புதுடில்லி, அக். 01- ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி, அக் டோபர் 6-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்’’ என்று இண்டியா கூட்டணி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) தொடர்பாகத் தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நேற்று (30.1.2026) நடைபெற்றது. டெல்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பத்திரி கையாளர்களைச் சந்தித்தனர். அப்போது மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: எஸ்அய்ஆர் மூலம் நாடு முழுவதும் சுமார் 13.3 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அவர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. எஸ்அய்ஆர் நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். வாக்காளர் பட்டியல்களில் அதிக வெளிப்படைத்தன்மை வேண்டும்.
தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகள் வேண்டும். மேலும், எதிர்காலத் தேர்தல்களுக்குச் சிறப்பு வாக்காளர் பதிவுக்கு முந்தைய வாக்காளர் பட்டியல்களைப் பயன்படுத்த வேண்டும். வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கு முன்பு முன் அறிவிப்பு காரணங்கள் மற்றும் ஒரு பயனுள்ள மேல்முறையீட்டு வழிமுறை இருக்க வேண்டும். அரசியலமைப்பின் 324-ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒரு சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தல் ஆணையம் இல்லாமல் நம்பகமான தேர்தல் நடைபெற முடியாது.
இன்று நமது தலைமைத் தேர்தல் ஆணையர் முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளார். அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விஷயத்திலும் நமது நிலைப்பாடு தெளிவாக இருக்க வேண்டும். பாஜக தனது தேவைக்கேற்ப பயன்படுத்த முடிவு செய்யும் இயந்திரங்கள் இவை. எனவே, இந்தியாவின் தேர்தல் அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க, நாம் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும்.
‘ஜனநாயகம் காப்போம்’
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ‘ஜனநாயகம் காப்போம்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும். அதன்படி அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். அக்டோபர் 6-ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் ஆணையத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம்.
அக்டோபர் இரண்டாம் வாரத்தில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் கோருவோம். அவரிடம் தேர்தல் ஆணையம் எவ்வாறு கையகப்படுத்தப்படுகிறது என்பதை விளக்குவோம். மேலும், இந்தப் பிரச்சாரத்தின் 4-ஆம் கட்டத்தில் 5 பெரிய பேரணிகள் நடத்தப்படும். அதற்கான இடங்களும் தேதிகளும் விரைவில் இறுதி செய்யப்படும்.
நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் மிகப்பெரிய பேரணி நடத்தப்படும். அதில் தேர்தல் ஆணையத்தின் ‘வாக்கு திருட்டு’ குறித்து மக்களிடம் விளக்கப்படும். மேலும், எஸ்அய்ஆர் மற்றும் பிற தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தையும் அணுகுவோம். இவ்வாறு கார்கே கூறினார்.
