நீதிபதி – கெஜ்ரிவால் இடையே வலுக்கும் மோதல் 3 வழக்குரைஞர்களை நியமித்து வழக்கை தொடர்கிறது – டில்லி உயர்நீதிமன்றம்

2 Min Read

புதுடில்லி, மே 6 டில்லி மதுபான கொள்கை வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா முன் ஆஜராக முடியாது என, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய நிலையில், நீதிமன்றத்திற்கு உதவ மூன்று மூத்த வழக்குரைஞர்களை நியமித்து வழக்கை தொடர்ந்து நடத்தப்போவதாக டில்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

டில்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் இருந்து டில்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேர் கடந்த பிப்ரவரி 27இல் டில்லி விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்னர்.

இதற்கு எதிராக சி.பி.அய்., சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது.

ஆனால், ‘நீதிபதி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் என்பதாலும், அவரது பிள்ளைகள் ஒன்றிய அரசின் வழக்குரைஞர்களாக பணியாற்றுவ தாலும் இந்த வழக்கை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா விசாரிக்க கூடாது’ என, கூறி டில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வு முன்பாகவே விசாரிக்கப்பட்டது.

‘அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைக்கும் சந்தேகங்கள் ஏற்புடையதாக இல்லை’ எனக் கூறி வழக்கு விசாரணையில் இருந்து விலக நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த நீதிபதி முன்பாக வழக்கு விசாரணைக்காக ஆஜராகப் போவதில்லை என்றும், இதற்காக சிறை செல்லவும் தயாராக இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிஷோடியா ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்ததது. அப்போது, ‘இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூன்று மூத்த வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வரும் 8ஆம் தேதி அந்த வழக்குரைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். அதன் பின்னர் சி.பி.அய்., தரப்பு வாதங்களை நீதிமன்றம் கேட்கும்’ என, நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா தெரிவித்தார்.

விசாரணையைப் புறக்கணித்துள்ள நிலையில், நீதிமன்றம் சுயமாக மூத்த வழக்குரைஞர்களை நியமித்து வழக்கை நடத்த முடிவு செய்திருப்பது சட்டத்துறை வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *