திருவள்ளூர், அக்.13– தந்தை பெரியார் விருதுக்கு வரும் அக். 20ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்படுகின்றன. இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.
2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விருதாளரைத் தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக மாவட்ட ஆட்சியருக்கு அக். 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
10 ஆயிரம் கன அடியாக குறைப்பு!
மேட்டூர், அக்.13- மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த மாதம் 1ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவானது படிப்படியாக குறைப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கன அடிக்கும் கீழே குறைந்துவிட்டது. நீர்மட்டமும் நேற்று முன்தினம் (11.10.2026) மாலையில் 63 அடியாக சரிந்து விட்டது. நேற்று முன்தினம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
