புதிய முதலமைச்சரும், பொதுப் பணித் துறையும்  விரைந்து ‘பரிகார’ நடவடிக்கையில் இறங்கி,  பழையபடி இருக்கும் நிலையை ஏற்படுத்தவேண்டும்!

6 Min Read
* கன்னியாகுமரியில் கண்ணாடிப் பாலம் கட்டியது தமிழ்நாடு அரசு; 
அதைக் காண  மக்களிடம் பணம் வசூலிப்பது ‘விவேகானந்தா கேந்திரா’வா?
* வரலாற்றுச் சிறப்புமிக்க திருவள்ளுவர் சிலையின் முக்கியத்துவத்தைக் 
சீர்குலைக்கும் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு –

கன்னியாகுமரியில் கண்ணாடிப் பாலம் கட்டியது தமிழ்நாடு அரசு; அதைக் காண மக்களிடம் பணம் வசூலிப்பதுவிவேகானந்தா கேந்திராவா? வரலாற்றுச் சிறப்புமிக்க திருவள்ளுவர் சிலையின் முக்கியத்துவத்தைக் சீர்குலைக்கும் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்குதமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரும், பொதுப் பணித் துறையும் விரைந்துபரிகாரநடவடிக்கையில் இறங்கி, பழையபடி இருக்கும் நிலையை ஏற்படுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்

அவரது அறிக்கை வருமாறு:

கன்னியாகுமரி முனையிலுள்ள திருவள்ளுவர் சிலை போல். கருங்கல்லால் ஆன சிலை உலகில் எங்குமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடல்நீர் மட்டத்திலிருந்து 30 அடி பாறை மீதான இச்சிலையின் மொத்த எடை 7,000 டன் ஆகும். பீடத்தோடு  சேர்த்து இச்சிலையின் உயரம் 133 அடியாகும். பீடத்தின் உயரம் அறத்துப்பால் அதிகாரங்களை மனதிற் கொண்டு 38 அடியும், பொருட்பால் / காமத்துப்பால் ஆகிய இரண்டு அதிகாரங்களின் அடிப்படையில் 95 அடி உயரமும் ஆக மொத்தம்  133 அதிகாரங்களைக் குறிக்கும் வண்ணம்  133 அடி உயரத்தில் ‘சிற்பி கணபதி’ அவர்களால்  கம்பீரமாக இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது. உப்புக் காற்று இச்சிலையை அரிக்காமலிருக்க அவ்வப்பொழுது வேதியல் கலவைப் பூச்சுப் பூசிப் பாதுகாக்கப்படுகிறது.

சிலையின் 130 அடி உள்ளீடற்று அமைக்கப்பட்டு  இருப்பதால், கடுமையான கடற்காற்றும் சிலை யைப் பாதிக்காதபடி தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.  2004 ஆம் ஆண்டில்  மிகக்கடுமையான சுனாமி அலைகள் தாக்கிய பொழுதும் திருவள்ளுவர் சிலையை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் ‘சுதந்திர தேவி’ சிலைக்கு இணையான முக்கியத்துவம் உடையது!

2000 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் திறக்கப்பட்ட குமரிமுனை திருவள்ளுவர் சிலை,  அமெரிக்காவின் ‘சுதந்திர தேவி’ சிலைக்கு இணையான முக்கியத்துவம் உடையது. இதனால் கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் பாறையின் முக்கியத்துவம் குறைவதாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் எண்ணி அதற்கேற்பக் காய்களை நகர்த்தி வருகின்றது. இதனால் திருவள்ளுவர் சிலை  புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறது.

தொடக்கம் முதலே திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டவுடனேயே, ‘கரையிலிருந்து திருள்ளுவர் சிலைக்கு நேரடியாகப் படகுப் போக்குவரத்து  தேவை’ எனத் தமிழ் ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பாறைகள் இருக்கின்றன என்பன போன்ற ஒரு சில காரணங்களைக் கூறிப் படகுப் போக்குவரத்து, கரையிலிருந்து நேரடியாக விவேகானந்தர் பாறைக்குச் செல்லுமாறு  அமைக்கப்பட்டது. அதன் பிறகு விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குப் படகு செலுத்தப்பட்டது. சிறிது காலத்தில் அதுவும் நிறுத்தப்பட்டது. இதன் மூலம் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது. விவேகானந்தர் பாறையில் இருந்தபடியே வள்ளுவர் சிலையைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கை புறக்கணிப்பு!

அடுத்து,  விவேகானந்தர் பாறையையும், திருவள்ளு வர் சிலையையும் இணைக்கும் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்ட பொழுது, கரையில் இருந்து நேரடியாகத் திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடிப் பாலம் சென்றடையும் வண்ணம் படகுப் போக்குவரத்தினை மாற்றி அமைக்குமாறு  மீண்டும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

தி.மு.க. ஆட்சியில் இல்லாத போதெல்லாம் வள்ளுவர் கோட்டம் புறக்கணிக்கப்படுவது போல, திருவள்ளுவர் சிலையும் புறக்கணிக்கப்பட்டது.

கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தபோதுதான்,  விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு, எப்படியும் வள்ளுவர் சிலைக்குப் போவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

இது என்ன நியாயம்?

கண்ணாடிப் பாலத்தைக்  கட்டியமைக்கத் தமிழ்நாடு அரசு ரூ.49 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஆனால், இப்பொழுது விவேகானந்தர் பாறையிலிருந்து கண்ணாடிப் பாலத்தைக் காண ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 30 அய் விவேகானந்தா கேந்திரா அமைப்பு  வசூலித்து வருகிறது. கண்ணாடிப் பாலம் கட்டியது தமிழ்நாடு அரசு. அதைக் காண மக்களிடம் பணம் வசூலிப்பது விவேகானந்தா கேந்திரா! எப்படி இருக்கிறது நியாயம்?

இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வந்தது. அந்தப் பரபரப்பில் யாரும் கவனிக்க மாட்டார்கள் என எண்ணி,  மிகவும் இரகசியமாகத் திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கான படகுத் துறை சிதிலமடைந்து விட்டது எனக் காரணம் காட்டி அதை இடித்துத் தள்ளிவிட்டனர்.

இனி விவேகானந்தர் பாறைக்குச் செல்லாமல், திருவள்ளுவர் சிலைக்கு யாரும் செல்லவே முடியாது. மேலும் சிலைக்குப் படகுப் போக்குவரத்து இயக்குவது சாத்தியமில்லை  என்பதற்கு ‘மொக்கையான’ கார ணங்கள் சொல்லப்படுகின்றன.

இத்தகைய நடவடிக்கைகள் தற்செயலானவை அல்ல! திருவள்ளுவர் சிலைக்கு  இருக்கும் முக்கியத்துவத்தை முற்றிலும் குறைக்கும் செயலாக  இது இருக்கிறது என நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது.

தமிழ்நாடு அரசு உடனடியாகத்
தடை விதிக்க வேண்டும்!

எனவே, கண்ணாடிப் பாலத்தைக் காண்பதற்காக நியாயமற்ற வகையில், மக்களிடமிருந்து விவேகானந்தா கேந்திரம் பணம் வசூலிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.  கண்ணாடிப் பாலத்தைப் பராமரிக்கும் பொறுப்பைத் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்து, கரையிலிருந்து நேரடியாகத் திருவள்ளுவர் சிலைக்குப் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும். திருவள்ளுவர் சிலைக்கு வருபவர்கள் கண்ணாடிப் பாலத்தை காண்பதற்கு அது ஏதுவாக இருக்கும்.

திருவள்ளுவர் பாறையில் உள்ள படகுத்துறையைப் புதுப்பிக்க வேண்டும்!

