அக். 21 முதல் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்த ‘திறன் ப்ளஸ்’ திட்டம் தொடக்கம்

- Advertisement -

சென்னை, அக். 15- தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ‘திறன் ப்ளஸ்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படை மதிப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறனில் குறைபாடுள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக மாணவர்களின் கற்றல் நிலையை அறியும் அடிப்படை மதிப்பீட்டுத் தேர்வுகள் (Baseline Assessment) அக்டோபர் 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வானது 40 நிமிடங்கள் வரை நடைபெறும். மொத்தம் 10 வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

இந்த தேர்வின் மூலம் எழுத்துகள், சொற்களை கண்டறிவதில் சிரமம் உள்ளவர்கள், வாசித்தல் மற்றும் எழுதுவதில் சிரமம் உள்ளவர்கள், எண்களை எழுதுவதிலும், வாய்ப்பாடுகள் கூறுவதிலும் சிரமப்படுபவர்கள், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அடிப்படைச் செயல்பாடுகளில் பின்தங்கியவர்கள் கண்டறியப்படுவார்கள்.

தேர்வுக்கான வினாத்தாள்கள் https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுக்கு முந்தைய நாள் பள்ளிகள் இதை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

தேர்வு முடிந்தவுடன் வகுப்பு ஆசிரியர்கள் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண்களை அக்.31-க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும். அதன்பின் தேர்வாகும் மாணவர்களின் பட்டியலை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

காவலர், எஸ்.அய். தேர்வு வயது வரம்பை
 5 ஆண்டுகள் தளர்த்த கோரிக்கை

சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் தேர்வு நடத்தாததால் இளைஞர்கள் பாதிப்பு!

சென்னை, அக் 15 தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் மற்றும் உதவி ஆய்வாளர்பணியிடங்களுக்கான தேர்வெழுதும் வயது வரம்பை அனைத்துப் பிரிவினருக்கும் 5 ஆண்டுகள் தளர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.கலீல் பாஷா மற்றும் செயலாளர் ஜி.வி.திருக்குமரன் ஆகியோர் நேற்று முன்தினம் (13.10.2026) உள்துறைச் செயலர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அதில் கூறியுள்ளதாவது

தற்போது இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 26 வயதாகவும், உதவி ஆய்வாளர்  தேர்வு எழுத 30 வயதாகவும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டும் 2 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது.

கடந்த 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) சார்பாக ஆண்டுதோறும் தேர்வுகள் முறையாக நடத்தப்படவில்லை. இதனால், காவல்துறையில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் தயாராகி வந்த லட்சக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் வயது வரம்பைக் கடந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையில் சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு பிற மாநிலங்களில் அதிகமாக உள்ளது:

கேரளா: 31 வயது தெலங்கானா & கருநாடகா: 32 வயது மத்திய பிரதேசம்: 33 வயது குஜராத்: 35 வயது

கடந்த 5 ஆண்டுகளாக சீருடைப் பணியாளர் தேர்வுகள் சீராக நடைபெறாத நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்கால நலன் காக்க இரண்டாம் நிலை காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான வயது வரம்பை அனைத்துப் பிரிவினருக்கும் 5 ஆண்டுகள் தளர்த்தி அரசு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *