இராஜா சர் அண்ணாமலை (செட்டியார்) பிறந்தநாள் இன்று (30-09-1881)
இராஜா சர் அண்ணாமலைச் (செட்டியார்) இராமநாதபுரம் மாவட்டம், கானாடு காத்தானில் 30-09-1881 இல் பிறந்தார். இவர்தம் தந்தையார் முத்தையா தாயார் மீனாட்சி அம்மையார். இவர் கரூரில் உள்ள பள்ளியில் சேர்ந்து ஆங்கிலமும் தமிழும் பயின்றார். 1895-இல் பள்ளத்தூர் பழனியப்பன் மகள் சீதையை மணந்தார். 1901–1910 வரை இந்தியா, பர்மா, இலங்கை, மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள், சயாம் முதலிய நாடுகளில் அயராது பாடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டினார். இவர் மிகவும் சுறு சுறுப்புடையவர்; கண்டிப்பானவர்; காலமறிந்து எச்செயலையும் செய்பவர்; கணப்பொழுதும் வீணாக்க மாட்டார்; தொழில் தொடர்பான கணக்குகளைத் தாமே உடனுக்குடன் பார்த்து முடித்துவிடுவார்; தூங்கும்போதும் எழுதுகோலும் குறிப்பேடும் பக்கத்திலேயே வைத்துக்கொள்வார். தமது தொழிலை விரிவுபடுத்த எண்ணி, அதற்கான வழிவகைகளைக் காண 1911–இல் இங்கிலாந்து சென்றார். அங்குத் தாம் கண்டவற்றை நடைமுறைப்படுத்தினார்.
இவர், 1910 முதல் 1913 வரை காரைக்குடி நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார். 1912–இல் டில்லியில் நடந்த அய்ந்தாம் சார்சு மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டார். 1916 முதல் 1919 வரை சென்னைச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1920–இல் இந்திய இம்பீரியல் வங்கியின் சென்னைக் கிளையில் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1921 முதல் 1935 வரை சென்னை அரசாங்க சபையில் உறுப்பினராக இருந்தார்.
1935–இல் பர்மாப் பிரிவுச் சட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று வாதிடச் சென்ற குழுவில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டார்.
இவர் தம் தமையனாரின் உயர்நிலைப் பள்ளியை மீனாட்சி கல்லூரியாக உயர்த்தினார். பின்னர், இம்மீனாட்சி கல்லூரி வளாகத்திலேயே 1927-இல் தமிழ்க் கல்லூரி, வடமொழிக் கல்லூரி, ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றையும், 1928-இல் இசைக் கல்லூரியையும் அமைத்தார். இதற்கென இவர் செலவிட்ட தொகை ஏறத்தாழ இருபது இலட்சம் ஆகும்.
1926-இல் ஆந்திரப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. தமிழுக்கும் அவ்வாறு ஒரு பல்கலைக் கழகம் தேவையென மக்கள் விரும்பினர். அதனால், அப்பணிக்கு இருபது இலட்சம் ரூபாய் அளிக்க முன்வந்தார். அரசாங்கம், இதனைப் பாராட்டி இருபத்தேழு இலட்சம் நிதியும், ஆண்டுதோறும் ஒன்றரை இலட்ச ரூபாய் உதவித் தொகையும் அளிக்க முன்வந்தது. இவ்வாறு மீனாட்சி கல்லூரி அமைந்த இடத்திலேயே அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாகியது.
இவர் கானாடுகாத்தானில் மிகச் சிறந்த மகளிர் மருத்துவமனை ஒன்றை நிறுவினார், இவரது முயற்சியினால் திருச்சியிலிருந்து மானாமதுரைக்குப் புகைவண்டி செல்லும் வழியில் உள்ள ‘செட்டி நாடு’ என்ற பகுதி பல வசதிகளை அடைந்தது.
தில்லையில் நகரப் பெருமக்கள் வசதிக்காக நகரமன்றம், பூங்கா ஆகியவற்றை ஏற்படுத்தினார். இவரது முயற்சியால் சென்னையில் தோற்றுவிக்கப் பெற்ற தமிழிசைச் சங்கம், 1943-ஆம் ஆண்டு முதல் இசைக் கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறது.
இவர் காரைக்குடி நகரசபைத் தலைவராகப் பதவி வகித்து வந்த சமயத்தில், கள்வர் சிலர் இரவில் அஞ்சல் கட்டுகள் கொண்டு செல்லும் குதிரை வண்டியினை வழிமறித்து அவற்றைப் பறித்துச் சென்றுவிட்டனர். இச்செய்தியறிந்த இவர் உடனே சில வேலையாட்களுடன் விரைந்து சென்று, அவற்றைக் கள்வரிடமிருந்து மீட்டார். இதனைப் பாராட்டி இவருக்கு ‘இராவ் பகதூர்’ என்ற விருதினை அரசாங்கம் அளித்தது. இவரது பல்வேறு தொண்டுகளைப் பாராட்டி 1922-இல் ‘திவான் பகதூர்’, அடுத்த ஆண்டில் ‘சர்’ ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவிய இவரது தொண்டினைப் பாராட்டி, 3-6-1929-இல் அன்றைய சென்னை மாநில ஆளுநரால் ‘இராசா’ பட்டம் வழங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகமும் 1932-இல் எல்எல்.டி. (LL.D) என்னும் சிறப்புப் பட்டம் அளித்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1947 இல் டி.லிட் என்னும் சிறப்புப் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தியது. இவர் 15-6-1948 இல் காலமானார்.
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்
இன்று (30.9.1991)
இன்று (30.9.1991)
உலகெங்கிலும் பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day) இன்று (30-09-2026) கொண்டாடப்படுகிறது. இந்தச் சிறப்பான நாள், மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் போற்று வதற்கும், மொழிகளுக்கு இடையேயான புரிந்துணர்வை வலுப்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கி.பி. 347 முதல் 420 வரை வாழ்ந்தவரும், விவிலியத்தை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவருமான புனித ஜெரோம் நினைவு நாளாக செப்டம்பர் 30 திகழ்கிறது. இந்த நாளைச் சிறப்பிக்கும் விதமாக, பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பு (International Federation of Translators – FIT) 1953 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே இதைக் கொண்டாடி வருகிறது.
1991 ஆம் ஆண்டு முதல், இந்த நாள் உலகெங்கிலும் உள்ள மொழிபெயர்ப்பாளர்களிடையே ஒருமைப் பாட்டைக் காட்டும் முகமாக அதிகாரப்பூர்வமாக ‘பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாளாக’ அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
