தமிழர் தலைவர் ஆசிரியருக்கு “மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கிய நாள் இன்று (22-09-2019)
சமூக நீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை கொள்கைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு, அமெரிக்க மனிதநேயர் சங்கம் (American Humanist Association) சார்பில் ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ (Humanist Lifetime Achievement Award) 22-09-2019 அன்று வழங்கி மரியாதை செய்த சிறப்பு வாய்ந்த நாள் இன்று.
அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் நகரில் பன்னாட்டு பெரியார் மனிதநேய சுயமரியாதை மாநாடு மேரிலாந்து பகுதியின் மாண் ட் கோமரி கல்லூரி வளாக பண்பாட்டு கலை மய்யத்தில் 2019 செப்டம்பர் 21, 22 தேதிகளில் நடந்தது.
அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பும் (Periyar International, USA) அமெரிக்க மனித நேயர் சங்கமும் சேர்ந்து இந்த மாநாட்டை நடத்தினர்.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மனிதநேயர் அமைப்பினர், பகுத்தறிவாளர்கள், அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்
அறிஞர்கள், சமூகப் போராளிகள், மற்றும் மனித நேயப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படும் விருது 1953-ஆம் ஆண்டு முதல் வழங் கப்பட்டு வரும் ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ (Humanist Lifetime Achievement Award) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணிக்கு 22.09.2019 அன்று வழங்கப்பட்டது.
ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இந்த விருதைப் பெற முக்கியக் காரணமாக அமைந்தது, அவர் தந்தை பெரியாரின் கொள்கை வழியில் நின்று, பகுத்தறிவையும், சுயமரியாதையையும் உலகம் முழுவதும் பரப்புவதற்காக மேற்கொண்ட நீண்டகால சமூகப் பணிகள் மற்றும் அவரது உறுதியான செயல்பாடுகள்தான்.
குறிப்பாக, சமூகத்தில் நிலவும் ஜாதி, மத ஏற்றத் தாழ்வுகளைக் களையவும், ‘அனைவரும் சமம்’ என்ற கொள்கையை நிலைநாட்டவும் அயராத பணிகளை இவர் ஆற்றியுள்ளார். மூடநம்பிக் கைகள், சடங் குகள் ஆகிய வற்றுக்கு எதிராக அறிவியல் பூர்வமான சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.
மனித நேயம், சமத் துவம், மற்றும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட அவரது எழுத்துகள், பேச்சுகள் மற்றும் செயல்பாடுகள், உலகெங்கிலும் உள்ள மனிதநேயச் சிந்தனையாளர்களை ஈர்த்துள்ளன.
திராவிடர் கழகத்தின் தலைவராக, கல்வி, மருத்துவம், ஊடகங்கள் எனப் பல துறைகளில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது நீண்ட காலப் போராட்ட வாழ்வும், சமூக சீர்திருத்தத் திற்கான பங்களிப்பிற்காக இப்பன்னாட்டு விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
தகவல் : பாணாவரம் பெ. வீரமணி
புலவர் குழந்தை நினைவு நாள் இன்று (22.9.1972)

தமிழ் அறிஞரும், கவிஞரும், பெரியாரின் தீவிரத் தொண்டருமான புலவர் குழந்தை அவர்கள்
1972-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் நாள் தனது 72-வது வயதில் மறைந்தார்.
இராவண காவியம்: கம்பராமாயணத்திற்கு மாற்றாகவும், இராவணனை முதன்மை நாயகனாகவும் கொண்டு இவர் இயற்றிய ‘இராவண காவியம்’ இவரின் மிகச் சிறந்த படைப்பாகும் (1946). இந்நூல் 1948-இல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்டு, பின்னர் 1971–இல் அத்தடை நீக்கப்பட்டது.
திருக்குறள் உரை: திருக்குறளுக்கு எளிய தமிழில் தெளிவுரை எழுதியுள்ளார். பெரியாரின் கோரிக்கையை ஏற்று மிகக் குறைந்த காலத்தில் இவர் இந்த தெரிவுரையை இயற்றி முடித்தார்.
‘அரசியல் அரங்க இயல்’, ‘காமஞ்சரி’, ‘கொங்கு நாடு’, ‘தமிழக வரலாறு’ உட்பட 25-க்கும் மேற்பட்ட உரைநடை மற்றும் கவிதை நூல்களை எழுதியுள்ளார். தமிழ்ப் பணி: சமஸ்கிருதக் கலப்பற்ற தூய தமிழ் வளர்ச்சிக்கும், திராவிட இயக்கச் சிந்தனைகளுக்கும் தனது கவிதைகள் மூலம் பெருந்தொண்டாற்றினார்.
தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கும், சீர்திருத்தச் சிந்தனைகளுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவு கூரத்தக்கது.
