மதுராந்தகம்: தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் இ.பரந்தாமனை ஆதரித்து கழகத் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

7 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

8 இளையர்கள் தவறான வழியில் போனால்,

திருத்த வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு! 

திருத்துகிற இடத்திலே நாங்கள் இருக்கிறோம்; 

திருந்த வேண்டிய இடத்திலே நீங்கள் இருக்கிறீர்கள்!

இது ஒரு தேர்தல் பிரச்சினை அல்ல;  

சமூகப் பிரச்சினை – தலைமுறைப் பிரச்சினை!

மதுராந்தகம், அக்.4  இளையர்கள் தவறான வழியில் போனால், திருத்த வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு! திருத்துகிற இடத்திலே நாங்கள் இருக்கிறோம்; திருந்த வேண்டிய இடத்திலே நீங்கள் இருக்கிறீர்கள்! இது ஒரு தேர்தல் பிரச்சினை அல்ல; இது ஒரு சமூகப் பிரச்சினை – இது ஒரு தலைமுறைப் பிரச்சினை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

Contents

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் பரந்தாமன் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை

கடந்த 1.10.2026 அன்று மாலை 7 மணியளவில், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வழக்குரைஞர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து,  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, வையாவூர் ஊராட்சி, மூசிவாக்கம் பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது தேர்தல் பரப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

கேள்வி கேட்பது
எதிர்கட்சியினுடைய பணி!

அப்படி பதில் சொல்வதற்கு, மூன்று நாட்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  சொன்னார். மூன்று நாள்களுக்குப் பிறகு, சட்டமன்றத்திற்கு வந்த முதலமைச்சர் என்ன பதில் சொன்னார்? எதிர்க்கட்சியினர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னாரா? என்றால், இல்லை.  இன்னொன்றை நீங்களெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும், ஜனநாயகத்தின் அம்சம் என்னவென்றால், ஆளுங்கட்சியாக ஒரு கட்சி தேர்ந்தெடுக்கப்படுகின்றபோது, அந்தக் கட்சிப் பதில் சொல்ல வேண்டிய கட்சி. எதிர்கட்சியினுடைய பணி என்ன? கேள்வி கேட்பது எதிர்கட்சியினுடைய பணியாகும். ஆளுங்கட்சியைப் பாராட்டுவதற்காக எதிர்க்கட்சி இல்லை.  அண்ணா அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது ஆளுங்கட்சியினரைப்  பார்த்துச் சொன்னார், ‘‘உங்களை லாலி பாடுவதற்காக நாங்கள் இங்கே வரவில்லை; உங்களுக்கு பிரேக் போடுவதற்காக, உங்களுடைய தவறை மிக முக்கியமாகச் சுட்டிக் காட்டுவதற்காகதான் நாங்கள் இருக்கிறோம்’’ என்றார்.

‘‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.’’

அது உங்கள் நலத்துக்குத்தான் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறோம் என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்புகளை எதிர்க்கட்சியினர் பெற்றிருந்தார்கள்.

‘மஞ்சள் பை திட்டம்’ என்பதை,
‘துணிப் பை திட்டம்’ என்று ஆக்கினார்!

எனவே, பெயர் மாற்றம், அதைவிடப் பெரிய மாற்றம் என்ன தெரியுங்களா? இதுவரை அவ்வளவு பெரிய புரட்சிகரமான மாற்றத்தை எந்த ஆட்சியும் செய்யவே இல்லை. ஜோசப் விஜய் ஆட்சிதான் செய்திருக்கிறது. அது என்ன தெரியுமா? ‘மஞ்சள் பை திட்டம்’ என்பதை, ‘துணிப் பை திட்டம்’ என்று ஆக்கினார். இதுதான் அவர்கள் செய்த மாற்றம்.

இது மாற்றமா? உருமாற்றமா? தடுமாற்றமா? ஏமாற்றமா? நீங்கள் நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டிய  கட்டத்தில் இருக்கிறீர்கள். மஞ்சள் பையே துணிப் பைதானே!  அதைச் ‘சாக்கு’விலா கொடுப்பார்கள்?

மாற்றம், தடுமாற்றம், உருமாற்றம் –
அப்புறம் ஏமாற்றம்

‘மகளிர் விடியல் பயணம்’ என்பதை, ‘வெற்றி பயணம்’ என்று மாற்றியிருக்கிறார்கள். இப்படி பல செய்திகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.  எனவேதான், மாற்றம், தடுமாற்றம், உருமாற்றம் – அப்புறம் ஏமாற்றம். இதுதான் இந்த அய்ந்து மாதங்களில் நடந்திருக்கிறதே தவிர, ஒன்றும் புதிய மாற்றங்கள் என்று கிடையாது.

ஆகவேதான், சென்ற முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கிறவர்களைவிட, இப்போது நீங்கள் புதியவரை  பரந்தாமன் போன்றவர்களை திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினால், அதுதான் அவர்களுக்கு அறிவைத் தரக்கூடிய, துணிவைக் கொடுக்கக்கூடிய, பாடத்தை கற்பிக்கக் கூடிய மாற்றம் – வரவேண்டிய மாற்றம். எனவே, மாற்றம் என்பது மாறாததுதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், மாற்றம், ஏமாற்றமாகவோ, தடுமாற்றமாகவோ போய்விடக்கூடாது என்பதுதான் மிக முக்கியம்.

சொன்னதைச் செய்வதும்,
சொல்லாததையும் செய்வதும்தான் தி.மு.க.!

சுருக்கமாக சில விஷயங்களைச் சொல்கிறேன்; இது விவசாயிகள் கூடியிருக்கிற கூட்டம். அந்த விவசாயிகள், இந்த மாற்றம் வந்த நேரத்தில், மகிழ்ச்சியாக இருக்கி றார்களா? இந்த நாடு, விவசாய நாடு. பெரும்பாலும் விவசாயம்தான். அதுவும், செங்கல்பட்டு என்று சொன்னால், விவசாயத்துக்குப்  பெருமை பெற்ற பகுதியாகும். அதைப் புரிந்ததினால்தான்,  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய  தலைவர் கலைஞர் அவர்கள், ஆட்சிக்கு வந்த உடனே, விவசாயிகளின் கடனான 7 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்வோம் என்று  முதல் உத்தரவே அந்தக் கோப்பில்தான் கையெழுத்துப் போட்டார். அதற்கு நாங்கள் எல்லாம் சாட்சி. பதவியேற்கும்போது, நாங்கள் எதிரே அமர்ந்திருந்தோம். ஆகவே, ‘‘சொன்னதைச் செய்வதும், சொல்லாததையும் செய்வதும், செய்யக்கூடிய ஆட்சி, கட்சி அதனுடைய வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக்கூடிய நம்முடைய அருமைத் தோழர் பரந்தாமன் அவர்கள்.

பிச்சை எடுக்கும் போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்!

ஆனால், இன்றைக்கு விவசாயிகளுடைய நிலை என்ன? இதுவரையில் எந்த ஆட்சியிலாவது விவசாயிகள் திருவோடு தூக்கி இருக்கிறார்களா? அது மட்டுமல்ல, இன்றைய செய்தி என்னவென்றால், விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தி யிருக்கிறார்கள். அப்படியாவது அவர்களுக்கு வழி பிறக்காதா? என்று பிச்சை எடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். புதிது புதிதாக போராட்டத்தை உருவாக்கக் கூடிய அளவிற்குதான் உங்களுடைய ஆட்சி இருக்கிறது.

ஜனநாயகம் என்பது
சினிமா தலைப்பு அல்ல

இதில் சினிமா வசனம் பேசுவார்; மிக முக்கியமாக என்ன பேசுவார், அடுத்த பிறவியில் நான் விவசாயியாகப் பிறக்க வேண்டும்; இந்தப் பிறவியில் நல்லது செய்யுங்கள், அதுதான் மிக முக்கியம். அடுத்த பிறவியில் விவசாயியாகப் பிறந்து, அவர்களுக்கு என்ன பயன்? விவசாயிகளுடைய கடனைத் தள்ளுபடி செய்யவில்லை என்பது மட்டுமல்ல, இன்றைய வரையில் அவர்களை  அழைத்துக் கூட பேசுவதற்குத் தயாராக இல்லை.

ஆனால், முந்தைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன செய்தார் என்றால், எங்கேயாவது ஒரு சிறிய பிரச்சினை எழுந்தால்கூட, உடனடியாக அமைச்சர்களை, பொறுப்பாளர்களை அனுப்பி,  ஏழு மணி நேரம், எட்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள். அமைச்சர்களால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால்,  ‘‘நானே அவர்களைச் சந்திக்கிறேன்’’ என்று அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு காண்பார். இதற்குப் பெயர்தான் ஜனநாயகம். ஜனநாயகம் என்பது சினிமா தலைப்பு அல்ல; ஜனநாயகம் என்பது முழுக்க முழுக்க எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, எல்லோருடைய கருத்துகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியதுதான். கடைக்கோடியில் இருக்கிற ஒரு வாக்காளர் இருக்கிறார் பாருங்கள், அவருக்கும் இடம் தந்து மதிப்பளிப்பதுதான் ஜனநாயகம் என்பது!

காவிரிப் பிரச்சினையில், பேச்சு வார்த்தை நடத்துவதினால்,
எந்தப் பயனும் கிடையாது!

அடுத்தபடியாக விவசாயிகளுடைய நிலை அறிந்து  விவசாயிகளோடு ஆலோசனை செய்யவேண்டும். விவசாயம் என்றாலே என்னவென்று தெரியாத ஆட்களாகக் கொண்டு வந்து அமைச்சராகப் போட்டது மட்டுமல்ல, எல்லோரும் மேட்டூருக்கு போய் தண்ணீர் திறப்பார்கள். தி.மு.க. ஆட்சியிலும் அமைச்சர்கள் போயிருக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பாக என்ன செய்வார்கள் என்றால், விவசாயிகளிடம் முதலில் கலந்து பேசுவார் முதலமைச்சர். அது மட்டுமல்ல, அதிகாரிகளை அழைத்துப் பேசுவார். இப்பொழுது மேட்டூர் அணையில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது? என்று கேட்பார். நம் தமிழ்நாட்டை வறண்ட பாலைவனமாக்குவதற்காக மேகதாது திட்டம் போன்ற ஒரு கொலைகாரத் திட்டம் இருக்கிறது; தமிழ்நாட்டை வறட்சி பூமியாக, பாலைவனமாக்கக்கூடிய ஒரு திட்டத்தை அண்டை மாநிலமான கருநாடகத்திலே செய்து கொண்டிருக்கிறார்கள். அதைக் கண்டு கொதித்தெழுந்திருக்கிறார்கள் மற்ற அத்தனை கட்சிக்காரர்களும் ஆனால், அதே நேரத்திலே, இன்றைய முதலமைச்சர் அதற்குக் கடுமையான போராட்டத்தை நடத்தி இருக்கிறாரா? கருநாடக மாநிலம் சென்று பேச்சுவார்த்தை நடத்தப் போகிறேன் என்று சொன்னார். காவிரிப் பிரச்சினையில் இதுவரையில் நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்ததே  கிடையாது .
பேச்சு வார்த்தை நடத்துவதினால், எந்தப் பயனும் கிடையாது; இதுவரையில், பேச்சும், வார்த்தையும் தான் இருந்ததே தவிர, நடைமுறையில் ஒருவிதமான பலனும் இல்லை என்ற அனுபவத்தைக் கொட்டிச் சொன்னார்கள். ஆனால், இவர் கேட்கவில்லை. ஏனென்றால், எல்லாமே காட்சி; மக்கள் விரும்பியது ஆட்சி.  ஆனால், இப்பொழுது நடப்பது, மேனாள் அமைச்சர்கள் எல்லாம் சொன்னதுபோன்று, இது காட்சியாக இருக்கிறது; இதிலிருந்து மீட்சி வர வேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

இளையர்கள் தவறான வழியில் போனால், திருத்த வேண்டிய
கடமை எங்களுக்கு உண்டு
!

எனக்கு 93 வயது என்றார்கள். நான் அதை நினைப்பதில்லை. எந்த வயதாக இருந்தாலும், தமிழ்நாட்டு உரிமைகள் பறிக்கப்படும்போது, ஜன நாயகம் கொச்சைப்படும் போது, கண் தெரிந்தே, மிக மோசமான குழியிலே விழக்கூடாது என்பதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு, மூத்தவர்களுக்கு உண்டு. இளையர்கள் தவறான வழியில் போனால், திருத்த வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.

ஆகவேதான், திருத்துகிற இடத்திலே நாங்கள் இருக்கிறோம்; திருந்த வேண்டிய இடத்திலே நீங்கள் இருக்கிறீர்கள், அதை மறந்துவிடாதீர்கள். இது ஒரு தேர்தல் பிரச்சினை அல்ல; இது ஒரு சமூகப் பிரச்சினை – இது ஒரு தலைமுறைப் பிரச்சினை, அதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *