தந்தை பெரியார் பிறந்தநாள் விழாக்கள் உலகெங்கும் மிகச் சிறப்பாக, பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகின்றன. எரியாதா ஆரியத்திற்கு? அதன் சூழ்ச்சிகளையும் தகர்த்துத் தானே இவ் வாண்டு விழாக்கள், கொண்டாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.
சென்னை, பெரம்பூர் – அகரம், பெரவள்ளூர் சதுக்கத்தில் 17.9.2026 அன்று தமிழர் தலைவர் பங்கேற்ற “தந்தை பெரியார் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம்” நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தோழர் ஜீடி.சாரய்யா தலைமையில் சென்னை வந்திருந்த தெலங்கானா – ஆந்திரா மாநில ‘இந்திய நாத்திக சங்கம்’, ‘இந்திய அறிவியல் சிந்தனை மாணவர் அமைப்பு’ ஆகியவற்றின் பிரதிநிதிகளும், தோழர்களும் அப் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்றனர்.
தங்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, பெரவள்ளூர் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியின் இடையே, பகுத்தறிவுப் பாடல்களையும், பெரியாரைப் போற்றும் பாடல்களையும் தெலுங்கில் பாடினர். தாங்கள் எங்கிருந்து வந்திருக்கிறோம் என்பதையும், தங்களுக்குத் தமிழ் தெரியாததால், தங்கள் தாய்மொழியான தெலுங்கில் பாடுகிறோம் என்பதையும் தொடக்கத்திலேயே தெரிவித்துவிட்டு, தங்கள் பாடல்களால் அந்தப் பகுதியையே ஈர்த்தனர்.
பெரியார் என்றால், ஏதோ தமிழ்நாட்டுக்கான தலைவர்களில் ஒருவர் என்று கருதியிருந்தவர்களுக்கு, தெலுங்கில் பாடப்பட்ட பாடல் வியப்பையும், ஈர்ப்பையும் தந்தது. அந்தப் பகுதி மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி, ரசித்து மகிழ்ந்தனர். பொறுக்குமா ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு?
தமிழில் வெளிவரும் அவாள் ‘ஜன’ தொலைக்காட்சி ஊடகம் ஒன்றும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஏவல் வேலை செய்யும் மற்றொரு தொலைக்காட்சி ஊடகமும் “பெரியார் பிறந்தநாள் கூட்டங்களில் தெலுங்கு பாடல்! பார்வையாளர்கள் மத்தியில் குழப்பம்!” என்று தலைப்பிட்டுச் செய்தி வெளியிட்டன.
‘கருநாடக இசை’ என்ற பெயரில் எப்போதும் தெலுங்குக் கீர்த்தனைகள் பாடப்படுகிறதே, அப்போது ‘‘இசை ரசிகர்களுக்குப் புரியவில்லை… குழப்பம்’’ என்று செய்தி போட்டிருப்பார்களா? கோயில்களில் மந்திரங்கள் என்ற பெயரால் சமஸ்கிருதத்தில் முணுமுணுப்பு கேட்டுக் கொண்டே இருக்கிறதே! ‘பக்தர்கள் குழப்பம்’ என்று காணொலி வெளியிட்டிருப்பார்களா?
தெலுங்கு பேசும் மக்கள் தெலுங்கில் பாடியதில் என்ன சிக்கல்? ‘பெரியாரைத் தமிழர் அல்லாதவர்’ என்று பிராண்டும் சில பிராணிகளுக்குத் ‘துண்டு’கள் போடுகிறார்களாம்! இந்த ஊடகங்கள்! பார்த்தீர்களா பெரியாரைத் தெலுங்கில் பாடுகிறார்கள் என்று அவர்கள் கூப்பாடு போடுவதற்கு வாய்ப்பு தருகிறார்களாம்!
பெரியாரைக் குறித்துத் தெலுங்கில் மட்டுமல்ல, கன்னடத்தில் தனியாக நாடகம் நடத்தப்பட்டதுண்டு. மலையாளத்தில் புத்தகங்கள் உண்டு. வங்காள மொழியில் பாடல் உண்டு. இந்தியா முழுமையும் பெரியாரைக் கொண்டாடுகிறது! உலகின் பல மொழிகளிலும் புத்தகங்கள், பாடல்கள் வெளிவந்துள்ளன. உலகமே பெரியாரைக் கொண்டாடுகிறது! இன்னும் உலகின் எல்லா மூலைகளுக்கும் பெரியார் சென்று சேர்வார். அப்போது, அம்மிக் குழவியை எடுத்து அடிவயிற்றில் குத்திக் கொண்டு ஆரியக் கும்பல் அலறும் சத்தம் நம் காதுகளில் இனிமையாக ஒலிக்கும்!
– கருஞ்சிறுத்தை
