கோவை, அக். 13- கோவையில் ரூ.300 கோடியில் மாபெரும் ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம்: வரும் 16ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைக்கிறார்!
கோவையில் திமுக ஆட்சியில், காந்திபுரம் சிறைச் சாலைக்குச் சொந்தமான 6.98 ஏக்கர் பரப்பளவில், சுமார் 300 கோடி ரூபாய் செலவில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலக மற்றும் தகவல் தொழில்நுட்ப வளாகம் திறப்பு விழாவுக்குத் தயாராகியுள்ளது. இந்த மாபெரும் 7 அடுக்கு நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் 16ஆம் தேதி நேரில் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், நூலகத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலையையும் அவர் திறந்து வைக்கவுள்ளார்.
ஏழு அடுக்கு வளாகத்தின் சிறப்பம்சங்கள்
தரைதளம் – முதல்தளம்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் நூலகம், 350 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் மற்றும் கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மய்யம்.
இரண்டாம் தளம்: சிறுவர் நூலகம் மற்றும் சுய வாசிப்புப் பிரிவு.
மூன்றாம் தளம்: போட்டித் தேர்வு நூலகம் மற்றும் நிர்வாக அலுவலகங்கள்.
நான்காம் தளம்: தமிழ்ப் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பகுதி.
அய்ந்து & ஆறாம் தளங்கள்: ஆங்கில புத்தகப் பிரிவு மற்றும் புத்தாக்க மய்யங்கள்.
ஏழாம் தளம்: அறிவியல் மய்யம், எண்ணிம (Digital) நூலகம், மற்றும் ஏஅய் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பக் காட்சியகம். இங்கு விண்வெளி தோற்றத்தை கண்முன் நிறுத்தும் வகையிலான கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளதுடன், வாசகர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக 1.25 லட்சம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஆலோசனைக் கூட்டம்
முதலமைச்சரின் வருகை மற்றும் திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (12.10.2026) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூலகத் திறப்பு விழாவுடன், பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்!
சென்னை, அக்.13- தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பதவி வகித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் அவர் மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்த ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரிடம் தமிழ்நாடு ஆளுநருக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாகக் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிக்கிம் மாநில ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரள மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்த ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநில ஆளுநராக பிரஜ் மோகன் ராம், கருநாடக மாநில ஆளுநராக டாக்டர் சுதா யாதவ், உத்தராகண்ட் மாநில ஆளுநராக டாக்டர் தால் சிங் பிசென் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக துஷ்யந்த் கவுதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியீடு!
சென்னை, அக். 13- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான விடைத்தாள்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேர்வு விவரம்: ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) கடந்த 16.8.2026 முதல் 20.8.2026 வரை மற்றும் 7.9.2026 முதல் 12.9.2026 வரை கணினி வழியில் (CBT) நடத்தப்பட்டது. இத்தேர்வெழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் தற்போது தேர்வாணைய இணையதளத்தில் (12.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் 12.10.2026 முதல் 10.11.2026 வரை (மொத்தம் 30 நாட்கள்) இணையதளத்தில் இருந்து விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம்: தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவு எண் வாயிலாக உள்நுழைந்து, உரிய கட்டணத்தைச் செலுத்தி விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளான 10.11.2026-க்குப் பிறகு விடைத்தாள்களை வழங்கக்கோரி பெறப்படும் எந்தவொரு கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
