வி.சி.வில்வம்
‘இயக்கத்தில் இயங்குவதற்கு வேறெதுவும் தடையாக இருப்பதில்லை. நாமே தடையாக இருந்தால் தான் உண்டு. வாரத்திற்கு இரண்டு நாள்களையாவது சமூகத்திற்குக் கொடுங்கள்’ என்பார் ஆசிரியர். சிலர் பொருளாதார உதவி செய்யலாம், சிலர் உழைப்பைத் தரலாம், சிலரோ நிகழ்வில் பங்கேற்கலாம், ஆக ஏதோ ஒரு வடிவத்தில் இந்தச் சமூகத்திற்கு நாம் பயன்பட வேண்டும். அந்த வகையில் எந்தப் பணியில் இருந்தாலும் சிலர் இயக்கப் பணியைத் தொய்வில்லாமல் தொடர்வார்கள். அப்படியான பெரியார் தொண்டர் மு.நற்குணம் அவர்களை இந்த வாரம் ‘விடுதலை’ ஞாயிறு மலருக்காகச் சந்திப்போம்!
அய்யா வணக்கம்! தாங்கள் பிறந்த ஊர் எது?
திருச்சிதான் எனது சொந்த ஊர். குறிப்பாக வரகனேரி பகுதியில் பிறந்தேன். தந்தை பெரியார் அவர்கள்தான், நற்குணம் என எனக்குப் பெயர் வைத்தார்கள். வயது 82 ஆகிறது. பெற்றோர் பெயர் ஜோதி-முத்துச்சாமி. தந்தையார் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மளிகைக் கடை வைத்திருந்தார். அந்தக் கடைக்கு நீதிக்கட்சித் தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பெயரைச் சூட்டியிருந்தார். கடையில் பெரியார் படம் மாட்டியிருப்பார். “மானமுள்ள தமிழர்களே தீபாவளி கொண்டாடலாமா?” எனத் தீபாவளி அன்றே கடையில் எழுதி வைத்திருப்பார்.
ஓ… உங்கள் தந்தையாரே இயக்கத்தில் தீவிரமாக இருந்தவரா?
ஆமாம்! எங்கள் தாத்தா தொடர்வண்டியில் ஓட்டுநராக (Loco Pilot) இருந்தவர். ஆன்மீகத்தில் திளைத்த குடும்பம். ஆனால் எனது தந்தையார் பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, இறுதி வரை உறுதியாக இருந்தவர். ஜாதி மறுப்புத் திருமணம் தான் செய்வேன் எனப் பிடிவாதமாகச் செய்தவர். திருச்சியின் புகழ்பெற்ற ஜிவிஎன் மருத்துவமனை விஸ்வநாதன் அவர்களின் சகோதரர் சந்திரகாசன் மூலம் பெண் பார்த்தார். ஜெயங்கொண்டம் திராவிடர் கழகத் தோழர் பாஸ்கர் அவர்களின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். ஜெயங்கொண்டத்தில் தந்தை பெரியார் தலைமையில் இந்நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது. நமது ஆசிரியர் அவர்கள் தமது 11 ஆவது வயதில் இந்தத் திருமணத்தில் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தாத்தா, அப்பா அனைவருக்குமே சோமரசன்பேட்டை தான் சொந்த ஊர். பார்ப்பனர்கள் அதிகம் வசித்த பகுதி. குஞ்சண்ணன், சுந்தரம், சடையன், தாண்டவன் உள்ளிட்ட பலரும் அப்பகுதியில் பெரியார் கொள்கையில் இருந்தவர்கள். இவர்கள் மூலமே எனது தந்தையாரும் 25 ஆவது வயதில் இயக்கத்திற்கு வந்தார். பச்சை அட்டை குடிஅரசு வாங்கிப் படித்தவர். தந்தை பெரியாரே இரண்டு மாநாடுகளை இந்தப் பகுதியில் நடத்தியுள்ளார்.
தங்களின் கல்வி மற்றும் பணி குறித்துக் கூறுங்கள்?
திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் மேல்நிலை வகுப்பு முடித்தேன். பின்னர் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1965 இல் சேர்ந்தேன். படிப்பு முடிந்ததும் 1968 ஆம் ஆண்டு பள்ளக்காடு பகுதியில் முதல் பணி. இறுதியாகக் குமாரவயலூரில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். மாணவராக இருந்த போதே, 1962 ஆம் ஆண்டு தமிழர் உணவு விடுதி கருப்பண்ணனும், நானும் இணைந்து தந்தை பெரியாரை வைத்து சோமரசன்பேட்டையில கூட்டம் நடத்தி யுள்ளோம். அது ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம். வீட்டு வாசலில் மூங்கில் தட்டியை வைத்து, தினமும் பெரியாரின் கருத்துகளை எழுதிப் போடுவேன். சிறீரங்கம் ‘பிராமணாள் கபே’ ஒழிப்புப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளேன்.
அந்தச் சமயத்தில் குஞ்சையா, சிவராமன், கைலாசம், சீனிவாசன், ரங்கராஜ், ரத்தினவேலு, முத்துக்கருப்பன், தேவன், ஜோசப், ராஜ், தைரியம், புலவர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான தோழர்களுடன் நானும் இணைந்து பணியாற்றுவேன். அந்தக் காலத்தில் பெரியார் தொண்டர் ஒருவரின் பெயர் “வணக்கம்”.
பணிக்கு வந்த பிறகும் தொடர்ந்து இயக்கப் பணிகள் செய்தேன். சோமரசன்பேட்டையில் கழகப் பேச்சாளர்கள் பலரையும் அழைத்துக் கூட்டம் நடத்தியுள்ளோம்.
பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் மாணவராக இருந்த போது, துரை.சக்ரவர்த்தியை அழைத்தும் நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். பெரியார் வாசகங்களைக் “காடா துணியில்” எழுதி ஊர்வலத்தில் எடுத்துச் செல்வோம். ஆசிரியர் பணிக்குப் பாதிப்பு வரும் சூழல் எல்லாம் வந்தது. பள்ளிக் கூடத்தில் சுதந்திர நாளன்று காங்கிரஸ் கொடி கொடுப்பார்கள். நான் மறுத்துவிடுவேன். சில ஆண்டுகளில் கருப்புக் கொடி குத்தியும் பள்ளிக்குச் சென்றுள்ளேன்.
ஆசிரியர் பணியில் இருந்த போது செயல்பட்ட ஏனைய கழகப் பணிகள் குறித்தும் நினைவு கூறுங்கள்?
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக, அனைத்திந்திய வானொலி நிலையம் முன்பு எச்.ராஜா உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். நாங்கள் உண்ணும் போராட்டம் நடத்தினோம். அப்போது மாவட்டத் தலைவராகக் கோமாகுடி பிச்சையப்பா, செயலாளராகக் காட்டூர் அரங்கராசு இருந்தார்கள். துணைச் செயலாளராக நான் இருந்தேன். இப்போது தொழிலாளரணி மாநிலச் செயலாளராக இருக்கும் மு.சேகர் துணிச்சலான சில நடவடிக்கைகள் எடுத்தார். எனவே போராட்டத்தைப் பாதியில் முடித்துவிட்டு, எச்.ராஜா புறப்பட்டுப் போனார்.
மணிகண்டம் ஒன்றியம் சார்பாக 1991 ஆம் ஆண்டு சோமரசன்பேட்டையில் தந்தை பெரியாருக்குச் சிலை வைத்தோம். ஆசிரியர் அவர்கள் தான் திறந்து வைத்தார்கள். அந்நிகழ்ச்சியில் கோ.சாமிதுரை அவர்களும் கலந்து கொண்டார்கள்.
மம்சாபுரத்தில் ஆசிரியர் தாக்கப்பட்ட போது எனது உணர்வுகளை “ஆசிரியர் கடிதம்” பகுதியில் ‘விடுதலை’யில் எழுதியிருந்தேன்.
