“வாலிபப் பெரியார்” ஏ.வி.பி.ஆசைத்தம்பி பிறந்தநாள் இன்று (24-09-1924)
விருதுநகரில் 24.09.1924 அன்று பழனியப்பன்- நாகம்மாள் இணையருக்குப் பிறந்த ஆசைத்தம்பி, மாணவப் பருவத்திலேயே சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈர்ப்புக்கொண்டார். அவ்வியக்கத்தின் சிற்றிதழ்கள், நாளேடுகளை ஆர்வத்துடன் படித்ததோடு, சுற்றுவட்டாரத்தில் இயக்கத் தலைவர்களின் மேடைப் பேச்சுகளைக் கேட்டு விழிப்புஉணர்வு பெற்றார். 28.05.1944 அன்று தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் பரமேசுவரி அம்மாளைச் சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டார். இவ்விணையர்களுக்கு காந்திராசன், சவுந்தரபாண்டியன் என்னும் இரு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். மகன்கள் இருவரும் வணிகத்தில் ஈடுபட்டனர்.
திராவிடர் கழகத்தில் இருந்து அறிஞர் அண்ணா வெளியேறி, ‘திராவிட முன்னேற்றக் கழக’ த்தைத் தொடங்கிய போது அண்ணாவுடன் இருந்து கட்சியைத் தொடங்கிய மூத்த தலைவர்களில் ஒருவராக ஏ.வி.பி. ஆசைத்தம்பி இருந்தார்.
1957 இல் திமுக போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றிபெற்ற முதல் 15 சட்டமன்ற உறுப்பினர்களில், ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தார் ஆசைத்தம்பி. திமுக ஆட்சியைக் கைப்பற்றிய 1967 சட்டமன்றத் தேர்தலில் ஆசைத்தம்பி எழும்பூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி வெங்கடாசலத்தை எதிர்த்து நின்று மாபெரும் வெற்றிபெற்று சட்டமன்றம் சென்றார். அறிஞர் அண்ணா மறைந்தவுடன் அரசுப் பொறுப்பேற்ற அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர், ஆசைத்தம்பிக்குச் சுற்றுலாத் துறை வாரியத்தின் தலைவர் பதவியை வழங்கினார்.
அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தபோது, ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றுச் சிறையில் கடும் சித்ரவதைக்கு உள்ளானவர் ஆசைத்தம்பி.
1977 மக்களவைத் தேர்தலில் திமுகவின் ஒரே மக்களவை உறுப்பினராக வட சென்னைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநில சுயாட்சி, பெண் கல்வி, தமிழ்மொழி வழி அர்ச்சனை ஆகியவற்றுக்கு ஆதரவாகவும், தீண்டாமைக் கொடுமை, ஹிந்தித் திணிப்பு, பாலியல் தொழில் தடுப்பு போன்றவற்றுக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் ஆசைத்தம்பி எழுப்பிய முழக்கங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.
‘தனி அரசு’ எனும் இதழினை முதலில் வார இதழாகவும், பின்னர் நாளிதழாகவும் நடத்தியவர். இந்த இதழ் அன்றைய தலைமுறையினரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1958 முதல் 1963 வரை ‘தனி அரசு’ நாளேட்டின் மூலம் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஆசைத்தம்பிக்குத் தந்தையாரான பழனியப்பன் நீதிக்கட்சியில் ஈடுபாடுடையவர். எனவே ஆசைத்தம்பியும் மாணவப் பருவத்திலேயே நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்.
அக்கருத்துகளை பரப்புவதற்காக விருதுநகரில் இளைஞர் கழகம் என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். அக்கழகத்தில் பாரிஸ்டர் கே. டி. கே. தங்கமணி (பின்னாளில் பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகப் புகழ் பெற்றவர்) உள்ளிட்ட பலரை அழைத்து சொற்பொழிவாற்றச் செய்தார்; தானும் சொற்பொழிவாற்றிப் பழகினார். 1942 ஆகஸ்ட் 9 ஆம் நாள் முதன்முறையாக பெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் சொற்பொழிவு ஆற்றினார்.
1942 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா தலைமை யில் நடைபெற்ற திராவிட தொண்டர் படை மாநாட்டில் பங்கேற்றார். பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் கருநாடக மாநிலத்திற்குச் சென்று சில மாதங்கள் வணிகத்தில் ஈடுபட்டார். மீண்டும் விருதுநகருக்குத் திரும்பி தனது அரசியல் பணியைத் தொடர்ந்தார்.
1944 – சூன் 4ஆம் நாள் விருதுநகரில் திராவிட மாணவர்கள் மாநாடு நடைபெற்றது. ஆசைத்தம்பி அம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார்.
1946 ஆம் ஆண்டு மே மாதம் குடந்தையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.
1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் சேலத்தில் நடை பெற்ற மாநில மாநாட்டில் ”தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்” என்னும் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டது. ஆசைத்தம்பி அக்கழகத் தில் தன்னுடைய பொது வாழ்க்கையைத் தொடர்ந்தார். கழகத்தில் விருதுநகர் நகரக் கழகச் செயலாளர், இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர், மாநிலக் கழக செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புக்களை வகித்தார்.
1944 இல், விருதுநகரில் நடந்த திராவிட மாணவர்கள் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர்.
1946 இல், கும்பகோணத்தில் நடந்த சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமை.
1949 இல், விருதுநகரில் நிகழ்ந்த திருக்குறள் மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளர். திராவிட முன்னேற்றக் கழக மாநிலச் செயற்குழு உறுப்பினர்.
திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு உறுப்பினர்.
திராவிட முன்னேற்றக் கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்.
1968-1969இல், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக் குழுத் தலைவர்.
1971-1976இல், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத் தலைவர்.
சென்னை ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் தமிழ் நாடு டாக்சி மற்றும் ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் ஆகிய பொறுப்புக்களை வகித்து இருந்தார்.
1948 மே திங்கள் 8, 9ஆம் நாள்களில் தூத்துக்குடியில் திராவிடர் கழக மாநில மாநாடு நடைபெற்றது. அதில் “திராவிட நாட்டின்” படத்தைத் திறந்து வைத்துச் சொற்பொழிவு ஆற்றினார்.
1948 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 23, 24 ஆம் நாள்களில் ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் 19 ஆவது மாநாடு சிறப்பு மாநாடாகக் கூடியது. 1938 இல் நடந்த முதல் ஹிந்தித் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறையிலிருந்த போது உயிர் நீத்த நடராசன், தாளமுத்து ஆகியோரின் படத்தை ஆசைத்தம்பி திறந்து வைத்து உரையாற்றினார்.
அவருடைய மேடைப் பேச்சு நிதானமாக, அழுத்தந்திருத்தமாக, ஆழ்ந்த பொருளில் கேட்போரைச் சிந்திக்கவைக்கும் வண்ணம் தந்தை பெரியார் அவர்களின் பேச்சுபாணியில் அமைந்ததால், அன்றைய சுயமரியாதை இயக்கத்தினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் அவரை “வாலிபப் பெரியார்” என அழைக்க, பின்னர் அதுவே அவரின் சிறப்புப் பெயராகவும் நிலைபெற்றது. சிறிது காலம் அறிஞர் அண்ணாவிடமிருந்து விலகியிருந்தாலும் கட்சி அமைப்புக்குள்ளாகவே செயல்பட்டார்.
இவர் 24 கதை நூல்களும், 14 வரலாற்று நூல்களும் எழுதியுள்ளார். ‘காந்தியார் சாந்தியடைய’ எனும் நூல் எழுதியமைக்கு காங்கிரஸ் அரசால் சிறையில் அடைக்கப்பட்டார். திமுக வரலாற்று நூல் எழுதியதற்காக முதன்முதலில் சிறைத் தண்டனை பெற்ற வரலாற்றுப் பெருமை உடையவர். 2007ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் நூல்களைச் சட்டமன்றத்தில் நாட்டுடைமை ஆக்கி அறிவித்தார்.
தமிழினத்தின் சிறப்பைக் கடல்கடந்து பரப்பிட அந்தமான் சென்ற ஆசைத்தம்பி, தலையில் ஏற்பட்ட ரத்தக்குழாய் வெடிப்பு காரணமாக 07.04.1979 அன்று அங்கேயே மறைவுற்றார்.
தகவல் : பாணாவரம் பெ. வீரமணி.
