‘‘இல்லத்தரசிகள்’’ இருக்கலாம் அதுபோல ‘‘இல்லத்தரசர்களும்’’ இருக்கக் கூடாதா? மணவிலக்கு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மதுரை, செப்.25  ‘குடும்பத்தில் ‘இல்லத்தரசிகள்’ போல் ‘இல்லத்தரசர்களும்’ இருக்கலாம். இந்த புதிய இயல்பு, திருமணம் மற்றும் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாக்க உதவும்’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த இதய மருத்துவர், தேனியைச் சேர்ந்த பெண் பல் மருத்துவரை 2011-இல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணவிலக்குக்கோரி இருவரும் தேனி குடும்ப நல நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தனித்தனியே மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தனர். இவற்றை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு: பாரம்பரியமாக, நிதி ஆதாரங்களை ஈட்டும் பொறுப்பு கணவரிடமும், வீட்டு நிர்வாகப் பொறுப்பு மனைவியிடமும் இருந்தது. இருவரும் சமமான மரியாதைக்குரியவர்கள். கடந்த அரை நூற்றாண்டில் இந்த நிலை மாறி வருகிறது.

பெண்களும் அதிகளவில் தொழில் அல்லது பணி சார்ந்த வாழ்க்கையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இது பல உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதை கவனிக்கிறோம். குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பிற தொழில்முறைத் துறைகளில் இது அதிகமாக காணப்படுகிறது. பணிக்குச் செல்லும் பெண்களுக்குத் திருமணம் என்பது இரு தரப்புக்கும் பயனளிக்கும் விஷயமாக அமைவதில்லை. அத்தகைய பெண்கள் திருமணத்தைத் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு ஒரு தடையாகக் கருதுவதால், அதைத் தவிர்த்து விடுவதையே தேர்வு செய்கின்றனர்.

இதனால் திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கணவர்கள் வீட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், இந்த நிலையை ஒருவேளைசரிசெய்ய முடியும். சிறிது காலம் முன்புவரை, பெண்கள் தங்களை மகிழ்ச்சியுடன் ‘இல்லத்தரசிகள்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். சில நாட்களில் சங்கடப்பட்ட முகத்துடன் ‘வெறும் இல்லத் தரசி’ என்று கூறுகிறார்கள்.

இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால், இல்லத்தரசர்களும் இருக்க முடியும். இது ஒரு புதிய இயல்பாக மாறட்டும். இது திருமணம் மற்றும் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாக்க உதவும் என நினைக்கிறோம். ‘வீட்டுப் பராமரிப்பாளர்’ என்ற சொல் பொதுவாக நடுநிலையானது.

இல்லப் பராமரிப்பாளரை வீட்டில் வேலை செய்து, வீட்டையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்பவர் என ஆக்ஸ்போர்டு அகராதி வரையறுக்கிறது. ஓர் இல்லத்தரசி, இல்லப் பராமரிப்பாளராகச் செய்யும் பணிகளுக்கு மகத்தான பொருளாதார மதிப்பு உள்ளது என்ற உண்மையை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கணவன்-மனைவி இடையே கரோனா காலத்திலும் பலனளித்த உறவு தற்போது சேர்ந்திருக்க முடியாததாகி விட்டது. இருவரையும் அழைத்து பேசியபோது அந்த உறவு சரிசெய்ய முடியாத அளவுக்கு முறிந்து விட்டது என்பது தெரிந்தது. திருமண உறவு இறந்து விட்டதாக கணவர் தெரிவித்தார். அதேநேரம் தனது குழந்தைகளின் நிதி கடமைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

அதன்படி, குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு மனைவிக்கு இரண்டரை கோடி ரூபாயை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு மனைவியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையேற்று மனமொத்த ஒப்புதலின் அடிப்படையில் இருவருக்கும் மணவிலக்கு வழங்கப்படுகிறது. கணவர் 3 மாதங்களுக்குள் ஒன்றரை கோடி ரூபாயை மனைவியின் வங்கிக் கணக்கிலும், ஒரு வருட காலத்துக்குள் குழந்தைகள் பெயரில் தலா ரூ.50 லட்சம் வைப்புத் தொகையையும் செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *