இலங்கை தேவாலயங்களில் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் 15 பேருக்கு தலா 220 ஆண்டு சிறைத் தண்டனை! இலங்கை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கொழும்பு,  செப். 24-  இலங்கை தேவாலயங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கில், 15 பேருக்கு தலா 220 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை நாளில் 3 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகளில் பயங்கர குண்டுவெடிப்புகள் நடத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 11 இந்தியர்கள் உட்பட 279 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொதுமக்கள் மீது நடந்த மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்பட்டது.

விசாரணையில் அய்எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடா்புடைய, ‘தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்டிஜே)’ என்ற உள்ளூா் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாஷிம் தலைமையில் 9 தற்கொலைப் படை தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாகத் தீவிரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை, தீவிரவாத சதித் திட்டம், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் 24 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

சுமார் 6 ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அரசுத் தரப்பில் 2,309 சாட்சிகள் நேரில் ஆஜராகி சாட்சி அளித்தனர். இந்த வழக்கு விசாரணை இலங்கை உயர் நீதிமன்றத்தில் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன், சுஜீவ நிசங்கா ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று (23.9.2026) தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் 9 பேரை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மீதமுள்ள 15 பேருக்கு 220 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது: இந்த வழக்குத் தொடர்பாக அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றம் சாட்டப்பட்ட 14 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்படுகின்றனர். இதில் 15ஆவது நபர் மட்டும் சில குற்றச்சாட்டுகளில் மட்டுமே குற்றவாளி என கண்டறியப்பட்டார். ஆனால், அவர்கள் அனைவருக்கும் தலா 220 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படுகிறது.

மேலும், குற்றவாளிகளின் அனைத்து சொத்துகளையும் இதர உடைமைகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளைக் காவல் துறையும், நீதித் துறையும் எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பை இலங்கையின் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது.

மேல்முறையீடு: குற்றவாளிகள் 7 பேர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நீல் மதுமகே கூறுகையில், ‘‘குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 15 பேருக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 7 பேருக்காக நான் நீதிமன்றத்தில் ஆஜரானேன். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக வழக்கு நடவடிக்கைகளின் நகல்கள், தீர்ப்பு நகல்கள் வழங்க வேண்டும் என்று தண்டனை பெற்ற அனைவரின் சார்பாகவும் நான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன்’’ என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *