ஒரு போதும், அதனைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. எத்தகைய பிரச்சினையையும் சந்தித்து, அதை விஞ்சும் ஆற்றல் மனிதகுலத்துக்கு உண்டு என்பதை வரலாறுதோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த நூற்றாண்டில் கணினி பெருமளவு புழக்கத்துக்கு வந்தபோது கூட, இது வேலைவாய்ப்பை இல்லாமல் ஆக்கி விடும்; எனவே, கணினி மயமாக்கக் கூடாது என்று சிலர் கருதினர். அப்போதும் கணினி என்பது அறிவியல் வளர்ச்சி, அதை எதிர்ப்பது அறிவற்ற செயலாகாது; அறிவியலை நாம் வளைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதன் வளர்ச்சியைத் தடுக்கவியலாது” என்பதைப் பெரியார் கண்ணாடி அணிந்து நாம் தான் உரத்துக் கூறினோம்.

கணினி வேலைவாய்ப்பைப் பெருக்கியதா? வேலை யில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கியதா என்று அதன் பிறகு உலகம் உணர்ந்தது. கணினி அறிவியலின் வளர்ச்சி பெரும் புரட்சியையே மனித குலத்தில் தோற்றுவித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில்,  பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த பிள்ளைகள் உலகம் முழுக்க வெற்றிக் கொடி நாட்டுவதற்கு கணினி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் பற்றிக் கொண்டதே பெரும் காரணமாயிற்று.

இன்றைய செயற்கை நுண்ணறிவு குறித்த அச்சமும் அத்தகையதே! தொடக்கத்தில் இதனால் சில இடையூறுகள் இருக்கலாம். வேலைக் குறைப்புகளும் கூட நடக்கலாம். அவற்றை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், மனித குலத்தின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் இதனையே நாம் வாய்ப்பாகக் கருத வேண்டும்.

“இனி வரும் உலகம்!”

இயந்திரங்கள் பெருகிய காலத்தில், இதே போல வேலைக் குறைவு என்ற பிரச்சினை எழுமோ என்று எல்லோரும் அஞ்சி னார்கள். பகுத்தறிவுப் பகலவனும், காலத்தைக் கடந்து சிந்திப்பவருமான நமது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்,  83 ஆண்டுகளுக்கு முன்பு தமது “இனி வரும் உலகம்” நூலில் இதனைக் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள், இன்றும், நாளையும் மனித குலத்துக்கு உரியது என்பதை இந்தச் சூழலில் நம்மால் பொருத்திப் பார்க்க முடிகிறது.

இதோ நம் அறிவு ஆசான் பேசுகிறார்:

“…நுட்பமான இயந்திரங்கள் இப்போதே கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் போது, இனி வருங்கால இயந்திர உலகம் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் வேண்டுமா! இம்மாதிரியாகவே வாழ்வுக்கு வேண்டிய எல்லாத் தேவைத் துறைகளிலும் இயந்திர சாதனங்கள் பெருகும்போது நாட்டு மக்களில் ஒவ்வொருவரும் வருஷத்திற்கு இரண்டு வாரம் வேலை செய்வதனாலேயே மக்களுக்கு அவசியமான எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகிவிடலாம்.

வேலை இல்லாமற் போகாது

ஆகவே, ஓர் ஆண்டில் மீதியுள்ள 50 வாரங்களும் மக்களைச் சும்மா, சோம்பேறிகளாய் இருக்க செய்யுமே என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை.

வாழ்க்கைச் சாதனங்களுக்கு எப்படிக் காலமும், யோசனையும், கண்டுபிடிப்புகளும் தேவை இருக்கிறதோ அதுபோலவே மக்களின் ஓய்வுக்கும், உடற்பயிற்சிக்கும், மகிழ்ச்சிக்கும், போக போக்கியத்துக்கும் யோசனைகளும், ஆராய்ச்சிகளும், சாதனங்களும், அவற்றைச் சுலபமாகச் செய்ய வசதிகள் கண்டுபிடிப்பதும், அவை நாளுக்கு நாள் மாற்றமடைவதும் ஆகிய காரியங்களில் மீதி நாள்கள் செலவழிக்கப்படவேண்டி இருக்கும்.

அக்கால நிலை நாம் வரையறுக்க முடியாத அற்புதங்க ளையும், அதிசயங்களையும் கொண்டிருக்குமென்று சொல்லுவது, மிகைபடச் சொன்னதாக ஆகாது. ஆதலால் மக்கள் குறிப்பாக, அறிவாளிகள், சிந்தனையாளர்கள், முற்போக்கில் கவலை உள்ளவர்கள் ஆகியவர்களுக்கு இவற்றின்மூலம் சதா வேலை இருந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட வேலைகள் இன்று உள்ளதுபோல் கூலிக்கு வேலை செய்வது போலவோ, இலாபத்துக்கு வேலை செய்வது போலவோ இல்லாமல் உற்சாகத்துக்காகவும், போட்டிப் பந்தய உணர்ச்சி போன்ற தூண்டுதலுக்காகவும் ஊக்கத்துடன் வேலை செய்வதாக இருக்கும்.

அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனது வாழ்நாளில் தன்னை என்ன காரியத்தைச் செய்து முடித்து உலகுக்குப் பயன்படச் செய்துகொள்ளுவது என்ற கருத்தே வளரும்.

சோம்பேறிகள்

இப்படியானால் சோம்பேறிகள் வளர்ந்து விட மாட்டார்களா என்று கேட்கலாம். இப்படிப்பட்ட காலத்தில் சோம்பேறிகள் இருக்க முடியாது; இருப்பார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், இவர்களால் சமூகத்துக்குத் தேவையான எந்த வேலையும் குறைந்து போகாது. அதனால் ஒரு கெடுதியும் ஏற்பட்டுவிடாது. ஆதலால் அப்படிப்பட்ட இவர்கள் வேலையில் ஈடுபடுவதைவிட சும்மா இருந்து சாப்பிடுவது அவர்களுக்கே கஷ்டமாயிருக்கும்.

பொதுவாக அந்தக் காலத்தில் மனிதர்கள் உண்மை யிலேயே தங்களுக்கு “வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே, வீணாக நேரம் கழிகிறதே” என்று வேலைக்குப் போராடிக் கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு இச்சோம்பேறிகளால் அனுகூலம் ஏற்படுமே தவிர, கவலை இருக்காது. எல்லா மக்களுக்கும் அவர்கள் ஆசை தீர வேலை கொடுக்க முடியாத காலமாக இருக்குமே ஒழிய அந்தக் காலம் வேலைக்கு ஆள் தேட வேண்டியதாகவோ, அவன் வேலை செய்யவில்லை இவன் வேலை செய்யவில்லை என்று கருதுவதாகவோ, குறை கூறுவதாகவோ இருக்காது.

“இழிவான” வேலை

“இழிவான” வேலைகளுக்கு ஆள் கிடைக்குமா? என்ற கேள்வி பிறக்கலாம். இழிவான வேலை என்பது வருங்காலத்தில் இருக்க முடியாது. சரீரத்தால் செய்யப்பட வேண்டிய எல்லாக் காரியங்களும் அநேகமாக இயந்திரங்களாலேயே செய்யும் படியாக ஏற்பட்டுவிடும். கக்கூஸ் எடுக்க வேண்டியதும், துலக்க வேண்டியதும், வீதி கூட்ட வேண்டியதும் கூட இயந்திரத்தினாலேயே செய்து முடித்துவிடும்… மனிதனுக்கு பாரம் எடுக்கவேண்டியதோ, இழுக்க வேண்டியதோ ஆன காரியங்கள் இருக்கவே இருக்காது. அக்காலத்தில் கவுரவம் வேண்டும் என்பவர்கள் பொதுஜன நன்மை சவுகரியம் ஆகியவைகளைச் செய்ய வேண்டி இருக்கும் என்பதோடு, அதில் ஏற்படும் போட்டியினால் “இழிவான” வேலைக்கு எப்போதும் கிராக்கி இருந்து கொண்டே இருக்கும்.

