மும்பை, அக். 05- தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம் நடத்திய உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் எஸ்அய்ஆர், இவிஎம் முறையை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் (எஸ்அய்ஆர்) முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இண்டியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நாடு முழுவதும் போராட்டம், பேரணி நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மகாராட்டிராவின் தலைநகர் மும்பையில் சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராட்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோரின் தலைமையில் நேற்று (4.10.2026) மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.
இந்தப் பேரணி, மெட்ரோ சினிமா பகுதியில் தொடங்கி, தெற்கு மும்பையில் உள்ள பிருஹன்மும்பை மாநகராட்சி (பிஎம்சி) தலைமையகம் வரை சென்றது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) தலைவர்களும் பேரணியில் பங்கேற்றனர். இந்தப் பேரணியில் ராஜ் தாக்கரே பேசும்போது, “மகாராட்டிராவில் நடத்தப்பட்ட எஸ்அய்ஆர் செயல்முறையை முழுமையாகக் கைவிட வேண்டும்.
நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மூலம் வாக்களிப்பதை நிறுத்தி, மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும். யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்கக் கூடாது. மக்கள் தான் தீர்மானிப்பார்கள்” என்றார்.
