தந்தை பெரியார் சொன்னதை எடுத்துக்காட்டி ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!

12 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

13 வயதில், இந்தத் திருநெல்வேலி பகுதிக்கு வந்தவன் நான்; தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன்!
இப்போது எனக்கு 93 வயது; இன்றைக்கும் இங்கே வந்திருக்கிறேன், எனக்கு இவ்வூர் புதிதல்ல!
இன்றைக்குப் புதிதாக வந்தவர்களுக்கு எங்களை யாரென்று தெரியவில்லை!

சும்மா மிரட்டலாம் என்று பார்த்திருக்கிறார்கள்,
உங்கள் மிரட்டல் எங்களை எதுவும் செய்யாது!

திருநெல்வேலி, செப்.22-  1946 இல், எனக்கு வயது 13 வயது. அப்போது இந்தத் திருநெல்வேலி பகுதிக்கு வந்தவன் நான். தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். இப்போது எனக்கு 93 வயது. இன்றைக்கும் இங்கே வந்திருக்கிறேன். எனக்கு இவ்வூர் புதிதல்ல. இன்றைக்குப் புதிதாக வந்தவர்களுக்கு எங்களை யாரென்று தெரியவில்லை. சும்மா மிரட்டலாம் என்று பார்த்திருக்கிறார்கள், உங்கள் மிரட்டல் எங்களை எதுவும் செய்யாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

“எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு”

கடந்த 19.08.2026 அன்று, திருநெல்வேலியில் நடைபெற்ற, “எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு” எனும் தலைப்பில், வாகையடி அம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

தமிழ்நாட்டின் வரலாற்றில், எப்படி
தந்தை பெரியார் முதலில் உள்ளே வருகிறார்?

இன்றைய ‘விடுதலை’யில்கூட அந்தத் தகவல் ஒரு கட்டுரையாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லுகிறேன். இந்தச் செய்தி படிக்கின்ற எங்களைப் போன்றவர்களுக்கும் சரி, கேட்கின்ற உங்களைப் போன்றவர்களுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, இது 97 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நகரத்தில் நடந்த ஒரு சம்பவம். தமிழ்நாட்டின் வரலாற்றில், எப்படி தந்தை பெரியார் முதலில் உள்ளே வருகிறார்? சுயமரியாதை இயக்கம் எப்படி முதலில் வந்தது? இதோ சுயமரியாதைச் சுடரொளிகளாக; அந்தக் கொள்கைக்காக தங்கள் வாழ்க்கை முழுவதுமே தந்தார்கள். எப்படி அவருக்கு துணை நின்றார்கள்? இராணுவ வீரர்களைப் போல; காவல் பட்டாளத்தைப் போல இவர்களெல்லாம் பெரியாருக்குத் துணை நின்ற வர்கள். அப்படிப்பட்ட ஒரு வரலாற்றிலே சிறப்பான ஒரு செய்தியை இங்கே சொல்லுகிறோம். அந்த சம்பவத்தை இதில் பதிவு செய்திருக்கிறோம். நாங்கள் சொல்வதெல்லாம் ஆதாரப்பூர்வமான செய்திகள். இதை சொல்லுவதற்குத்தான் நாங்கள் வந்தோம்.

பெரியார் உலகம், அற்புதமாக உருவாகிக்கொண்டிருக்கிறது!

அதைச் சொல்லுவார், இதைச் சொல்லுவார், அதைப் பண்ணுவார், இதைப்பண்ணுவார் என்று சொல்லி, புரளி கிளப்புவதிலேயோ, தவறான ஒரு வாதத்தை எடுத்து வைப்பதிலோ அர்த்தமில்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. சொல்லுவதற்கு முன்பு ஒரு செய்தியைச் சொல்லுகிறேன். பெரியார் உலகம், அற்புதமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. திருச்சி யிலிருந்து சென்னைக்குப் போகின்ற வழியிலே, சமய புரத்திற்குப் பக்கத்திலே, 25 கிலோமீட்டரிலே. மூன்றில் ஒரு பாகம் வேலை முடிந்துவிட்டது. 100 கோடி ரூபாய் திட்டத்திலே உலகளவிலே தந்தை பெரியாருடைய பணி எப்படிப்பட்டது என்பதை எல்லாரும் பார்க்கக்கூடிய அளவுக்கு ‘‘பெரியார் உலகம்” உருவாகி வருகிறது. இன்றைக்கு பெரியார் கருத்துகள் உலகமயமாகிக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகளிலெல்லாம் பெரியார், பெரியார், பெரியார் என்று உணருகிறார்கள். ‘‘அவருடைய சாதனைகள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு மட்டுமல்ல, அதே ஜாதி நோய் எங்கள் நாட்டுக்கும் வருகிறது. அதே தீண்டாமை வியாதிக் கிருமிகள் போல எங்கள் வீட்டுக்கும் வருகின்றது’’ என்று சொல்லி, அவர்களும் பெரியாரின் தேவையைச் சொல்லுகிறார்கள்.

ஒரு கொள்கையாளனுக்கு வயது முக்கியமல்ல; அவர்களுடைய உணர்வுகள்தான் முக்கியம்!

எனக்கு 93 வயது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தீர்கள். எனக்கு அந்த நினைவே வரு வதில்லை. நீங்கள்தான் திரும்பத் திரும்ப 93 என்று சொல்லுகிறீர்கள். சில நேரங்களில் சில உறுப்புகள் ஒத்துழைக்காத போது அந்த நினைவு வரும். ஒரு கொள்கையாளனுக்கு வயது முக்கியமல்ல. அவர்க ளுடைய உணர்வுகள்தான் முக்கியம். வாலிபம் என்பது வயதைப் பொறுத்ததல்ல, மன உணர்வைப் பொறுத்தது. அவ்வளவுதான். ‘‘என்னால் முடியும்! நம்மால் முடியும்! நம்மால் முடியாதது, வேறு யாராலும் முடியாது’’ என்ற துணிவு இருக்கிறதே, அந்தத் துணிவின் பெயர்தான் பெரியார்! தனி மனிதராகத்தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். நெருப்பாற்றில் எதிர்நீச்சல்! அதனால்தான் பெரியார், அண்ணா, கலைஞர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரையிலும் வரிசையாக வந்திருக்கிறோம். அனைத்துக் கட்சியில் இருக்கின்ற தலைவர்கள் ஏன் எல்லோரும், பெரியார் கொள்கையை ஏற்கிறார்கள்? ஒரு சிலரைத் தவிர. அவர்கள் அத்தனை பேரும் உணர்ந்திருக்கிறார்கள்; பயன்பெற்றிருக்கிறார்கள். அதற்காகத்தான் பெரியார் உலகத்துக்கு நன்கொடை கொடுக்கிறார்கள். அவர்களுக்கு நான் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

பட்டுக்கோட்டைத் தளபதி அழகிரி!

நான் எதிர்பார்க்கவே இல்லை. இங்கே சிமெண்ட் மூட்டைகள் கொடுத்தார்கள். இதுவரை இந்தக் கூட்டத்திலே கல்லுதான் வரும். இப்போது சிமெண்ட் வந்திருக்கிறது. அந்தக் கல்லெடுத்து சிமெண்ட் பூசுங்கள். நல்ல கட்டடமாக உருவாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். பட்டுக்கோட்டைத் தளபதி அழகிரி சொன்னார், ஒவ்வொரு கல்லும் எங்கள் மீது வீசப்படுகிறபோது, அதைப் பார்த்து பயந்து ஓடமாட்டோம். திருநெல்வேலி பகுதியிலேயே கல் விழுந்திருக்கிறது. நான் கலந்து கொண்ட கூட்டத்திலேயே கல் விழுந்திருக்கிறது. 1984 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் நான் பேசினேன். பட்டென்று இரண்டு கற்கள் வந்து விழுந்தன. பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறோம், அவ்வளவுதான்.   தளபதி அஞ்சாநெஞ்சன் அழகிரி அடிக்கடி சொல்வார், ‘ஒவ்வொரு கல்லும் எங்கள் மீது வீசும்போது, தோழனே உரத்துப் பேசு… உரத்துப் பேசு.. என்று சொல்லுமே தவிர, ஓடிப்போ என்று ஒரு போதும் சொல்லாது’ என்ற உணர்ச்சியோடு சொன்னார்.

தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

இங்கிருக்கும் தோழர்கள் மிகவும் புதுமையாக யோசித்திருக்கிறார்கள். நான்கூட சொன்னேன். ‘‘93 மூட்டை சிமெண்ட் கொடுத்திருக்கிறீர்கள், இதை எப்படி எடுத்துக்கொண்டு போவது? அதற்கு அனுமதி வேண்டும். சிமெண்ட் கடத்தல் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது’’ என்று எண்ணிக்கொண்டி ருந்த போது, அவர்களே அந்தப் பிரச்சினைக்கு விடை கண்டு விட்டார்கள். அதை அப்படியே பணமாக்கிக் கொடுத்துவிட்டார்கள். பெரியார் உலகத்திலே மக்கள் பங்களிப்பு இருக்கிறது. கல்லாக, மண்ணாக, இரும்பாக எதைக்கொடுத்தாலும் அது, அந்தக் கட்டடத்தில் இருக்கும். நாளைக்கு நீங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம். நம்முடைய பேரப்பிள்ளைகள், மூன்றாவது தலைமுறையினர், ‘அதோ அந்த பெரிய கட்டடம் இருக்கிறதே, அதற்கு எங்கள் தாத்தா சிமெண்ட் கொடுத்திருக்கிறார். என்னுடைய தாத்தா கொடுத்திருக்கிற அன்பளிப்பும் அதில சேர்ந்திருக்கிறது’ என்று சொல்லக்கூடிய அளவில் அது இருக்கும். ஆகவே மீண்டும் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

1929ஆம் ஆண்டில், பெரியாரை எதிர்த்து அச்சிடப்பட்ட துண்டறிக்கை!

தோழர்களே! ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். 1925 இல், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய தந்தை பெரியார், திருநெல்வேலி சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்திற்காக 1929 ஆம் ஆண்டு, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களோடு வந்தார். நெல்லையை வந்தடைந்தார். நாங்கள் எப்போதுமே ஓர் ஊருக்கு வரும் போது, எங்களுக்கு கொடுக்கிற வரவேற்பு வித்தியாசமாக இருக்கும் – நெல்லைக்கு வந்து சேர்ந்த பெரியார் அவர்களுக்கு ஒரு துண்டறிக்கையைப் படிக்க நேர்ந்தது. அந்தத் துண்டறிக்கையில் ‘புராணங்கள் எல்லாம் பொய் என்று சொல்லும், நாத்திகரான ராமசாமி, நமது திருநெல்வேலிக்கு வருகிறார். அவரை நாம்  பேசவிடக்கூடாது’ என்று அச்சிடப்பட்டிருந்தது. அன்றைக்கு மட்டும் இல்லை. இன்றைக்கு வரைக்கும் அந்த நிலை இருக்கிறது. அதுதான் மிக முக்கியம். எங்கேயோ ஒரு மூலையில் நடந்தாலும், அதுதான் எங்களை உற்சாகப்படுத்துகிறது.

விளம்பரத்திற்காக செலவு செய்யாதீர்கள்!

நான்கூட கொஞ்சம் சோர்வாக வந்தேன். எதிர்ப்பு இருந்தால் வசதியாக இருக்கும். அதுமட்டுமல்ல, விளம்பரமும் எங்களால் இந்த அளவிற்குச் செய்ய முடிய வில்லை. அவர்களே மாநிலம் தழுவிய அளவில் இதை விளம்பரப்படுத்தி விட்டார்கள். இல்லையென்றால், இதற்கு இவ்வளவு விளம்பரம் கிடைத்திருக்காது.  பெரியார் சொல்வார், ‘‘விளம்பரத்திற்காக செலவு செய்யாதீர்கள். நம்முடைய எதிரிகள் அந்த விளம்பரத்தைப் பார்த்துக்கொள்வார்கள். அதுவரையிலும் பொறுமையாக இருங்கள். எதுக்குக் காசை செலவழிக்கிறீர்கள்? போஸ்ட்டர் எல்லாம் ஒட்டாதீர்கள்’’ என்று சொல்வார். அது இன்றைய வரையில் நடந்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கு எங்களுடைய நன்றி! எங்களுக்கு எதிர்ப்புக் காட்டி உற்சாகப்படுத்தியது வரலாறு. இங்கே ஏராளமான காவல்துறையினர் எங்களுக்குப் பாதுகாப்பு என்கிற பெயரில் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். ஆனால், எங்களுக்கு என்ன மகிழ்ச்சி என்றால், எங்களுக்கு இவ்வளவு பாதுகாப்புத் தேவையா? என்பது ஒருபக்கத்தில் இருந்தால் கூட, இவ்வளவு காவல்துறையினரும் எங்கள் கூட்டத்திற்கு வந்து கேட்பதற்கு வாய்ப்பு கிடையாது. இவ்வளவு காலமாகியும் பெரியாரைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை. இதுவொரு நல்ல வாய்ப்பு அவர்களுக்கு. அவர்களும் நம்முடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள். அவர்களும் சமுதாயத்திலே ஓர் அங்கம். அவர்களுடைய பிள்ளைகள் படிக்க வேண்டும். அவர்களுடைய பிள்ளைகளுக்கு உத்தியோகம் கிடைக்க வேண்டும். ஆகவேதான், இந்த மாதிரியான ஒரு வாய்ப்பு ஏற்படுத்தியமைக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி எங்களுக்கு.

எதிர்ப்பினால் பயந்துபோய், பெரியாரை வரவேற்பதற்குக்கூட போகவில்லை!

இந்த செய்தியைத் தெரிந்துகொள்ளுங்கள். ‘பெரியார் பேச வரக்கூடாது’ என்று அச்சிடப்பட்டிருந்தது. இந்த இடத்தை மிகச்சிறப்பாகக் கவனியுங்கள்.  கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள் யாரும் பெரியாரை அழைத்துப் போக வரவில்லை. கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். பெரியாரை கூட்டத்திற்கு வரச் சொன்னார்கள். எதிர்ப்பு எழுந்தவுடன், அவர்கள் பயந்து போய் பெரியாரை வரவேற்பதற்கேகூட போகவில்லை. எப்போது? 97 ஆண்டுகளுக்கு முன்னால், இதே திருநெல்வேலியில்!

‘என்ன செய்யலாம்’ என்று ரயிலில் வந்தவர்கள் இறங்கி யோசனை செய்கிறார்கள். சுயமரியாதை இயக்கச் செயலாளர் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள், ‘இதற்கு மேல் இங்கே பிரச்சாரம் செய்வதற்கு வாய்ப்பில்லை. திரும்பிப் போய்விடலாம்’ என்று பெரியாரிடம் கூறினார்.

600 பேருக்கு மேல் குழுமியிருந்தனர்

ஆனால், தந்தை பெரியார் அவர்கள் திரும்பிப் போக விரும்பவில்லை. அந்த இடத்தை ஒருமுறை பார்த்துவிடலாம் என்று ஒரு ஜட்கா வண்டியைக் கொண்டுவரச் சொல்கிறார். இப்போதெல்லாம் கார் வருகிறது. அப்போது ஜட்கா வண்டிதான். வாடகைக்கு எட்டணா என்று பேரம் பேசி, தங்கும் இடத்திற்குச் செல்வதற்கு அதில் ஏறினார்கள். பெரியார், ஜட்கா வண்டியை கூட்டம் நடைபெற வேண்டிய இடம் வழியே போகச்சொல்கிறார். ‘‘எந்த இடத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ, அந்த வழியாகப் போங்கள். எங்களுக்கு இடம் தெரியாது’’ என்று ஜட்கா வண்டிக்காரரிடம் நோட்டீசைக் காட்டி பெரியார் சொல்கிறார்.  அப்படிச் செல்லும் போது, அவ்விடத்தில் மேடையோ, நாற்காலிகளோ இல்லை. மக்கள் மட்டும் 600 பேருக்கு மேல் குழுமியிருந்தனர். நன்றாகக் கவனியுங்கள். ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் இந்தச் செய்தியைத் தெரிந்துகொண்டு, ‘‘அப்படி என்ன பேச ப்போறார்? ஏன் இப்படி சொல்கிறார்கள்? என்னவென்றுதான் கேட்டுப்பார்ப்போமே’’ என்று ஆவலுடன் காத்திருந்தனர். தந்தை பெரியார் திடீரென்று ஜட்கா வண்டியைவிட்டு கீழிறங்கி, மக்கள் கூட்டத்துக்கு முன் சென்று, தனி ஆளாக நின்று, ஒரு விளக்கத்தைச் சொல்லத் தொடங்கினார். அவரே தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அப்போது ‘பெரியார்’ கிடையாது.

ஓர் உண்மையைச் சொல்லிட்டுப் போக வந்தேன்!

‘பொதுமக்களே நான் தான், ஈ.வெ.ராமசாமி நாயக்கர். நான் உங்கள் முன்னால் இப்போது பேச வரவில்லை. ஓர் உண்மையைச் சொல்லிட்டுப் போக வந்தேன். புராணங்கள் எல்லாம் பொய் என்று சொன்னதாக என்னை எதிர்த்து நோட்டீஸ் போட்டிருக்கிறார்கள். அதை நான் சொல்லவில்லை, சைவப் புராணங்கள் எல்லாம் பொய் என்று கண்டுபிடித்துச் சொன்னவர்கள் வைணவப் பண்டிதர்கள். வைணப் புராணங்கள் எல்லாம் பொய் என்று சொன்னவர்கள் சைவப் பண்டிதர்கள். இந்த இரண்டு புராணங்களும் பொய்யாக இருக்குமோ என்று நான் எண்ணியதுண்டு என்பதை உங்களிடம் சொல்லிவிட்டுப் போகவே வந்தேன்.  இவர் புராணம் தப்பு என்று அவர் சொல்கிறார்; அவர் சொல்வதெல்லாம் தப்பு என்று இவர் சொல்கிறார். இந்த இரண்டு பேரும் சொல்வது சரியாக இருக்குமா என்று நீங்கள் யோசனை செய்யுங்கள். ஆகவே, என் மீது பழி போடாதீர்கள்’’ என்று பெரியார் சொன்னதும், கூடியிருந்தவர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்தனர்.

அதன்பின் தொடர்ந்து தந்தை பெரியார் ஒன்றரை மணி நேரம் பேசினார்கள். மக்கள் அனைவரும் அமைதியாக இருந்து கேட்டார்கள். ஆதாரம்: ‘அறிவுக்கதைகள்’ எனும் தலைப்பில் கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய புத்தகம். இவர் பெரியாருடன் இருந்தவர்.

இது நடந்தது 1929 இல். காலம் மாறுகிறது, தொடர்ந்து பிரச்சாரம் நடைபெறுகிறது. மற்ற தலை வர்கள் எல்லாம் சேருகிறார்கள். சேர்ந்தவுடனே என்ன நடக்கிறது என்றால், அடுத்த தலைமுறை வருகிறது. அந்த அடுத்த தலைமுறை என்ன? இந்த இரண்டையும் தெரிந்துகொண்டு அடுத்த விசயத்துக்கு வரலாம். (அய்யாவின் அடிச்சுவட்டில் புத்தகத்தைக் காட்டிப் பேசுகிறார்) சில ஆண்டுகளுக்கு முன்னாலே, என்னுடைய வாழ்க்கை வரலாற்றை ‘ஆட்டோபயோகிராபி’ மாதிரி எழுதச் சொன்னார்கள். நான் வாழ்க்கை வரலாறு எழுதுகிற அளவுக்குப் பெரிய ஆள் இல்லை. நான் பெரியார் பதித்த தடத்திலே நடக்கிறவன். ஆகவேதான், “அய்யாவின் அடிச்சுவட்டில்” என்று தலைப்பு கொடுத்து – ஒரு பத்திரிகை நண்பர். தமிழரசி நடராசன் என்று அ.தி.மு.க. உணர்வாளர், மறைந்துவிட்டார். என்னை வற்புறுத்தி எழுதச்சொன்னார். அதில், திருநெல்வேலி சம்பந்தமாக ‘குடிஅரசு’ பத்திரிகையில் வந்த செய்தியை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறோம். இந்த திருநெல்வேலியில் 1929 இல் மாநாடு நடத்தியது ஒரு பக்கம்.

1946ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட
திராவிடர் கழக மாநாடு!

அதற்கடுத்தது நண்பர்களே, இங்கே இருக்கும் பதாகையில் இருக்கும் சுயமரியாதைச் சுடரொளிகள் எப்படி இருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். ‘குடிஅரசு’ ஏடு தெரிவித்துள்ள தகவல்கள்தான் அவை. ‘அந்தக்காலத்தில் நெல்லைச் சீமையில், திராவிடர் கழகத் தலைவரும் ‘குமாரவிலாஸ்’ என்ற பிரபல தமிழ் சைவ சிற்றுண்டி உரிமையாளருமான திரு.கே.எம். பிரம்மநாயகம் அவர்களை, வரவேற்புக்குழு தலைவராகக் கொண்ட, நெல்லை மாவட்ட திராவி டர் கழக மாநாடு, 26, 27.1.1946 ஆம் ஆண்டு நடை பெற்றது. இங்கே இருப்பவர்களில் பலர் அப்போது பிறந்திருக்கவே மாட்டார்கள். அந்த மாநாட்டில் மணியம்மையார், ஈ,வெ.கி.சம்பத் ஆகியோருடன் தந்தை பெரியார் அவர்கள் வந்தார்கள். இங்கே உள்ளூரில் இருந்தவர்களான,  முத்தையா, கே.எம்.பிரம்மநாயகம், தளவாய் ராமசாமி (முதலியார்) தூத்துக்குடி நீதிமாணிக்கம் மற்றும் முஸ்லிம் தோழர்கள், தங்கள் சங்கங்கள் சார்பாக, தனியாக அமைத்திருந்த பந்தலில் வரவேற்றனர். இந்த பேட்டையில்தான் அந்த மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன். கடலூரில் என்னை மாணவப் பருவத்திலிருந்து உருவாக்கிய திராவிடமணி, கூட்டத்திற்கு என்னை அழைத்து வந்திருந்தார். அப்போது, ‘பகுத்தறிவுச் சிறுவன் பேசுவான்’ என்று துண்டறிக்கையில் போடுவார்கள். இந்தச் செய்தி ‘குடிஅரசு’ பத்திரிகையில் இருப்பதை எடுத்துப் போட்டிருக்கிறோம். இதை நான் எழுதவில்லை. நகரசபை மண்டபத்தில் பெரியாருக்குத் தேநீர் விருந்தும், சேர்மன் காந்திமதி அவர்களால் வாழ்த்தும் வாசித்து அளிக்கப்பட்டன. ஒன்பதரை மணிக்கு மாநாடு ஆரம்பம் ஆயிற்று. கருப்புச் சட்டைப்படைத் தொண்டர்களால் இயக்கப் பாடல்கள் பாடப்பட்டபின், சிறுவன் வீரமணி, தோழர் ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அன்பழகன் பி.ஏ.,(ஹானர்ஸ்) ஈ.வெ.கி.சம்பத், தவமணிராஜன், பெரியார் ஆகியோர் பேசினார்கள். மாநாட்டிற்கு முன்கூட்டியே வரச்சொல்லியிருந்த ஆசிரியர் திராவிடமணி அவர்களுக்கு, அம்மை கண்டுவிட்டது. நாங்கள் சங்கடப்பட்டுவிட்டோம். அவருக்குத் தனி இடம், உணவு எல்லாம் கொடுத்து பிரம்மநாயகம், ‘தாயினும் சாலப்பரிந்து’ ஏற்பாடு செய்தார். அவர் (திராவிடமணி) என்னைப் பார்த்து, ‘எனக்கு முடியவில்லை. நீ மாநாட்டில் போய் பேசி விட்டு வா’ என்றார். நானும் வந்தேன்.’’ எப்போது நண்பர்களே? 1946. இப்போது எனக்கு 93 வயது என்று இங்கே சொன்னார்கள். அப்போது எனக்கு வயது 13. பதிமூன்றாவது வயதில் இந்தப் பகுதிக்கு வந்தவன் நான். தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். புதிதல்ல. இன்றைக்கு புதிதாக வந்தவர்களுக்கு யாரென்று தெரியவில்லை. சும்மா மிரட்டலாம் என்று பார்த்திருக்கிறார்கள். உங்கள் மிரட்டல் எங்களை எதுவும் செய்யாது.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *