சிங்கப்பூரில் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாள் விழா பெரியாரின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்

5 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சிங்கப்பூர், அக்.6 சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் நடத்திய தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாள் விழா, செப்டம்பர் 18ஆம் தேதி(18-09-2026) தேசிய நூலகத்தின் பதினாறாம் தளத்தில் அமைந்துள்ள ‘தி போட்’ (The POD) அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக அனைவரையும் வரவேற்று தலைமையுரை ஆற்றிய பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர்  பூபாலன்,  பெரியாரின் வருகைக்குப் பின்னர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் அதன் தொடர்ச்சியாக உருவான சமூக அமைப்புகளின் பங்களிப்பையும் எடுத்துரைத்தார்.

‘‘தமிழர்கள் வேற்றுமைகளைக் கடந்து ஒற்றுமை யுடன் முன்னேறுவதற்கு பகுத்தறிவுச் சிந்தனையும், சமூக அக்கறையும் முக்கியமானவை’’ என்று அவர் குறிப்பிட்டார். ‘‘பெரியார் விழா என்பது பெரியாரை நினைவுகூரும் ஒரு நிகழ்வாக மட்டும் அமைந்துவிடக் கூடாது’’ என்றும், ‘‘பெரியாரின் சிந்தனைகளால் சமூகத்துக்குக் கிடைத்த பயன்களை அடுத்த தலை முறைக்குக் கொண்டு செல்லும் நிகழ்வாக அமைய வேண்டும்’’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

‘‘அன்பு, அறிவு, உயர்வு, மனிதநேயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை முன்னேற்ற வேண்டும் – மனிதநேயம் என்பது ஒருவருக்கு உதவி செய்வதில் மட்டும் இல்லை; ஒவ்வொருவரையும் சமத்துவத்துடன் நடத்துவதிலும், அவர்களுக்குரிய சமூகப் பங்கை வழங்குவதிலும் உள்ளது’’ என்றும் அவர் கூறினார். ‘‘சமூக ஒற்றுமை நிலைத்தால்தான் நாடு முன்னேற்றம் காண முடியும்;  இத்தகைய சிந்தனைகளை இளைய தலைமுறையிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும்’’ என்றும் குறிப்பிட்டார்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

‘செம்பியன் திருமேனி’ –
வரலாறும் புனைவும் இணைந்த சரித்திர நாவல்

விழாவில் ‘செம்பியன் திருமேனி’ நூல் ஆய்வு இடம் பெற்றது. கவிஞரும் எழுத்தாளருமான  சந்திரசேகரன் மோகனப்பிரியா  நூலை ஆய்வு செய்து பேசினார். புதுமைத்தேனீ மா. அன்பழகன் எழுதியுள்ள இந்நாவல் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுப் பின்னணியில் அமைந்திருந்தாலும் வரலாற்றை அப்படியே பதிவு செய்யாமல் வரலாற்றுத் தகவல்களுக்கும் புனைவுக்கும் இடையே உள்ள இடைவெளியைப் புனைவின் மூலம் நிரப்பியுள்ளதாக மோகனப்பிரியா குறிப்பிட்டார்.

வரலாற்றுப் பின்னணியுடைய இடங்கள், ஆறுகள், ஊர்கள் போன்றவற்றை ஆசிரியர் களமாகப் பயன்படுத்தியிருப்பதுடன் அக்கால வாழ்க்கை முறைகள், இசைக்கருவிகள், விழாக்கள், திருமண நிகழ்வுகள், கட்டட அமைப்புகள் உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்து நாவலில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

நாவலுக்கான களத்தை உருவாக்குவதற்காக ஆசிரியர் பல இடங்களுக்கு நேரடியாகப் பயணம் செய்ததுடன் அக்காலத்தில் மன்னர்கள், இளவரசர்கள் மேற்கொண்ட பயணங்களின் தூரம், நேரம் போன்றவற்றையும் கணக்கில் கொண்டு சில நிகழ்வுகளை அமைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தக் காலகட்டத்துக்குரிய வரலாற்று அடையாளங் களையே ஆசிரியர் பயன்படுத்தியிருப்பது நாவலின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார். நாவலின் கதாபாத்திரங்களான செம்பியன் திருமேனி, இளந்திறைக்கோ, வெண்முத்து உள்ளிட்டோரின் தனித்தன்மைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

வரலாற்றுத் தகவல்களையும் கற்பனையையும் இணைத்து வாசகர்களை பத்தாம் நூற்றாண்டின் வாழ்க்கைச் சூழலுக்குள் அழைத்துச் செல்லும் சரித்திரப் புனைவாக ‘செம்பியன் திருமேனி’ அமைந்துள்ளதாக மோகனப்பிரியா குறிப்பிட்டார்.

