புதுடில்லி, செப்.28 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான முக்கிய முடிவுகளை, தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக எடுத்த தாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் ஆணையர்களுக்கு இடையே கடும் கருத்து வேறு பாடு நிலவுவதாகவும் கூறப் பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், எஸ்.அய்.ஆர் தொடர்பான அனைத்து முடிவுகளும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணை யர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகி யோரால் ஒருமனதாகவே எடுக்கப்பட்டதாக 26.9.2026 அன்று விளக்கமளித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்தை நிராகரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு நேற்று (27.9.2026) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் எஸ்.அய்.ஆர் குறித்து எழுந்துள்ள அடிப்படை மற்றும் முக்கியக் கேள்விகளுக்கு ஆணையம் தெளிவான பதிலளிக்கவில்லை.
தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும், சட்டப் படியும் நடைபெறுகின்றனவா என்பதும், தகுதியுள்ள வாக் காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருக்க போதுமான பாது காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளவா என்பதே தற்போதைய முதன்மைப் பிரச்சினையாகும்.
இப் பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; இல்லையெனில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சிபிஎம், தற்போது நடைபெற்று வரும் எஸ்.அய்.ஆர் (SIR) நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்தல்
Leave a Comment
