பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்தநாள் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசளிப்பு மற்றும் மனிதநேயத்தை முன்னிறுத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்

5 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திருச்சி, செப். 23- திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்தநாள் சமூகநீதி நாள் சிறப்புக்கருத்தரங்கம் மற்றும் கலை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசளிப்பு விழா 15.092026 அன்று மாலை 2.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றினார். அவர் தமது உரையில் இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, ஜாதிப்பற்று என்ற எந்தப் பற்றும் இல்லாமல் மானுடப் பற்று ஒன்றை மட்டுமே தம் வாழ்நாள் குறிக் கோளாகக் கொண்டு தம் இறுதி மூச்சு வரை வாழ்ந்த ஒப்பற்றத் தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் என்றும் எவர் சொல்வதையும், ஏன், நானே சொன்னாலும் உன் அறிவுக்கு சரி என்று பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள் என்று சொன்ன ஒரு தலைவரை உலக அளவில் இன்று வரை பார்க்க முடியாது.

கொள்கைகள் – கருத்துகள்

அதனால்தான் அய்யா மறைந்து அரை நூற்றாண்டுக்கு  மேலானபோதிலும் இன்றும் அவரது கொள்கைகள், கருத்துகள் நமக்கு வழிகாட்டுபவையாக, தேவைப்படு பவையாக இருக்கின்றன. அய்யா அவர்களின் மறைவிற்கு பிறகு அவர் போட்டுத்தந்த பாதையில் சிறிதும் அடிபிறழாது தமது 93 வயதிலும் சமூகநீதியின் வெற்றிக்கு பாடுபட்டு வரும் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் தலைமையில் நாம் இணைந்திருப்பதில் பெரும் வாய்ப்பும் மகிழ்வும் அடைய வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

தியாகத்திற்கு நன்றி
செலுத்தும் விழா

பிறந்த நாள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் ஜாஃபர் அஹமத் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா என்பது அவர் செய்த தியாகத்திற்கு நன்றி செலுத்தும் விழா. பொதுவாக பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடுவது என்பது நம்மை நாம் புதுப்பித்துக் கொள் வதற்காகத்தான். ஆனால் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் மனிதன் அனைத்து உரிமைகளை பெற்று தன்மானத்துடன் வாழ்வும், பெண்கள் ஒதுக்கப்பட்டவர்களாக, ஓரங்கட்டப்பட்டவர்களாக இருந்த சூழ்நிலையை அடிகோடு மாற்றி அவர்களுக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தந்த பெருமைக்குரிய தந்தை பெரியார் அவர்களுக்கு நன்றி செலுத்தவும் அவரது கொள்கைகளை இளைய சமுதாயத்திடம் கொண்டு செல்லவும் அனைவரும் கொண்ட வேண்டும். சுணக்கி முடியாத ஜாதிய பாகுபாடுகள் நம் நாட்டில் இருந்தாலும் இன்றும் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று சொன்னால் அது தந்தை பெரியார் விதைத்த மனிதநேய விதைதான்.

கல்வி – வேலைவாய்ப்புகள்

இன்றைக்கு இருக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அனைத்தும் எளிமையாக கிடைக்கின்றது. ஆனால் அதற்குப் பின்னால் பல தலைவர்களின் தியாகங்கள் இருக்கின்றன என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். பெயருக்குப் பின்னாலும், தெருக்களுக்கும் ஜாதியப் பெயர்களை சூட்டிய சமூகத்தில் இன்று அனைவரும் சமமாக இருக்கிறோம் என்றால் அது தந்தை பெரியாரின் சமூகப் புரட்சிக்கு கிடைத்த வெற்றி. ஆனால் இன்று செல்பேசி என்ற சாதனத்தால் தம் சுய சிந்தனையை, அறிவை, ஞாபகத் திறனை இளைய சமுதாயம் இழந்திருக்கின்றது என்பதுதான் உண்மை. சுயமாக சிந்தியுங்கள் அப்போதுதான் புதிய கண்டுபிடிப்புகளும் புரட்சிகளும் உருவாகும். அதனைத் தான் தந்தை பெரியார் அவர்களும் விரும்பினார்கள் அய்யா விரும்பிய அறிவியல் புரட்சிகளை உருவாக்கும் மாணவர்களாக அனைவரும் உருவாக வேண்டும் என்று கூறி நிர்வாக இட ஒதுக்கீட்டின் கீழ் 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கை பெற்ற 156 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையினை வழங்கியதோடு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் கவிதைப்போட்டி, இந்திய மருந்தியல் ஆசிரியர்களுக்கான கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் நடை பெற்ற மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், கலை மற்றும் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.

கலைப் போட்டிக்கான ஒட்டு மொத்த வாகையர் பட்டத்தை மூன்றாம் ஆண்டு இளநிலை மருந்தியல் மாணவர்களும், விளையாட்டுப் போட்டிக்கான ஒட்டுமொத்த வாகையர் பட்டத்தை நான்காம் ஆண்டு இளநிலை மருந்தியல் மாணவர்களும் பெற்றனர். பரிசுகள், பாராட்டுகள் மற்றும் உதவித்தொகைகள் என பெரும் சிறப்போடு நடை பெற்ற இவ்விழாவில் சமூகநீதி நாள் உறுதிமொழியினை அனைவரும் ஏற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கு.சக்திவேல் நன்றி கூறினார்.

மாபெரும் சிறப்பு
மருத்துவ முகாம்

மனிதநேயத்தை முன்னிறுத்தும் வகையில் பெரியார் மருத்தியல் கல்லூரி, பெரியார் மருத்துவக் குழுமம், அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் தி அய் பவுண்டேஷன் இணைந்து மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை 16.09.2026 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தியது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் பொதுமருத்துவம், கண் பரிசோதனை, பல் பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, இதய செயல்பாடுகளை அறியும் சுருள் படம் (ECG), இரத்தச் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் கண்டறிதல் போன்ற பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டது.

அப்போலோ சிறப்பு மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் சந்தோஷ்குமார் மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் முனவர் கல்தானா ஆகியோர் தலைமையில் பொது மருத்துவ முகாம், டாக்டர் எல்சி தலைமை யில் பல் மருத்துவமுகாம், தி அய் பவுண்டேஷன் கண் மருத் துவ மனையின் ஆப்டோ மெட்ரிஸ்ட் அமுதா சிறீ தலைமையில் கண் பரிசோதனை முகாமும் நடை பெற்றது. இம்மருத்துவ முகாமில் அப்போலோ மருந்தக மேலாளர் வேணுகோபால் தலைமையில் மருந் தகக் கண்காட்சியும் இடம்பெற்றது.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்த இம்மருத்துவ முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அப்போலோ மருத்துவமனையின் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் சரவண குமார், விஜயகுமார், தி அய் பவுண்டேஷன் மருத்துவமனையின் முகாம் ஒருங்கிணைப்பாளர் மாரியப் பன், மக்கள் தொடர்பு அலுவலர் பேசில், பெரியார் மருந்தியல் கல்லூரி யின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. தினேஷ், பெரியார் நலவாழ்வு சங்கத்தின் செயலாளர் பேரா. ஜெசிமா பேகம் மற்றும் பெரியார் மன்றச் செயலர் பேரா. ஷமீம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள், சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந்தொண்டர்கள், நாகம்மையார் குழந்தைகள் இல்ல மாணவர்கள், பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்து கொண்ட இம்மருத்துவ முகாமில் 167 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *