ஜெய்ப்பூர், அக். 7- ராஜஸ்தானில் கணவர், மகள் உயிரிழந்த நிலையில், ‘சூனியக்காரி’ என கிண்டல் செய்யப் பட்ட பெண் ஒருவர் அம் மாநில நிர்வாக பணித் தேர்வில் (ஆர்எஸ்) வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரைச் சேர்ந்த ரோகினி குர்ஜர் 2006ஆம் ஆண்டு பட்டம் பெற்று தனது கிராமமான சுக்ராவில் ‘பட்டம் பெற்ற முதல் பெண்’ என்ற பெருமையை பெற்றார். பின்னர், அவர், 2011இல் திருமணம் செய்து கொண்டு, 2013இல் தாயானார். 2021இல் அவரது கணவர் உயிரிழந்தார். இது ரோகிணிக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. ரோகிணிக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்ததால், மாமியார் வீட்டில் அவரை கேலி செய்ததுடன், அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அத்துடன், கிராமத்தில் சிலர் ‘கணவரின் மரணத்துக்கு ரோகினிதான் காரணம்’ என்று குற்றம்சாட்டி, அவரை ‘சூனியக்காரி’ என்று அழைத்தனர்.
எனினும், ரோகிணியின் சகோதரர் நரேந்திர குர்ஜரும், கணவரின் பாட்டி புஷ்பா தேவியும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். ரோகினி மீண்டும் படிப்பைத் தொடங்க வேண்டும் என்று பாட்டி புஷ்பா தேவி தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்.
இதையடுத்து, 2021ஆம் ஆண்டு ரோகினி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கினார். ரோகினி ராஜஸ்தான் நிர்வாகப் பணித்தேர்வில் (ஆர்எஸ்) தனது முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால், முதன்மைத் தேர்வில் மதிப்பெண் குறைைந்ததால் வெற்றி பெறவில்லை. மீண்டும் முயற்சி செய்த அவர், தேர்வு எழுத வேண்டாம் என்று முடிவு செய்தார். ஆனால், அவரது குடும்பத்தினர், குறிப்பாக, அவரது மகள் பூமிக்காகவாவது தேர்வை எழுத வேண்டும் என்று அவரை சமாதானப்படுத்தினர்.
இதிற்கிடையே, ஆர்எஸ் முதன்மைத் தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு ரோகினி விபத்தில் சிக்கினார். இதில் அவரது கண் கடுமையாக காயமடைந்தது. ஒரு கண்ணில் கட்டுப் போடப்பட்டிருந்த நிலையில், மற்றொரு கண்ணின் உதவியுடன் தேர்வு எழுதினார். 2024ஆம் ஆண்டு ஆர்எஸ் தேர்வில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விதவைப் பிரிவில் 2ஆம் இடம் பிடித்தார். அவருக்கு ராஜஸ்தான் கணக்கு பணித்துறை ஒதுக்கப்பட்டுள்ள்தது. அந்த விடாமுயற்சி இறுதியில் அவரை ஆர்எஸ் தேர்வின் வெற்றிக் கோட்டை கடக்கச் செய்தது.
