ஊத்துக்கோட்டை, மே 30- சென்னையில் அதிகரித்து வரும் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை ரூ.12,301 கோடி மதிப்பீட்டில், 133 கிலோ மீட்டர் நீளமுள்ள 6 வழிச்சாலை (சென்னை எல்லை சாலை திட்டம்) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றுள் தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரையிலான பகுதியில் பணிகள் மந்தகதியில் நடந்து வருவதால், அதனை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலும், திட்டத்தின் பின்னணியும்!
சிறீபெரும்புதூர், இடுங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகத்திற்கு தினசரி ஏராளமான கனரக வாகனங்கள் வருகின்றன. இதனால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதன் காரணமாக, பள்ளி, கல்லூரி வாகனங் கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வாகன நெரிச லுக்குத் தீர்வாகவே, கடந்த 2022ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப் பட்டது.
5 பிரிவுகளாக நடக்கும் பிரம்மாண்ட திட்டம்!
இப்பணிகள் மொத்தம் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
பிரிவு 1: எண்ணூர் முதல் தச்சூர் வரை (25 கிலோ மீட்டர்) பிரிவு 2: தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை (13 கிலோ மீட்டர்) திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
81 கிராமங்கள் வழியாக நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு பணிகள் நடை பெறுகின்றன.
இச்சாலை வழித் தடத்தில் மொத்தம் 349 பாலங்கள் அமைய வுள்ளன. இதில் 5 பெரிய பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப் பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4 மேம்பாலங்கள் மற்றும் 3 ரயில்வே மேம் பாலங்கள் கட்டப்பட உள்ளன.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கை
இவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்த இந்த ஆறு வழிச்சாலை திட்டத்தில், தற்போது தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை உள்ள 13 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பணிகள் செய்வதற்குத் தேவையான மண் கிடைக்காததால் பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடி யாக இந்தச் சிக்கலில் தலையிட்டு, மண் தட்டுப்பாட்டைப் போக்கி, தொய்வின்றி 6 வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
