எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்களுக்குப் பள்ளிப்பருவம் முதலே திராவிட இயக்க ஈடுபாடு உண்டு. இவரின் குடும்பத்தை அறிஞர் அண்ணா நன்கு அறிந்தவர். முதன் முதலில் ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிக்குச் சேர்ந்த இவர், இந்திய-சீனப் போரின்போது எல்லைப்புறத்தில் பணியாற்றியவர். அதற்கடுத்து ஒரு கூட்டுறவுப் பண்டக சாலையில் எழுத்தராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர். ஒரு கட்டத்தில் பணியிலிருந்து விலகினார். சொந்த அச்சகத்தை நிறுவினார்.
நக்கீரன், நம்நாடு பேசுகிறது ஆகிய இதழ்களைச் சொந்தமாக நடத்தினார். தற்போது வெளிவந்து கொண்டு இருக்கிற தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் மாத இதழான “உழைப்பாளி”-யை முதன் முதலாக அச்சிட்டவர் இவர்! இடதுசாரிச் சிந்தனைகளைத் தாங்கி ஏராளமாக வெளிவந்து கொண்டிருந்த சிற்றிதழ்களைத் தமது அச்சகத்தில் அச்சியற்றித் தந்த பெருமைக்குரியவர் இவர். ஈழப் பிரச்சினைக்காகச் சிறையில் இருந்தவர்.
நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்த காலத்தில் தி.மு.கழகத்தின் தகவல்களைத் தமது சொந்த அச்சகத்தின் மூலம் அச்சிட்டு உதவிய இவரது தொண்டு குறித்துத் தலைவர் கலைஞர் அவர்கள் தமது நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுப் பாராட்டி இருக்கிறார்.
எதையும் கற்க வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு உடையவர். தேர்ந்த, சிறந்த நூல்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டு இருப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் காட்டுபவர். கற்றறிந்த மாபெரும் உறுதிச் சுற்றத்தை நட்பாகப் பெற்றிருப்பவர். இவருடைய ஆய்வுகள் திராவிட இயக்கத்தினரின் ஏடுகளில் மட்டுமன்றி, இதர ஏடுகளிலும் நிரம்ப இடம் பெற்று இருக்கின்றன.
முரசொலி நாளேட்டின் செய்தி ஆசிரியராகவும் கட்டுரையாளராகவும் பணியாற்றியவர். முரசொலி “பொன்விழா மலர்” தயாரித்தவர். ‘சங்கொலி’ எனும் வார ஏட்டின் பொறுப்பாசிரியராகப் பத்து ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர். ‘இலட்சியப்பாதை’ வார ஏட்டின் பொறுப்பாசிரியராக இரண்டு ஆண்டுகள் இருந்தார். பன்நூல் ஆசிரியர். பிற ஆசிரியர்களின் நூல்களை வெளியிட்டவர்.
தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருதும் ஒரு இலட்ச ரூபாயும் ஒரு பொற்காசும் பரிசாகப் பெற்றுப் பாராட்டப் பெற்றவர். ஆழ்வார்கள் மய்யத்தின் சார்பில் தமிழறிஞர் விருதும் ரூபாய் பத்தாயிரம் பண முடிப்பும், தமிழ் முஸ்லிம்கள் நடத்திய இலக்கிய மாநாட்டில் பாராட்டும், ரூபாய் பத்தாயிரம் கொண்ட பண முடிப்பும் வழங்கி இவர் சிறப்பிக்கப்பட்டவர்.
திராவிட இயக்க வரலாற்றினை 10 தொகுதிகளாக எழுதி வரும் இவர், நீதிக்கட்சி வரலாற்றினை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு இருக்கிறார். சுயமரியாதை இயக்க வரலாறு – இரண்டு தொகுதிகள், தி.மு.க. வரலாறு – மூன்று தொகுதிகளை எழுதி வெளியிட்டிருக்கிறார் தொடர்ந்து எழுத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் புரவலராகக் கொண்ட தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் திராவிடர் திருநாள் விழாவில், “பெரியார் விருது” அளித்துப் பாராட்டப்பட்டவர்.
85 அகவையிலும் தொடரும் அவரது திராவிட இயக்கத் தொண்டினைப் பாராட்டி, திராவிடர் கழகத்தின் சார்பில் “திராவிட வரலாறு – பண்பாட்டு ஆய்வறிஞர் விருது” க.திருநாவுக்கரசு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
