தமிழ்மொழி காக்கும் சமரில் உயிரை ஈந்த இரண்டாம் மாவீரன் தாளமுத்து நினைவுநாள் (12.3.1939)

2 Min Read

தமிழ் மொழியின் வரலாற்றில் 1930-களின் பிற்பகுதி ஒரு முக்கியமான காலகட்டம். அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் ராஜ கோபாலாச்சாரியார்   கொண்டு வந்த கட்டாய ஹிந்தித் திணிப்பு, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த மொழிப் போரில் முன்னின்று களம் கண்டு, சிறைப்பட்டு, இறுதியில் தமிழுக்காக உயிர்நீத்த முதல் தியாகிகளாக நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோர் திகழ்கின்றனர்.

1938-இல் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்ட போது, “தமிழ் வாழ்க, ஹிந்தி ஒழிக” என்ற முழக்கம் தமிழ்நாடெங்கும் எதிரொலித்தது. அறிஞர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடினர். இந்த அறப்போராட்டத்தின் மய்யப்புள்ளி யாகச் சென்னை விளங்கியது.

கும்பகோணத்தை சேர்ந்த தாளமுத்து, மொழிப் பற்றால் உந்தப்பட்டுச் சென்னைக்கு வந்து போராட்டத் தில் இணைந்தார்.

1938 செப்டம்பர் 13 அன்று, சென்னை ஹிந்து தியாலஜிகல் உயர்நிலைப்பள்ளி முன் நடைபெற்ற மறியலில் ஈடுபட்டுத் தாளமுத்து கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் கர்ஜனை: ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி மாதவராவ் முன்னிலையில் நிறுத்தப்பட்டபோது, தாளமுத்து அஞ்சவில்லை. “எத்தனை நாட்கள் சிறை என்றாலும் கவலை இல்லை, சிறைச்சாலையை மகிழ்வோடு ஏற்கிறேன்” என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறித் தமிழரின் வீரத்தைப் பறைசாற்றினார்.

அய்ந்து மாத சிறைத்தண்டனையின் போது கடும் நோய்வாய்ப்பட்ட அவர், சென்னை அரசு பொது மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி  தாளமுத்து 1939 மார்ச் 12 அன்று  தமிழுக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்தார்.

முதல் தியாகி நடராசன்

தாளமுத்துவுக்கு முன்பே, மொழிப்போரின் முதல் பலியாக நடராசன் இருந்தார். சிறையில் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், 1939 ஜனவரி 15 அன்று உயிரிழந்தார். இந்த இருவரின் மரணமும் தமிழ்நாட்டில் காட்டுத்தீயாய் ஹிந்தி எதிர்ப்பு உணர்வைப் பரப்பியது.

இன்றும் தொடரும் உணர்வு

அன்று தாளமுத்துவும் நடராசனும் விதைத்த மொழிப்பற்று இன்றும் தமிழர்களின் ரத்தத்தில் ஊறியுள்ளது. தமிழுக்கு ஒரு இழுக்கு என்றால் விநாடி கூடத் தாமதிக்காமல் களத்தில் இறங்கும் மனப்பான்மையை இது உருவாக்கியுள்ளது. அதன் வெளிப்பாடாகவே, அண்மையில் திருச்சியில் ரயில்வே போர்டுகளில் இருந்த ஹிந்தி எழுத்துகள் மாற்றப்பட்ட போராட்டங்கள் அமைந்தன.

தாளமுத்து மற்றும் நடராசனின் தியாகம் வெறும் மரணமல்ல; அது ஒரு மொழியைப் பாதுகாக்க ஒரு இனம் காட்டிய உறுதி. அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் இன்றும் “தாளமுத்து – நடராசன் மாளிகை” அவர்களின் பெயரைத் தாங்கி நின்று, வரும் தலைமுறைக்குத் தமிழ் உணர்வை ஊட்டி வருகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து – நடராஜன் மாளிகையில் 25.01.2026 அன்று ஈகையர்கள் இருவரின் சிலையை முதலமைச்சர் திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *