பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அவர்களின் கோரிக்கைகளை செயல்படுத்துவது அரசின் கடமையாகும்!
மருத்துவப் பணியாளர்களை உடனே விடுதலை செய்து, பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அவர்களின் கோரிக்கைகளை செயல்படுத்துவது அரசின் கடமையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசில் பல ஆண்டுகளாக தற்காலிகப் பணி புரியும் மருத்துவப் பணியாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கையை வெளியிட, போராட்டம் நடத்துகிறார்கள் என்றால், ஒரு பொறுப்புள்ள அரசு – தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன?
அவர்களை அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கை களை, நியாயத்தை ஏற்க வேண்டியதே ஜனநாயகத்தில் எதிர்பார்க்கவேண்டிய ஒன்று.
அதைவிடுத்து, மகளிரிடம்கூட காவல்துறையினர், போராட்டக்காரர்கள் என்பதால், முழு பலத்தைப் பயன்படுத்தி, கைது செய்துள்ளது, வேதனையாகவும், வெட்கமாகவும் உள்ளது.
அவர்கள் தங்களது பணியை நிரந்தரம் செய்யக் கேட்கிறார்கள். அதுவும் இந்த த.வெ.க. அரசு பதவிக்கு வருவதற்காக வாக்குறுதிகளை வானளாவிய வகையில் வாரி விட்டது. அதில், இவர்களையெல்லாம் பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்னதும் முக்கியமானதாகும்.
விவசாயிகள் போராட்டம் என்றாலோ வீட்டுக்காவல். அரசின் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் ஓர் அரசை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதை வரலாறுகளைப் படித்துப் புரிந்துகொள்வது அவசியம்.
உடனே விடுதலை செய்து, பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அவர்களின் கோரிக்கையை செயல்படுத்துவது அரசின் கடமையாகும்!
அவர்கள்தான், மக்கள் உயிர் காப்பவர்கள். நோய்த் தடுப்பவர்கள் – அவர்களின் இன்றியமையாக் கடமையைச் சிந்திக்கவேண்டும் – தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
சென்னை
13.10.2026
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