திருவள்ளுவர் பாறைக்குப் படகுப் போக்குவரத்தைச் செலுத்துவது சாத்தியமல்ல என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல!  அறிவியலும், தொழில்நுட்பமும் உயர்ந்தோங்கி உள்ள இக்காலகட்டத்தில் இந்தச் சிறிய பிரச்சினையை மாற்றி அமைப்பது பெரிய செயலல்ல. எனவே முறை யாகப் பராமரிக்காததால் தூர்ந்து போன திருவள்ளுவர் பாறையில் உள்ள படகுத்துறையைப் புதுப்பிக்க வேண்டும். சிலைக்கு அருகில் பாறைகள் இருந்து, அதனால் படகு நெருங்க முடியாது என்றால்,  பாறைகள் இல்லாத இடம் வரை சற்று நீளமான படகுத் துறை கட்டி, திருவள்ளுவர் சிலை உள்ள பாறைக்கு நேரடியாகப் படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்க முடியும்.

விவேகானந்தர் பாறை லேசர் ஒளியில் கண்ணைப் பறிக்கும் வகையில்  பளபளப்பாக மின்னிக்கொண்டிருக்கும் நிலையில், திருவள்ளுவர் சிலை, இருண்டு கிடக்கும் கேவலமான நிலையைத் தமிழ்நாடு அரசு மாற்றி அமைக்க வேண்டும்.

எனவே, இத்தகைய பின்னணிகளைக் கருத்தில் கொண்டு தற்பொழுது புதிதாக ஆட்சிப்பொறுப்பினை  ஏற்றுள்ள தமிழ்நாடு அரசு, தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் நீண்ட காலம் வலியுறுத்தி வரும் மேற்காண் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்துத் திரு வள்ளுவரின் முக்கியத்துவத்தை நிலை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் மேலோங்கி உள்ளது.

இப்படி ஒரு முக்கிய தகவல் நமக்குக் கிடைத்துள்ளது.

திருவள்ளுவர் சிலையை
சீர்குலைக்க திட்டமிட்ட செயல்கள்!

இது எப்படிப்பட்ட நயவஞ்சகக் கொடுமை!

வரலாற்றுப் பெருமை பெற்ற அன்றைய முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்களால், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை வைக்கப்பட்டது. பிறகு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சியில், கண்ணாடிப் பாலம் அமைத்துப் பொலி வூட்டப்பட்டது.

அதனைச் சீர்குலைக்கத் திட்டமிட்டுச் செயல்கள் எப்படி நடைபெற்று வருகின்றன பார்த்தீர்களா?

பழைய ஆளுநரை மிஞ்சும்
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர்!

ஆளுநர் மாளிகையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திருவள்ளுவர் நாள் விழாவில், திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி, புதிதாக வந்துள்ள பொறுப்பு ஆளு நர் ஆர்.வி.அர்லேகர் என்பவர் பச்சை ஆர்.எஸ்.எஸ். தத்துவ பிரச்சாரகரராகவும், அரசு ஊழியர் என்பதுபற்றி நினைக்காமல், ஆளுநர் மாளிகையில், முன்பு இருந்த ரவி என்பவரை மிஞ்சும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் இருக்கின்றன.

ஆரியத்திற்குப் புது அர்த்தம் கற்பிக்கும் ஆளுநர்!

புதுச்சேரி ஆரோவில்லில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், ‘ஆரியத்திற்கு’ புது அர்த்தம் ‘முறையான வாழ்க்கை’ என்பதுபோல பிரச்சாரம் செய்து வருகிறார்.

மதச்சார்பற்ற அரசு ஊழியராக ஊதியம் பெறும் ஒருவர், இப்படிப்பட்ட சர்ச்சைப் பேச்சுகளில் ஈடுபடுவது எவ்வகையில் நியாயம்?

கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலைக்கு ஏற்பட்டிருக்கும் அவலத்தை உடனடியாகப் போக்கிட, தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சர் அவர்களும், பொதுப் பணித் துறையும் விரைந்து பரிகார நட வடிக்கையில் இறங்கி, பழையபடி இருக்கும் நிலையை ஏற்படுத்தவேண்டும்.

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

 

6.6.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *