ஏ.அய். – பூதமா? இரவிசங்கர் அய்யாகண்ணு

2 Min Read
- Advertisement -

அலாவுதீன் கதை தெரியும் தானே?

விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். “அய்யா, உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்கும்! பறக்கும் கம்பளத்தில் அழைத்துச் செல்லும். இன்னும் பல மாயமெல்லாம் செய்யும்.

கடவுளே நேரில் வந்து “பக்தா உன் தவத்தை மெச்சினேன்! என்ன வரம் கேள்” என்று சொல்கிற கதைகளையும் படித்திருப்போம்.

ஒரு பூதமோ கடவுளோ உங்கள் முன்பு தோன்றினால் என்ன கேட்பீர்கள்? மூன்று வரங்கள் தான் கேட்கலாம் என்றால் எதற்கு முன்னுரிமை தருவீர்கள்?

இந்த பூதம், கடவுள், வரம், மாயாஜாலம் எல்லாம் சுட்டுவது என்ன? மனிதனின் கற்பனையில் உருவானதுதான் என்றாலும், கற்பனைக்கு எட்டாத அளவற்ற ஆற்றல் தானே!

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கடவுள் நேரில் வந்திருந்தால், “கொள்ளை நோய்களில் இருந்து எங்களைக் காப்பாறுங்களேன்” என்று தானே கேட்டிருப்போம்! அப்படி வேண்டித் தானே ஊருக்கு ஊர் மாரியம்மன் கோயில்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

இன்றோ மனித அறிவின், உழைப்பின் பயனாகத் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து நோய்களை வென்று விட்டோமே!

எந்த ஒரு நவீன நுட்பமும் மாயமந்திரத்தில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாத ஒன்றே என்று ஆர்தர் சி. கிளார்க் கூறுகிறார். பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் தொலைவில் உள்ளவர்களுடன் ஒரு மாயக்கண்ணாடியில் பேசுவது போல் காட்சிகள் இருக்கும். இராமாயணத்தில் விமானத்தில் வந்து சீதையைக் கவர்ந்து சென்றார்கள் எனக் காட்சி வரும். அந்தந்த காலக்கட்டத்தில் மாயமந்திரமாகப் பார்க்கப்பட்ட வசதிகள் எல்லாம் இன்று நிஜமாகி விட்டது அல்லவா!

பெரியார்தான் இதை அறிவியல்பூர்வமாகச் சிந்தித்து ‘இனி வரும் உலகம்’ நூலில் அறிவியல் இதைச் சாதிக்கும் என்று எழுதினார்.

செயற்கை நுண்ணறிவு இன்று உண்மையான பிறகும் கூட அது செய்யும் பணிகளை ஒரு மாய மந்திரம் போலவே பலரும் பார்க்கிறார்கள்!

ஏ.அய் இந்த உலகை என்ன செய்யும், நம் பணி வாய்ப்புகளை, கல்விச் சூழலை, குழந்தைகளை என்ன செய்யும் என்று கவலைப்படுவதற்கு முன், ஏ.அய். போன்ற ஒரு ‘பூதத்தை’ கையில் வைத்துக் கொண்டு நாம் என்ன செய்ய முயன்றிருக்கிறோம் என்று சிந்தித்து இருக்கிறீர்களா?

1969இல் அமெரிக்கா நிலவுக்குச் செல்ல உதவிய கணினியை விட இன்று நம் கைகளில் உள்ள கைத்தொலை பேசிகளின் திறன் அதிகம் என்கிறார்கள். ஆனால், இன்று பெரும்பாலானோர் அந்தச் கைத்தொலைபேசியை வைத்து ரீல்ஸ் தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

ChatGPT உடன் உங்கள் துறை குறித்துத் தொடர்ந்து ஒரு மணி நேரம் உங்களால் உரையாட முடியுமா? ஒரு நூறு கேள்விகள் வரிசையாக யோசிக்காமல் கேட்க முடியுமா? இல்லை, நூறு வெவ்வேறு துறைகள் பற்றி துறைக்கு ஒரு கேள்வி என்று கேட்டு அது சொல்லும் பதில்களை மனதில் இறுத்திக் கொள்ள முடிகிறதா?

செயற்கை நுண்ணறிவு உங்கள் வேலையைப் பறிக்காது, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தெரிந்த இன்னொருவர் தான் உங்கள் வேலையைப் பறிப்பார் என்று கடந்த சில ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது கூட பழைய பஞ்சாங்கமாகி விட்டது.

எல்லாக் காலத்திலும் தேடல் உள்ள மனிதர்கள் தான் வெல்கிறார்கள். இதில் செயற்கை நுண்ணறிவு வருவதற்கு முன், பின் என்று எந்த வேறுபாடும் இல்லை.

உங்கள் தேடல் என்ன?

உங்கள் தேடலுக்கு உதவ ‘ஏ.அய். ஜீபூம்பா பூதம்’ காத்துக் கொண்டிருக்கிறது. (ச்சும்மா… லுலுலாய்க்கு…)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *