புதுடில்லி, செப்.26 வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகள் தொடர்பாக, தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் தன் மீதான சந்தேகங்களைப் போக்கி, நிலைமையைத் தெளிவுபடுத்த உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ஜ.க தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஒன்றிய அமைச்சரும், எல்.ஜே.பி. (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறுகையில், “தேர்தல் அமைப்பு மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பது நமது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ராகுல் காந்தி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பும் கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், பொதுமக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்கும் வகையில் வலுவான விளக்கத்தை ஆணையம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதேபோல், தெலுங்கு தேசம் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் லவு சிறீகிருஷ்ண தேவராயலு, “தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது கேள்விகள் எழும்போது, அமைப்பின் வெளிப்படைத்தன்மையைப் பேணிக் காக்கவும், மக்கள் வைத்திருக்கும் நம்பிக் கையை மேலும் வலுப்படுத்தவும் உரிய விளக்கமளிப்பது அவசியமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான உபேந்திர குஷ்வாஹா, தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில் தேர்தல் ஆணையத்தை டேக் செய்து, “எஸ்.அய்.ஆர். பணிகள் தொடர்பாக எழுந்துள்ள இந்தச் சர்ச்சை பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. எனவே, நிலைமையைச் சீரமைக்கவும் தெளிவுபடுத்தவும் தேர்தல் ஆணையம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையைக் காக்க, ஆளும் கூட் டணியில் உள்ள முக்கியத் தலைவர்களே அதிகாரப்பூர்வ விளக்கத்தைக் கோரி யிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
