தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பள்ளி மாணவி களிடம் மிட்டாய்களை வீசிய கேரள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர். மிட்டாய்களைக் கையில் கொடுத்தால் தீட்டாகிவிடுமாம்.
கேரளாவில் பள்ளி விழாவின் போது மாணவர்களின் மேசைகளில் மிட்டாய்களைத் தூக்கிப் போட்ட பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சட்டமன்ற உறுப்பினர் வி.முரளீ தரனின் செயலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இது தொடர்பான காணொலி இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கேரளாவில் உள்ள கட்டேலா நகர் சட்டமேதை அம்பேத்கர் நினைவு மாதிரி குடியிருப்பு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘பிரவேசனோத்சவம்’ (பள்ளி வரவேற்பு விழா) நிகழ்ச்சியில்தான் இந்த தீண்டாமைக்கொடுமை நடந்துள்ளது.
வைரலான அந்த காட்சிப் பதிவில், சட்டமன்ற உறுப்பினர் முரளீதரன் மாணவர்களின் கைகளில் மிட்டாய்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒரு கவரில் இருந்து மிட்டாய்களை எடுத்து அவர்களின் மேசைகளின் மீது தூக்கிப் போடுகிறார்.
இந்தத் தீண்டாமைக் கொடு மைக்கு முன்னாள் பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி உள்பட பல தரப்பினரிடமிருந்தும் உடனடி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
கழக்கூட்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.முரளீதரனின் இந்த செயல் “பாகுபாடானது மற்றும் வெட்கக்கேடானது” என்று குறிப்பிட்ட சிவன்குட்டி, அவர் இதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் பயிலும் ஒரு கல்வி நிறுவனத்தில், மாணவர்களிடம் முரளீதரன் எவ்வாறு இப்படி நடந்து கொள்ளலாம் என்று அவர் கேள்வி எழுப்பினார். “இது மாணவர்களின் கண்ணியத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி, அவர்களின் மனதில் இது நீங்காத வடுக்களை ஏற்படுத்தும்” என்று கூறிய சிவன்குட்டி, “விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் காட்டப்படும் இத்தகைய பாகுபாட்டை ஒருபோதும் சாதாரணமாக கடந்துவிட முடியாது” என்றும் சேர்த்துக் கூறினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் வீணா ஜார்ஜும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ‘இதானா பாஜகவின் நவீன தீண்டாமை முகம்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் (Facebook) பதிவில், ‘இந்தச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார். “உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள், இதில் எந்தத் தவறும் இல்லாதது போலவும், மவுனம் காப்பதும் குற்றவியல் தனமானது” என்று அவர் சாடியுள்ளார்.
ஒரு சட்டமன்ற உறுப்பினரே ஒளிப்படக் கருவிக்கு முன்பு தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார். இந்நேரம் அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இவர் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் வாழும் மாநிலம் என்று பெயரெடுத்த கேரள மாநிலத்தில் நடந்த கொடுமையை எண்ணும்போது எந்த அளவு முற்போக்கு மாநிலமாக இருந்தாலும் பாஜக, ஹிந்துத்துவ நடைமுறையை அங்கேயும் காட்டி ஸநாதனத்தை காப்பதில் எவ்வளவு உறுதி காட்டுகிறது என்பது தெரிகிறது. இதில் காங்கிரஸ் அரசும் இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது.