மற்றுமொரு முக்கியமான ஒரு விசயத்தை மக்கள் ஆதரவோடு செய்து முடித்தோம். அப்போது பாவேந்தர் மன்றத்தின் தலைவராக நான் இருந்தேன். சோமரசன்பேட்டையில் கோயில் தேர் வரும். சிரமப்பட்டு பக்தர்கள் இழுத்து வருவர். அந்தத் தேரில் நான்கைந்து பார்ப்பனர்கள் அமர்ந்து வருவார்கள். உடனே நாங்கள் சென்று, “ஏன் தேரில் அமர்ந்து வருகிறீர்கள், மக்களோடு நடந்து வாருங்கள்”, என்றோம். பக்தர்களும் இதை ஆமோதித்தனர். உடனே பார்ப்பனர்கள், இப்படிச் சொன்னால் கோயிலில் அர்ச்சனை செய்ய மாட்டோம் என்றார்கள். பரவாயில்லை என அங்கிருந்த மக்களும் கூறவே, வேறு வழியின்றிப் பார்ப்பனர்கள் தேரில் இருந்து இறங்கி நடந்து வந்தனர். இந்தச் செய்தி ‘விடுதலை’ நாளிதழிலும் பதிவாகியுள்ளது.
சோமரசன்பேட்டையில் ஏராளமான இயக்கப் பணிகள் நடந்துள்ளதே?
ஆமாம்! ஆசிரியரை அழைத்துப் பலமுறைக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம். மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் நடந்துள்ளது. திருச்சி மாவட்டத் துணைச் செயலாளர், மண்டலச் செயலாளர், மண்டலத் தலைவர், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளேன். ஆசிரியருக்கு 1997 ஆம் ஆண்டு தஞ்சையில் எடைக்கு எடைத் தங்கம் கொடுத்தார்கள். சோமரசன்பேட்டை சார்பில் நாங்களும் தங்கம் சேகரித்துக் கொடுத்தோம். நிகழ்ச்சியன்று தோழர் பழனியம்மாள் (தாமஸ்) தங்கத்தால் ஆன, சிலுவைப் பொறித்தத் தாலியைக் கழற்றி மேடையில் கொடுத்தார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும் இனாம்குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து, எதிர்ப்பைப் பதிவு செய்தோம். மம்சாபுரத்தில் ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்துப் பெரியளவில் கண்டனக் கூட்டம் நடத்தினோம். அப்போது திருச்சி மாவட்ட அமைப்பாளராக இருந்த பி.வி.இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல சுவரெழுத்துகள் அதிகம் எழுதுவோம்.
தங்களின் திருமணம் குறித்துக் கூறுங்கள்?
1972 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில், திருச்சி பெரியார் மாளிகையில் எங்கள் திருமணம் நடைபெற்றது. இணையர் பெயர் மல்லிகா. “மனிதன் என்றாலே மற்றவர்களுக்கு உதவுவதற்குப் பொதுத் தொண்டு செய்கின்றவனாக இருக்க வேண்டும். தனக்கும், தனது பிள்ளைக்குட்டி, மனைவியைக் காப்பாற்றத்தான் என இருக்கக் கூடாது”, எனத் தந்தை பெரியார் எங்கள் திருமணத்தில் பேசினார். இச்செய்தி 21.04.1972 ஆம் நாளில் விடுதலையில் வெளிவந்துள்ளது.
அதேபோல, “அய்ந்து ஆண்டுகளுக்குக் குழந்தைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்”, என்றும் பெரியார் கூறினார். அவர் சொன்னதைப் போல நாங்களும் அய்ந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தைகள் பெற்றுக் கொண்டோம்.
மகளின் பெயர் பகுத்தறிவு தேவி. மகனின் பெயர் அறிவுச்சுடர். பையனுக்கு ஆசிரியர் அவர்களும், பெண்ணுக்குக் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் திருமணம் செய்து வைத்தார்கள். எனது தந்தையார், நான், எனது இரண்டு பிள்ளைகள் என அனைவருமே ஜாதி மறுப்புத் திருமணம் தான் செய்து கொண்டோம். மகள் திருமணத்தின் போது ஆசிரியர் அவர்கள் வெளிநாட்டில் இருந்ததால் பங்கேற்க இயலவில்லை. பிறகு வீட்டிற்கு வந்து சிறப்பு செய்தார்கள். எங்களின் புதிய வீடான “பகுத்தறிவு” இல்லத்தையும் 1993 ஆம் ஆண்டு ஆசிரியர் தான் திறந்து வைத்தார்கள்”, எனத் தம் பழைய நினைவுகளை எல்லாம் மு.நற்குணம் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