திராவிடர் கழகம்

பெரியாரின் சிந்தனை –
மனித மனத்தைச் செம்மைப்படுத்திய சிந்தனை

தொடர்ந்து சிறப்புரையாற்றிய தமிழறிஞர் முனைவர் சுப. திண்ணப்பன் பெரியாரின் சிந்தனைகள் குறித்துப் பேசிய அவர்,  ‘‘பெரியார் அறிவியல் கருவிகளையோ இயந்திரங்களையோ கண்டுபிடித்தவர் அல்ல. அதற்கும் அப்பால் மனித மனத்தைச் செம்மைப்படுத்தி மனிதநேயத்தை வளர்க்கப் பாடுபட்டவர்’’ என்று குறிப்பிட்டார். ‘பிறப்பால் அனைவரும் சமம்’ என்ற கருத்தையும், தீண்டாமை ஒழிப்பு, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றையும் பெரியார் தொடர்ந்து வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

திருவாரூரில் படித்த காலத்திலேயே பெரியாரின் பேச்சுகளைக் கேட்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்த தாகவும், பெரியாரின் எளிமையான பேச்சும் ‘எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் சிந்தித்துப் பார்த்து உண்மையை ஆராய வேண்டும்’ என்ற அணுகுமுறையும் தன்னை ஈர்த்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார். தொடர்ந்து பெரியாரின் நூல்களைப் படித்ததுடன் அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்கு பெரியார் மேற்கொண்ட வருகைகள் இங்குள்ள தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைப் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள் தமிழ் இலக்கியம் மற்றும் சமூகச் சிந்தனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு முனைவர் சுப திண்ணப்பன் அவர்களும் பூபாலன் அவர்களும் இணைந்து தொகுத்துள்ள ‘சிங்கப்பூர்க் கவிதையில் பெரியார்’ என்ற நூல் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தில் பெரியாரின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்துகொள்ள இந்நூல் ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கும் என்றும் பெரியாரின் காலத்துக்கு முன்பிருந்த சிங்கப்பூர் தமிழ் இலக்கியச் சூழலையும் அவரது வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களையும் கவிதைகளின் வழியாக அறிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார். சிங்கப்பூரில் பெரியாரின் வருகை மற்றும் அதன் தாக்கத்தைப் பதிவு செய்யும் இந்நூலை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டுச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பெரியாரின் சிந்தனைகள் வரலாற்றில் மட்டும் நிற்காமல் இன்றைய தலைமுறையின் சிந்தனைக்கும் செயல் பாட்டுக்கும் பயன்பட வேண்டும் என்றார்.

திராவிடர் கழகம்

பெரியாரின் சிந்தனைகள்
இன்றைய காலத்திற்கும் பொருந்தும்

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை யாற்றிய உலகத் தமிழ்மாமணி  இரா. தினகரன் பெரி யாரின் சீர்திருத்தக் கருத்துகளும் சுயமரியாதைச் சிந்தனைகளும் இன்றைய காலத்திலும் தேவையானவை என்று குறிப்பிட்டார்.

மலாயாவுக்கு பெரியார் மேற்கொண்ட பயணங் களையும் அக்காலத்தில் தோட்டங்களில் பணியாற்றிய தமிழர்களிடையே அவர் ஏற்படுத்திய சமூக விழிப்புணர் வையும் நினைவுகூர்ந்தார். கல்வி, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றதில் பெரியாரின் பங்கு முக்கியமானது என்றார்.

எந்தக் கருத்தாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் சிந்தித்து, ஆராய்ந்து, உண்மையை அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே பெரியாரின் அடிப்படை அணுகுமுறை என்று தினகரன் கூறினார். பிறப்பு, மதம், குடும்பப் பின்னணி போன்ற வேறு பாடுகளைக் கடந்து ஒவ்வொருவரையும் மனிதராகவும் சமமாகவும் மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பெரியாரின் சிந்தனைகளை ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் மட்டுப் படுத்தாமல் இன்றைய தலைமுறையின் வாழ்க்கை யோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வி, பொருளாதார முன்னேற்றம், சிந்திக்கும் திறன் ஆகியவை சமூக முன்னேற்றத்துக்கு அவசிய மானவை என்றார்.

இன்றைய காலத்தில் ‘செயற்கை நுண்ணறிவு’ வேகமாக வளர்ந்து வரும் நிலையில் மனிதனின் இயற்கையான அறிவும் பகுத்தறிவும் அதனுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருப்ப தாகவும் தினகரன் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துவது என் பதைத் தீர்மானிக்க மனி தனின் சிந்தனைத் திறனும் பகுத்தறிவும் தொடர்ந்து தேவைப்படும் என்றார்.

பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவது அவரைப் போற்றுவதற்காக மட்டும் இருக்கக் கூடாது என்றும் அவரது சிந்தனை களால் சமூகத்திற்கு ஏற்பட்ட பயன்களை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதே அதன்  நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிறைவாக தமிழ்ச்செல்வி இராஜராஜன்  நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை மனோகர் சந்திரன் நெறி யாளராக சிறப்பாக வழிநடத்தினார்.

பெரியாரின் சிந்தனைகளை வரலாற்றுப் பதிவாக மட்டும் பார்க்காமல் பகுத்தறிவு, சமத்துவம், சுயமரியாதை, மனிதநேயம் ஆகியவற்றை அடுத்த தலைமுறையின் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் கொண்டு செல்வதே அவற்றை நினைவுகூர்வதற்கான பொருள் என்ற கருத்தை மய்யமாகக் கொண்டு விழா அமைந்திருந்தது.

செய்தி :  தமிழ்ச்செல்வி,

செயலாளர், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *