என்றும் நிலைத்து நிற்பவர் பெரியார்! – கருத்தரங்கம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தூத்துக்குடி, அக். 7- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் நடத்திய தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாள் விழா கருத்தரங்கம், நூல் அறிமுக விழா என இருபெரும் நிகழ்வாக நடைபெற்றது.

26.9.2026 அன்று மாலை 6 மணிக்கு பெரியார் மய்யம், அன்னை நாகம் மையார் அரங்கில் தொடங்கிய நிகழ்வுக்கு மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சொ.பொன்ராஜ் தலைமையேற்று “என்றும் நிலைத்து நிற்பவர் பெரியாரே!” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவரையடுத்து அதே பொருளில் உலகத் திருக்குறள் பேரவைச் செயலாளர் கவிஞர் கோ.இளமுருகு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், இன்றும் வாழும் தேவதாசி சமூகத்தின் கடைசி முதிய பெண்ணிடம் நடத்திய நேர்காணலைக் கூறி, அவர், தந்தை பெரியாரின் தேவதாசி முறை ஒழிப்புப் பணிக்கு ஆற்றிய கடமைகளை நினைவு கூர்ந்து, அய்யாவைப் பாராட்டிய தையும் சொல்லி உரையை நிறைவு செய்தார். இறுதியாகக் கழகக் காப்பாளர் மா.பால்ராசேந்திரம், தோழர் கலைவேலு எழுதியுள்ள ‘அவர்தான் பெரியார்’ என்ற சிறிய புத்தகத்தினை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.

அவர் தம் உரையில், புத்தகம் கூறும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ்த் தேசியம் என்ற தலைப்புகளான செய்திகளைச் சுருக்கமாகக் கூறினார். ஜாதி மாநாடுகளில் பெரியாரின் ஜாதி பற்றிய கண்டிப்பு உரைகள், சூத்திரன் பட்டம் ஒழிய பஞ்சமருடன் கலந்திடுவீர் என்ற கருத்துகள், ஜாதி ஒழிப்பிற்கு வகுப்புரிமையின் அவசியம் பற்றி போராடிய களங்கள், தாழ்த்தப்பட்டோர் தனித்தொகுதி தேவையில் காட்டிய பெரியாரின் உறுதி, கோயிலே ஜாதியை நிலைநிறுத்தப் பயன்படுகிற இடம். அங்கே, தீண்டக்கூடாதார் நுழைய வேண்டுமென எடுத்த முடிவு, சமூக விடுதலை கிடைக்க பெண் அடிமை என்ற தத்துவம் ஒழிய வேண்டும் என்றார் பெரியார்.

பிறப்புக்கு ஒரு நீதி கூடாது என்பது பெண்ணுக்குமே என்றார். ‘கற்பு’ என்பது இரு பாலர்க்கும் வேண்டும். நிர்ப்பந்தக் கற்பு, சுதந்திரமான இன்ப வாழ்க்கை அல்ல என்றார். ‘பெண்ணுரிமை’ என்பதை வைத்தே இலக்கியங்களை விமர்சித்தார். மாறுபடும் இடங்களில் திருக்குறளையே குற்றம் கூறினார். விரும்பிய காதலுக்கு விடை தந்தார். விதவை மணம், சுயமரியாதை மணம் ஜாதி மறுப்பு மணங்களை நடத்தி வைத்தார். கல்வி, வேலை, சொத்து என்பவைகளில் பெண்களுக்கு நீதி கிடைக்கப் போராடிப் பெற்றுத் தந்தார். 1938லேயே ‘தமிழ்நாடு தமிழர்க்கே!’ என்று முழக்கமிட்டார்

இந்தியக் கூட்டாட்சியிலிருந்து தமிழ் நாடு சுதந்திர நாடாக விலக வேண்டும், அப்பொழுதுதான் உலக நாடுகள் போல் தமிழ்நாடு முன்னேற முடியும் என்றார். ‘தமிழ்’ மொழிக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழைமை எனச் சொல்லும் போது, அக்கால மக்கள் காட்டுமிராண்டி கால மக்களே! என்றார். தமிழோடு, ஆரியப் புராணக் குப்பைகளைக் கலப்பதை, வடமொழி புகுவதைக் கண்டித்து வெகுண்டார். தமிழ்மொழிக்கு இந்தியால் ஏற்படவிருந்த ஆபத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார். பல்லாண்டுகள் கடந்து வளர்ச்சி பெற்ற மொழியில் ஒரு எடிசன், நியூட்டன், மார்க்கோனி தோன்றவில்லையே என்றார்.

‘தமிழரல்லாதவர் பெரியார்’ என்போர்க்குத் தமிழ் – த்ரமிள – திரவிட திராவிட என்ற பாவாணரின் ஆய்வைச் சான்று கூறித் திராவிடம் தமிழே என எடுத்துச் சொல்லி, திராவிடரே சூத்திரர். எனவேதான் திராவிடர் கழகம் என வைக்கப்பட்டதாகக் கூறுகிறார். இவ்வாறு அய்யா பெரியாரின் சமூகப் பணிகளைப் பட்டியலிட்டு ஆசிரியர் ‘அவர்தாம் பெரியார்’ என்ற சரியான தலைப்பினைப் புத்தகத்திற்கு வைத்துள்ளார் என்று விளக்கி உரையை நிறைவு செய்தார். மாநகரத் திராவிடர் கழகத் தலைவர் த.பெரியார்தாசன் நன்றி கூறினார். சு.காசி, கி.கோபால்சாமி, சுப்பையா, இரா.ஆழ்வார், சேமா.சந்தனராஜ், புதிய தோழர் ப.ஞானசுந்தரி, பொ.போஸ் ஆகியோர் உரையை கேட்டு மகிழ்ந்தார்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *