புதுடில்லி, செப். 25- அழகுசாதன மற்றும் தனிநபர் பயன்பாட்டு பொருட்களில் பயன்படுத்தப்படும் சைவ, அசைவ பொருட்கள் குறித்து நுகர்வோர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பொருட்களின் பாக்கெட்டுகள் மீது சைவம், அசைவம் குறியீடு இடம் பெற வேண்டும் என்றும், இதுதொடர்பாக ஒன்றிய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அண்மையில் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு அடிப்படையில் சோப்பு, ஷாம்பு, பற்பசை, அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு பொருட்களின் மூலப்பொருட்கள் சைவமா, அசைவமா என்பதை நுகர்வோர் அறிந்து கொள்ளும் வகையில் பேக்கிங்கில் குறியீடு இடம்பெறுவதை ஒன்றிய அரசு கட்டாயமாக்கி உள்ளது. அதாவது, சைவ மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் பொருட்களில் பச்சை நிறப்புள்ளியும், அசைவ மூலப்பொருட்கள் கொண்ட பொருட்களில் சிவப்பு மற்றும் பழுப்பு நிற புள்ளியும் இடம் பெற வேண்டும் என தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குறியீடு பாக்கெட்டில் தெளிவாக தெரியும் வகையில் மேல்புறத்தில் இடம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கடைகளில் சோப்பு, ஷாம்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்களை வாங்கும் போது, அவை சைவ, அசைவ மூலப்பொருட்களில் எதனை கொண்டது? என்பதை பேக்கிங்கில் உள்ள பச்சை, சிவப்பு நிற குறியீடுகள் மூலம் நுகர்வோர் தெரிந்து கொள்ள முடியும்.
