6.4.2026 அன்று நிலவைச் சுற்றி வரும் தனது பயணத்தின் ஒரு பகுதியாக, இந்த விண்கலத்தில் உள்ள நான்கு விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து சுமார் 4,00,171 கிலோமீட்டர் (248,655 மைல்கள்) என்ற முந்தைய சாதனையைத் தாண்டினர்.
விண்வெளி ஆய்வில் மனிதகுலம் தற்போது ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நிலவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II) விண்கலம், 56 ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பில் இருந்து மிக நீண்ட தூரம் சென்ற மனிதர்கள் என்ற அப்பல்லோ 13 விண்கலத்தின் சாதனையை அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளது.
6.4.2026 அன்று நிலவைச் சுற்றி வரும் தனது பயணத்தின் ஒரு பகுதியாக, இந்த விண்கலத்தில் உள்ள நான்கு விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து சுமார் 4,00,171 கிலோமீட்டர் (248,655 மைல்கள்) என்ற முந்தைய சாதனையைத் தாண்டினர். 1970-ஆம் ஆண்டு அப்பல்லோ 13 விண்கலம் நிலவைச் சுற்றி வந்தபோது படைத்த இந்தச் சாதனையை, தற்போது ஆர்டெமிஸ் II விண்கலம் சுமார் 6,600 கிலோமீட்டர் கூடுதல் தூரம் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்த வரலாற்றுப் பயணத்தின் போது விண்வெளி வீரர்களுக்கு ஒரு ஆச்சரியமான செய்தி காத்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் மறைந்த அப்பல்லோ 13 விண்கலத்தின் கமாண்டர் ஜிம் லவல், தான் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்த வாழ்த்துச் செய்தியை வீரர்கள் கேட்டனர். “எனது பழைய ஏரியாவுக்கு உங்களை வரவேற்கிறேன். இது ஒரு வரலாற்று நாள், காட்சியைக் கண்டு ரசிக்க மறக்காதீர்கள்” என்ற அவரது குரல் வீரர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
யார் இந்த நான்கு வீரர்கள்?
இந்த வரலாற்றுப் பயணத்தில் மூன்று அமெரிக்கர்களும், ஒரு கனடியரும் இடம்பெற்றுள்ளனர்:
கமாண்டர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோக், கனடாவின் ஜெர்மி ஹேன்சன்.
ஆர்டெமிஸ் II விண்கலம் நிலவில் தரையிறங்கப் போவதில்லை. மாறாக, நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அதைச் சுற்றி வரும் ‘ஃப்ரீ-ரிட்டர்ன்’ (Free-return) என்ற முறையைப் பயன்படுத்தி பூமிக்குத் திரும்பும். நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 6,550 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து நிலவின் மறுபக்கத்தை இவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
இந்த ஆய்வின் மூலம் நிலவின் தென் துருவத்தில் மனிதர்களைத் தரையிறக்குவதற்கான முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் (ஆர்டெமிஸ் IV மூலம்) நிலவின் தென் துருவத்தில் மனிதர்களின் பாதத் தடங்களை மீண்டும் பதிக்க நாசா திட்டமிட்டுள்ளது.
விண்வெளி வீரர்கள் நிலவின் பள்ளங்கள், பழைய அப்பல்லோ 12 மற்றும் 14 விண்கலங்கள் தரையிறங்கிய இடங்கள் மற்றும் நிலவின் தென் துருவப் பகுதிகளைத் துல்லியமாகப் படம்பிடித்துள்ளனர். விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்கும்போது, “இந்த பிரபஞ்சத்தில் மனிதகுலம் ஒன்றே ஒன்றுதான், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதை இந்தப் பயணம் நினைவூட்டுகிறது” என்று வீரர் விக்டர் க்ளோவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவைச் சுற்றிக்கொண்டு பூமி நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ள ஓரியன் விண்கலம், வருகிற வெள்ளிக்கிழமை பசிபிக் பெருங்கடலில் விழுந்து தனது பயணத்தை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1972-ஆம் ஆண்டு அப்பல்லோ 17 விண்கலத்திற்குப் பிறகு, மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் சென்ற முதல் விண்கலம் என்ற பெருமையை ஆர்டெமிஸ் II பெற்றுள்ளது.

