திராவிடர் கழகத்தில் இருந்து விலகி, 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது, அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள், ‘நாடகங்கள்’ மற்றும் ‘நூல்கள்’ மூலம் தி.மு.கழகத்தின் கருத்துகள் வெகுமக்களைச் சென்றடைவதை விரும்பவில்லை. ஓராண்டுக்குள் கழகம் அடைந்து வந்த வளர்ச்சி, அவர்களை அலறச்செய்தது.
இந்த ஓராண்டுக்குள் தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்களின் படைப்புகள் 153-ஏ சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. பேரறிஞர் அண்ணாவின் ‘விடுதலைப் போர்’, ‘ஆரிய மாயை’ ஏ.வி.பி. ஆசைத்தம்பி-யின் ‘காந்தியார் சாந்தியடைய’ ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதே காலகட்டத்தில் தந்தை பெரியாரின் ‘பொன் மொழிகள்’ மீதான வழக்கும் தொடுக்கப் பட்டு தடை செய்யப்பட்டது.
திருச்சி மத்திய சிறையில், பேரறிஞர் அண்ணா அறை எண் 12-லும், தந்தை பெரியார் 13-லும் அடைக்கப்பட்டதற்குக் காரணமாக அமைந்தது, மேற்சொன்ன நூல்கள்தான். தி.க-தி.மு.க. பிரிவுக்குப் பிறகு, இரண்டு தலைவர்களையும் இணைத்த நிகழ்விது.
தந்தை பெரியார் அவர்களது அனுமதி மற்றும் அங்கீகாரத்துடன், 1949-இல் திருச்சி ‘திராவிடமணி பதிப்பக’ உரிமையாளர் முத்து அவர்களது அரிய முயற்சியால் வெளியிடப்பட்ட நூல், ‘பெரியாரின் பொன்மொழிகள்’. அதே ஆண்டு தடைசெய்யப்பட்டு, பின் பெரியாரின் நூற்றாண்டை ஒட்டி 1979-ஆம் ஆண்டு, அந்தத் தடை நீக்கப்பட்டது. திராவிடர் கழக வெளியீடாக இன்றைக்கும் இந்நூல் படிக்கக் கிடைக்கிறது.
அரசியல், மதம், கடவுள், சமுதாயம், இயக்கம், காங்கிரஸ், ஆட்சி, மொழி, தொழிலாளி, திருக்குறள், திராவிடர் கழகம், தீண்டாமை, பகுத்தறிவு, சீர்திருத்தம், பொருளாதாரம், ஆரியம் ஆகிய தலைப்புகளின் கீழ், பெரியார் 1949-ஆம் ஆண்டு வரை ஆற்றிய உரைகளில் இருந்தும் எழுதிய படைப்புகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்மொழிகள், இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நூல் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றபோது, தந்தை பெரியார் சமர்ப்பித்த எழுத்து வடிவிலான வாக்குமூலம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அதில், “எவ்வளவு பழைமையானதா யிருந்தாலும், என்ன வரலாற்றைப் பெற்றிருந்தாலும், உண்மையை எடுத்துக்காட்ட வேண்டும். சமுதாயத்திற் கேற்றதல்லாத சில முறைகள் நீக்கப்பட வேண்டு மானால், அவற்றைப் பற்றி மக்கள் யாவரும் உணருமாறு எடுத்து விளக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஏதாவது சீர்திருத்தம் செய்ய முடியும். உள்ளதை உள்ளவாறு எடுத்துக் காட்டப்படா விட்டால், சமுதாயத்தில் எத்தகைய சீர்திருத்தமும் செய்ய முடியாது” என்பதை மிகத் தீர்மானமாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்தி இருந்தார். மேலும், அபராதம் கட்டவும் மறுப்பு தெரிவித்தார். இதை காரணமாகக் கொண்டு, கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரே சிறையில் அடைக்கப்பட்ட பெரியாரும் அண்ணாவும் 10 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஒரே நாளில் விடுவிக்கப்பட்டனர். ஒரே வாகனத்தில் பயணிக்கும் வாய்ப்பும் அமைந்தது. தந்தை பெரியார் வேதாசலம் இல்லத்திலும், அண்ணா அவர்கள், திருச்சி சாம்பு இல்லத்திலும் இறங்கிக் கொண்டனர். அப்போது, இருவரும் சேர்ந்து விடுதலையாகும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்படவில்லை என்றாலும், அதற்கான வரலாற்றுச் சாட்சியங்களாக ‘பெரியாரின் பொன்மொழிகள்’ நூலும் அண்ணாவின் ‘ஆரிய மாயை’ நூலும் திகழ்கின்றன.
– நன்றி: முரசொலி, 13.10.2026
