முனைவர் நம்.சீனிவாசன்
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (நிகர்நிலை) தந்தைபெரியாரின் பிறந்த நாள் விழா செப்டம்பர் 15 முதல் 21 வரை ஒரு வாரம் நடைபெற்றது.
15 ஆம் தேதி நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில் தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை குறிக்கும் வகையில் விளையாட்டு மைதானத்தில் 2500 மாணவர்கள் கூடி நின்று, PERIYAR 148 என்ற எழுத்துருவாக்கத்தை அமைத்தனர். புலத் தலைவர் டாக்டர் ம.சந்திர குமார் பீட்டர் நிகழ்வை ஒருங்கிணைத்தார். பல் கலைக்கழகத்தின் இணைத் துணை வேந்தர் டாக்டர் இரா.மல்லிகா அவர்கள் கொடி அசைத்து எழுத்துருவாக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

தந்தை பெரியார் ஒரு சகாப்தம்
16 ஆம் தேதி இரண்டாம் நாள் நிகழ்வுகளாக கருத்தரங்கமும் கவியரங்கமும் நடைபெற்றன.
“தந்தை பெரியார் ஒரு சகாப்தம்” என்ற தலைப்பில் அய்ன்ஸ்டீன் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்குத் தகவலியல் துறைத் தலைவர் பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார்.
‘தந்தை பெரியாரின் வாழ்விலே… ‘என்ற தலைப்பில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் சு அருண் முருகனும்,
‘தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை’ என்ற தலைப்பில் இளங்கலை முதலாம் ஆண்டு அரசியல் அறிவியல் துறை மாணவி மா. சந்தியாவும்,
‘இதழாளர் பெரியார்’என்ற தலைப்பில் இளங்கலை மூன்றாம் ஆண்டு இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், மொழிகள் துறை மாணவி க.முத்தரசியும்,
‘தந்த பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்’ எனும் தலைப்பில், கட்டடவியல் துறைப் பேராசிரியர் சி. செந்தமிழ்க் குமாரும் உரையாற்றினர்.
இளங்கலை மூன்றாம் ஆண்டு தகவலியல் மாணவி பூ. அருணிகா வரவேற்புரை நிகழ்த்தினார். இளங்கலை இரண்டாம் ஆண்டு தகவலியல் துறை மாணவர் சி.பிரவின் காந்த் நன்றியுரை கூறினார்.
போராளி பெரியார்
“போராளி பெரியார்”என்ற தலைப்பில், கவிஞர் வல்லம் தாஜூபால் தலைமையில் லீ கார்பூசியர் அரங்கில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர்கள் கவிதை பாடி கருத்துகளை விதைத்தார்கள்.
‘ஜாதி ஒழிப்புப் போராட்டம்’ என்ற தலைப்பில் மொழிகள் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் து.உமா மகேஷ்வரியும், ‘வைக்கம் போராட்டம்’ என்ற தலைப்பில் அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இர. சாம்ராஜாவும், ‘குலக்கல்வி ஒழிப்புப் போராட்டம் ‘என்ற தலைப்பில் மொழிகள் துறை உதவிப் பேராசிரியர் க.பவதாரணியும், ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்’ என்ற தலைப்பில் இளங்கலை இரண்டாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் துறை மாணவி மு.அபிநயாவும் கவிதை வாசித்தனர். இளங்கலை முதலாம் ஆண்டு அரசியல் அறிவியல் துறை மாணவி எ. டீனா மேரியன் வரவேற்புரை கூறினார். இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி ரா. ஷைனி கிருஷ்ணன் நன்றியுரை கூறினார். அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ர.சிவாஜி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

கல்வி சொல் அல்ல; ஆயுதம்
செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் ஊடகவியலாளர் கார்த்திகைச் செல்வன் ‘கல்வி சொல் அல்ல; ஆயுதம் ‘ எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். அவர்தம் உரையில்,
” தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி பெற்று இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. முதல் தலைமுறையாக பலர் கல்லூரிக்குள் நுழைந்திருக்கிறார்கள்; வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். அறிவு என்பது பிறப்பால் வருவதில்லை. சென்னை அய்.அய்.டி இயக்குநராக இருப்பவர் காமகோடி. 10ஆம் வகுப்பு வரை சாதாரணமாக இருந்தார். சந்திராயன் திட்டத்தில் வெற்றி கொடி நாட்டியவர் வீர முத்துவேல். அவர் சாதித்துக் காட்டினார். அதற்குக் காரணம் கல்வி. பிள்ளைகள் கற்ற கல்வியால் பெற்றோர்களின் அவமானம் துடைக்கப்பட்டு இருக்கிறது. பெற்றோர்களின் சுயமரியாதை நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. கல்வி எல்லாவற்றையும் மாற்றும். பணம் தேவையில்லை; அதிகாரம் தேவையில்லை; கல்வியில் இருந்தால் போதும். அது எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தும். கல்வி மிகச் சிறந்த ஆயுதமாக இருக்கிறது. யாரையும் காயப்படுத்தாத கல்வி அறிவாயுதம்” என்று குறிப்பிட்டார்.
விழாவிற்கு பல்கலைக்கழக இணைத் துணை வேந்தர் முனைவர் இரா.மல்லிகா தலைமை வகித்தார். பதிவாளர் சிறீவித்யா அவர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி கூற அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கூறி உறுதி மொழி ஏற்றனர்.
விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடை யே நடைபெற்ற பேச்சுப் போட்டியில், கும்பகோணம், அரசு ஆடவர் கல்லூரி மாணவர் ம.காவியா முதல் பரிசினையும், திருவையாறு, அரசர்கல்லூரி மாணவர் செ. வசந்தகுமார் இரண்டாம் பரிசினையும், கும்பகோணம்,அரசினர் ஆடவர் கல்லூரி மாணவர் பா. ச. வைஷாலி மூன்றாம் பரிசினையும் பெற்றார்கள்.


கட்டுரைப் போட்டி
அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர் நீ. கல்பனா முதல் பரிசினையும், பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர் லக்ஷிதா இரண்டாம் பரிசினையும், தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி மாணவி நா.காவியா மூன்றாம் பரிசினையும் பெற்றார்கள்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக (நிகர்நிலை) மாணவர் களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டியில், இளங்கலை முதலாம் ஆண்டு அரசியல் அறிவியல் துறை மாணவி எ.டீனா மேரியன் முதல் பரிசினையும், இளங்கலை முதலாம் ஆண்டு அரசியல் அறிவியல் துறை மாணவி மா.சந்தியா இரண்டாம் பரிசினையும், இளங்கலை மூன்றாம் ஆண்டு அரசியல் அறிவியல் துறை மாணவி சி. ஹர்ஷினிமூன்றாம் பரிசினையும் பெற்றார்கள்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக (நிகர்நிலை) மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியத் துறை மாணவி டி. கிருத்திகா முதல் பரிசினையும், இளங்கலை இரண்டாம் ஆண்டு கணினிப் பயன் பாட்டியல் துறை மாணவி உ. திவ்ய பிரபா இரண்டாம் பரிசினையும், இளங்கலை இரண்டாம் ஆண்டு அரசியல் அறிவியல் துறை மாணவி ஜெ. கார்த்திகா மூன்றாம் பரிசினையும் பெற்றார்கள்.

பெரியார் சமுதாய வானொலி 90.4
பெரியார் சமுதாய வானொலி 90.4 புத்தகத் திறனாய்வுப் போட்டியை நடத்தியது.
தந்தை பெரியார் எழுதிய, “பெண் ஏன் அடிமை யானாள்?”, “இனி வரும் உலகம்” இரண்டு நூல்களை திறனாய்வு செய்து மாணவர்கள் உரையாற்றினார்கள்.
முதல் பரிசு இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி எஸ். சிறீஹரிணி, இரண்டாம் பரிசு இரண்டாம் ஆண்டு அரசியல் அறிவியல் துறை மாணவி ஜா.ஜெனிலியா ஜான்சி, மூன்றாம் பரிசு முதுகலை இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி ஏ.சிறீநிதி பெற்றார்கள்.
விழாவிற்கு வந்திருந்தோரை முதுகலை முதலாம் ஆண்டு கணிதத் துறை மாணவி க.வர்ணிகா சிறீ வரவேற்றார். இளங்கலை மூன்றாம் ஆண்டு உயிரி தொழில்நுட்பத் துறை ர.சிறீபத்மாவதி நன்றியுரை கூறினார். முதுகலை முதலாமாண்டு கணிதத்துறை மாணவி ஆ.யாழிசை இணைப்புரை வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கணிதத் துறைத் தலைவர் பா.நி.சுதா மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இணை பேராசிரியர் இர.சாம்ராஜா.
தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் 148 மரக்கன்றுகள் நடப்பட்டன. இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ் சுருள் சங்கம் இணைந்து நடத்திய குருதிக்கொடை முகாமில் 110 மாணவர்கள் குருதிக் கொடை வழங்கினர். தஞ்சாவூர் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் வருகை புரிந்திருந்தனர்.


பட்டிமன்றம்
செப்டம்பர் 18 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவின் நான்காம் நாள் கொண்டாட்டமாக கருத்தாழமிக்க பட்டிமன்றம் நடைபெற்றது. தந்தை பெரியாரின் கொள்கைகள் பெரிதும் வென்றிருப்பது பெண்ணுரிமையிலே! சமூகநீதியிலே! எனும் தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு பூண்டி புஷ்பம் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் சிவாஜி கபிலன் நடுவராக இருந்து கருத்துரை வழங்கினார்.
பெண் விடுதலையே! எனும் தலைப்பில் அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கா. செல்வக்குமாரும், அரசியல் அறிவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் மா. சந்தியாவும் கருத்துரை வழங்கினார்கள்.
சமூக நீதியே! எனும் தலைப்பில் இளங்கலை மூன்றாம் ஆண்டு இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை மாணவர் க.தங்கமணியும், இளங்கலை இரண்டாம் ஆண்டு அரசியல் அறிவியல் துறை மாணவி ஜா. ஜெனிலியா ஜான்சியும் வாதங்களை எடுத்து வைத்தார்கள்.
இளங்கலை இரண்டாம் ஆண்டு மேலாண்மை யியல் துறை மாணவர் சம்சுதீன் நன்றியுரையாற்றினார். மொழிகள் துறை, தமிழ் மன்றம், உதவிப் பேராசிரியர் முனைவர் ந.லெனின், முனைவர் த.சுசீலா ஒருங்கிணைப்பாளர்களாக செயலாற்றினர்.

கலை நிகழ்ச்சிகள்
செப்டம்பர் 21 அன்று அய்ந்தாம் நாள் நிகழ்ச்சியாக பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கின்ற திருப்பத்தூர் ஏ.டி.கோபால் பூங்கா திறந்தவெளி அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலாண்மையியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் க.பத்மினி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். அய்ந்து நாட்கள் நடைபெற்ற பெரியார் வாரம் நிகழ்ச்சிகளை உதவிப் பேராசிரியர் இர.சாம்ராஜ் ஒருங்கிணைப்பு செய்தார்.
