காமராசர் பிறந்த நாள் செய்தி!
காமராசருக்குப் பெரும் புகழ்மாலை சூட்டினார் தந்தை பெரியார்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
காமராசருக்குப் பெரும் புகழ்மாலை சூட்டினார் தந்தை பெரியார்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
காமராசருக்குப் பெரும் புகழ்மாலை சூட்டினார் தந்தை பெரியார்! காமராசர் பிறந்த நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாளாக’ அறிவித்தார் கலைஞர்! வளர்க காமராசர் புகழ்! வருக அவர் விரும்பிய சமதர்மச் சமுதாயம்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பொதுநிலையில் உள்ள எவராலும்கூட ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை!
‘பச்சைத் தமிழர், தமிழ்நாட்டின் ரட்சகர்’ என்றெல்லாம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பட்டவர் காமராசர். ஆச்சாரியார் (ராஜாஜி) அவர்களின் ‘‘குலக்கல்வித் திட்ட’’ எதிர்ப்பு இமயமலைபோல 1953 இல் எழுந்ததின் காரணமாக, அவர் முதலமைச்சசர் பதவியை விட்டு விலகிய பிறகு, தமிழ்நாட்டின் அடுத்த (காங்கிரஸ்) முதலமைச்சராக காமராசரே வர மிகவும் அழுத்தம் கொடுத்தும், அப்பதவியை ஏற்க மறுத்த காமராசரை, இசையச் செய்தவர்கள் தந்தை பெரியாரும், முதுபெரும் காங்கிரஸ் அடிநாள் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி.வரதராசுலு (நாயுடு) அவர்களுமாவார்கள்!
காமராசருக்குப் பெரும் புகழ்மாலை சூட்டினார் தந்தை பெரியார்!
கூட்டங்கள் தோறும் தந்தை பெரியார், காமராசர் தொண்டினைச் சரித்திரச் சாதனை விளக்கப் பரப்புரையாக்கி, மக்கள் மனதில் இடம்பெற்றார் அந்தக் கல்வி வள்ளல் சோசலிசச் சிற்பி காமராசர். ‘‘காமராசர் ஒரு மொட்டை மரம், அவருக்கென்று எந்த சுயநலத் தேவைகளும் கிடையாது! அப்பழுக்கற்ற பொதுத் தொண்டிற்கு இதைவிட முக்கியத் தேவை வேறு எதுவுமில்லை’’ என்றும் தத்துவார்த்த ரீதியாகவே காமராசருக்குப் பெரும் புகழ்மாலை சூட்டினார் தந்தை பெரியார்.
அதேபோல, எதிர்க்கட்சியாக இருந்த நிலையிலும் அறிஞர் அண்ணா, குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில், ‘‘குலக்கொழுந்தே குணாளா’’ என்று புகழ்ந்து, அவரை முதலமைச்சராக்கிட ஆதரவு தந்தார்.
1967 இல் காமராஜர் விருதுநகர் தொகுதியில் தி.மு.க. மாணவர் சீனிவாசனால் தோற்கடிக்கப்பட்டபோது, அதனைப் பெருவெற்றி என்று துள்ளிக் குதித்துக் கொண்டாடாமல், வருத்தம் தெரிவித்தார் முதலமைச்சரான அறிஞர் அண்ணா.
தமிழ்நாட்டின் பண்பை, உலகத்திற்குக் காட்டிய நிகழ்வு!
நாகர்கோயில் ரயில் தொடக்க விழாவின்போது, நாகர்கோயில் தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அழைப்பை ஏற்று காமராசர், மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த நிலையைப் பார்த்து, பிரதமர் இந்திரா, மேடையிலிருந்து ‘நமஸ்தே’ கூறிவிட்டு அமர்ந்த நிலையில், முதலமைச்சர் கலைஞர் அவர்கள், காமராசரை மேடைக்கு அழைத்து, அருகில் தனி நாற்காலியில் அமரச் செய்து மரியாதை செய்து, தமிழ்நாட்டின் பண்பை, பிரதமர் இந்திரா அம்மையாருக்கும், உலகத்திற்கும் காட்டிய நிகழ்வும் நடைபெற்றது!
‘கல்வி வளர்ச்சி நாளாக’ அறிவித்தார் கலைஞர்!
காமராசர் பிறந்த ஜூலை 15 ஆம் தேதியை, தமிழ்நாட்டுப் பள்ளிக் கூடங்களில், ‘கல்வி வளர்ச்சி நாளாக’க் கொண்டாட வற்புறுத்திடும் தனிச் சட்டத்தையே நிறைவேற்றியதோடு, ‘‘ஆணையைப் புறக்கணிக்கவும் (ஜி.ஓ. – அரசு ஆணையை) கூடும்; சட்டம் என்றால், கட்டாயம் நடத்தியே தீர வேண்டும்’’ என்பதை உணர்த்திய தி.மு.க.– தமிழ்நாட்டின் பண்பை, சிறப்பை வரலாற்றில் பதிய வைத்தவர் ‘திராவிட ஆட்சி’ நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர்.
தேர்தலில் காமராசர் தோற்றுவிட்டதை அன்றைய முதலமைச்சர் உள்ளிட்ட எவரும் எள்ளி நகையாடி மலிவு அரசியல் நடத்தாதது போன்று, தமிழ்நாட்டின் பண்பும், நாகரிகமும் தொடர, அவரது பிறந்த நாளில், அவர் நினைவைப் போற்றும் வகையில் பொதுத் தொண்டறத்தைப் பண்பாட்டுக் களமாக்கிட உறுதி ஏற்போம்!
வளர்க காமராசர் புகழ்!வருக அவர் விரும்பிய சமதர்ம சமுதாயம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.7.2026
