புதுடில்லி அக். 14- தலைமைத் தேர் தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராடுவோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எஸ்அய்ஆர் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ‘இண்டியா’ கூட்டணி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன் தினம் (12.10.2026) உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதன் இறுதியில் எஸ்அய்ஆர் பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் டில்லி வீட்டில் கூட்டணித் தலைவர்கள் நேற்று (13.10.2026) மாலை கூடினர். திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலை வர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு ராகுல் காந்தி தேநீர் விருந்து அளித்தார். இதன் பிறகு கூட்டணித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குத் திருட்டுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்” என்று தெரிவித்தார். ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் ஜனநாயகத்தை அழிக்க ஞானேஷ்குமார் முயற்சி செய்கிறார்” என்று தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி. ராஜா கூறும்போது, “ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: மக்களின் அடிப்படை உரிமைகளை ஒன்றிய அரசு பறிக்கிறது. இதை தடுத்து ஜனநாய கத்தை காப்பாற்ற ஒன்றிணைந்து போராடுகிறோம்.
இது பலமுனைப் போராட்டம் கிடையாது, ஒற்றைப் போராட்டம். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலி யுறுத்தி ஒருமித்த கருத்துடன் போராடு கிறோம். எங்களது போராட்டம் ஓயாது. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
