புதுடில்லி, செப். 26 தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரியும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் தில்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவர் சங்கத் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலரை டில்லி காவல்துறை கைது செய்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.அய்.ஆர்.) மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் தேர்தல் வெளிப்படைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) டில்லி மாநிலத் தலைவர் நேஹா போரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (விடுதலை) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட பல தலைவர்களும் மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு டில்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை எனக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்தில் ஏற்பட்டுள்ள உள்விவகாரங்கள் மற்றும் அதிருப்திக் குறிப்புகள் வெளி வந்துள்ள நிலையில், ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றத் தவறிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கைது நடவடிக்கைகளைக் கண்டித்து ஜனநாயக முறையில் போராட்டங்கள் தொடரும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் மாணவர் அமைப் புகளும் எச்சரித்துள்ளன.