கவிகளும், இதர சித்திரக்காரர்களும், நாவலர்களும், சிற்பிகளும் போட்டி போட்டுக்கொண்டு புதிய உலகை (தோற்றத்தை) உண்டாக்குபவர்களாகவே இருப்பார்கள். திறமையானவர்களுக்குத் தான் வேலையும், மதிப்பும் கிடைக்கும்; மற்றவர்கள் அலட்சியப்படுத்தப்படுவார்கள்.”

தந்தை பெரியாரின் முன்னோக்கு!

ஆம், உண்மை தான் தோழர்களே, நம்புங்கள்! 1943 ஆம் ஆண்டு தந்தை பெரியார் பேசிய உரைதான் இது! இன்றைய சூழலுக்கும் அச்சு அசலாய் எப்படிப் பொருந்திப் போகிறது பாருங்கள்.

அன்று தந்தை பெரியார் சொன்னதைத்தான், இன்று புகழ் பெற்ற அறிவியலாளர்களும், செயற்கை நுண்ணறிவு விற்பன்னர்களும் கூறுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக் காரணமாக மனிதர்களுக்கு வேலையில்லாவிட்டால் என்ன ஆவார்கள் என்பது குறித்து ஓராண்டுக்கு முன்பு, ‘‘மக்களுக்கு அதிகச் செழிப்பும், அதிக நேரமும், வளங்களும், ஆற்றலும், திறனும் இருக்கும் இந்த உலகில், குடும்பமும், சமூகமும்தான் நம்மை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. நாம் மீண்டும் அதனிடம் திரும்புவோம் என்று நம்புகிறேன்’’ என்று புகழ்பெற்ற ‘ஓபன் ஏஅய்’ செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மென் தெரிவித்திருந்தார். (https://www.businessinsider.com/sam-altman-agi-prediction-children-population-growth-families-community-openai-2025-8)  தற்போதைய ஜெப் பெசோசின் (அமேசான்) கருத்தும் இதையே உறுதி செய்கிறது.

‘தவிர்க்க முடியாததை ஏற்பதே பகுத்தறிவு’ என்று பல நேரங்களில் தந்தை பெரியாரின் சிந்தனையை நாம் சுட்டிக்காட்டுவது உண்டு. அறிவியலின் வளர்ச்சியும் அப்படித்தான்! அதனை ஏற்றுக் கொண்டு, அதனைப் படிக்கல்லாக்கி வளர்வதே மனித குலத்தின் சிறப்பு. இந்த உண்மையைத் தனது பகுத்தறிவால் உணர்ந்தே தந்தை பெரியார் ‘இனி வரும் உலகம்’ நூலில் மிக விளக்கமாக இப் பகுதியைக் குறித்துப் பேசியுள்ளார்.

பெரியாரின் மண்டைச் சுரப்பு இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மனித குலத்துக்கு வழிகாட்டும்!

எண்ணி எண்ணி வியக்கிறோம். அவரின் பட்டறிவும், பகுத்தறிவும், ஒப்புயர்வற்ற சுயசிந்தனையும் எத்தகையவை என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று பகர? அவரின் மண்டைச் சுரப்பு இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மனித குலத்துக்கு வழிகாட்டும் என்பது நொடிதோறும் நிறுவப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அதை உலகெங்கும் கொண்டு செல்வதற்கான பாதை யைத்தான் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். “பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்” என்பது பெரியாருக்காக அல்ல; நமக்காக அல்ல! மனிதகுலத்தின் மேன்மைக்காக!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை        

17.10.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *