அய்தராபாத், அக்.6 வாக்குரிமை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கம் என்றும், அதனை தன்னிச்சையாக பறிப்பது குடிமக்களை சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக்குவதற்குச் சமம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் எச்சரித்துள்ளார்.
அய்தராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘‘சாதாரண குடிமகன் நாட்டின் ஆட்சியில் பங்கேற்பதற்கான ஒரே வழி வாக்குரிமை மட்டுமே’’ என்றார். ‘‘எந்தவொரு சாக்குப்போக்கைக் கொண்டும் இத்தகைய தன்னிச்சையான செயல்களை நியாயப்படுத்த முடியாது’’ என்று குறிப்பிட்ட அவர், ‘‘அரசியலமைப்புச் சட்டம் வாக்குரிமை உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என இரண்டு வகையான குடிமக்களை உருவாக்க வழிவகை செய்யவில்லை’’ என்றார்.
மேலும், ‘‘ஒட்டுமொத்தமாக வாக்கு ரிமையை முடக்கும் எந்தவொரு நிர்வாக நடவடிக்கையும் அரசியலமைப்பின் பிரிவு 14 (சமத்துவ உரிமை) மற்றும் பிரிவு 326 ஆகியவற்றை மீறுவதாகும்’’ என அவர் சுட்டிக்காட்டினார். ‘‘இறந்த வாக்காளர்களைத் தவிர, ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு குடிமகனின் பெயரை முறை யான முன்னறிவிப்பு மற்றும் விசார ணைக்கான வாய்ப்பு வழங்காமல் தன்னிச்சையாக நீக்க முடியாது’’ என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயானின் இந்தக் கருத்துகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதை இது காட்டுகிறது’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
உஜ்ஜல் புயானின் கருத்துகள் மூலம், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
