‘விநாயக’க் கழிவுகள்

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னையில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை. நகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, சாலைகளை அடைத்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டுவருவதற்கான மினி லாரி, டிராக்டர், டாரஸ் லாரி போன்ற வாகனங்களில் விநாயகர் சிலைகளை ஏற்றி, ஹிந்துத்துவ அமைப்பினர், இளைஞர்கள் மது, போதைப் பொருட்களை அருந்தி, ஆட்டம்-பாட்டத்துடன் கடற்கரைக்கு வந்தனர். (பல இடங்களில் வன்முறைகளும், கொலையும் கூட நடந்துள்ளது.) அச் சிலைகளைக் கரைக்க கிரேன்கள், ஜே.சி.பி. எந்திரங்கள், கன்வேயர் பெல்ட் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவாம்.

ஞாயிற்றுக் கிழமை காலை முதல் இரவு வரை கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மெல்லக் கரை ஒதுங்கத் தொடங்கின.  பட்டினப்பாக்கம் கடற்கரையையொட்டி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒதுங்கிய கழிவுகளைப் பின்னர் தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்த தொடங்கினர். அன்று இரவு வரை 70 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. மரக்கட்டைகள், சிலைகளுக்குள் வைக்கப்பட்ட சில பொருட்கள் பிளாஸ்டிக் மாலைகள் கரையோரம் வந்து ஒதுங்கின. நள்ளிரவிலும் கடற்கரைப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. தூய்மைப் பணியாளர்கள் விடிய விடிய கழிவுகளை அகற்றினர். மறுநாள் காலையிலும் கடற்கரையில் ஒதுங்கிய கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதே போல நீலாங்கரை கடற்கரை பகுதியிலும், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் பகுதியிலும் கட்டைகள், இரும்புக் கம்பிகள், அலங்காரப் பொருட்கள் ஒதுங்கியதைக் காலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதில், ஒரு சில பொருட்கள் உடனடியாக கரை ஒதுங்கி விடும். சில பொருட்கள் 2 நாட்கள் கழித்து ஒதுங்கும். அதனால் கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சிலை கரைப்பு மூலம் எடுக்கப்பட்ட மக்காத கழிவுகள் அனைத்தும் லாரிகள் மூலம் பெருங்குடி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றனவாம்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் தரவுகளின்படி, செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களிலிருந்து 92.965 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இவற்றில் 9,413 சிலைகள், 61,690 கிலோ மரப்பலகைகள், 8,010 கிலோ பூக்கள், 20,365 கிலோ உலர் கழிவுகள், 1,550 கிலோ ஈரக் கழிவுகளுடன் 1,350 கிலோ உணவுக்கழிவுகளும் அடங்கும்.

பாலவாக்கத்தில் அதிகபட்சமாக 77.2 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன; இதில் 57.1 டன் மரப்பலகைகளும் 704 சிலைகளும் அடங்கும். பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரத்தில் 4,879 சிலைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளைப் பயன்படுத்துமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியிருந்த போதிலும், ‘பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ என்னும் வேதிப் பொருள் கொண்டு செய்யப்பட்ட ஏராளமான பெரிய சிலைகள் சென்னை எங்கும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், மொத்தம் 930 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டிருப்பதாக ‘தி ஃபெடரல்’ ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

“கடலில் கரைத்தாலும் கூட, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) கொண்டு செய்யப்பட்ட சிலைகள் ஏற்ெகனவே உள்ள மாசுபாட்டை அதிகரிக்கின்றன. ஈயம் மற்றும் பிற கன உலோகங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்களைக் கொண்ட வர்ணங்கள், கடலோரச் சூழல் மண்டலத்தைப் பாதிக்கக்கூடும்,” என்று எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறிவியலாளர் ஆர். ராமசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மும்பை மாநகரில் கடந்த செப்டம்பர் 15 அன்றைய கணக்குப் படியே, 25,231 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் நுழைவாயில் என்று சொல்லப்படும், மும்பை ‘கேட் வே ஆஃப் இந்தியா’ கடற்கரை குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது. செப்டம்பர் 25 வரை இந்தக் கரைப்புகள் தொடரும் என்று சொல்லியிருக்கிறார்கள். எனில், இன்னும் எத்தனை ஆயிரமோ? அதில் எவ்வளவு டன் கழிவுகளோ?

அடுத்த ஆண்டு முதல் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சென்னை பட்டினப்பாக்கம் மற்றும் ஈஞ்சம்பாக்கம் போன்ற பகுதிகளில்  இத்தகைய சிலை கரைப்புகளை அனுமதிக்கக்கூடாது என்றும், அதற்குப் பதிலாக செயற்கைக் குளங்களிலும் இதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களிலும் நிகழ்வை நடத்த முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தெற்கு அமர்வு கடந்த வாரம் உத்தரவிட்டது. சிலை கரைப்புக்குக் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 2024-இல் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்த அமர்வு வலியுறுத்தியுள்ளது.

எத்தனை எத்தனையோ கட்டுப்பாடுகள், விதம்விதமான ஆலோசனைகள் எல்லாம் வழங்கப்பட்டாலும், கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, விநாயகர் சதுர்த்தி என்னும் பெயரால், சுற்றுச் சூழலும், வாழ்க்கைச் சூழலும் கெடுக்கப்படுவது தொடர்ந்துவருகிறது. கழிவுகளைச் சுத்தம் செய்ய ஆட்கள் இருக்கின்றனர் என்பதற்காகக் கழிவுகளை உருவாக்குவதும், அதை அனுமதிப்பதும், கொண்டாடுவதும் திமிர்த்தனம் அல்லாமல் வேறு என்ன? பிள்ளையாருக்குச் சதுர்த்தி என்றால் நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டுதல்! தீபாவளி, கார்த்திகை என்றால் டன் டன்னாகப் பட்டாசுக் குப்பைகள், காற்றுமாசு, விபத்துகள் என்று இந்தப் பண்டிகைகளால் மனித சமூகத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர வேறு ஏதேனும் பலன் உண்டா?

இந்துத்துவாவினரைப் பொறுத்தவரை, விநாயகர் சதுர்த்தி என்பது, கொண்டாட்டம் என்னும் பெயரில் ஆள் பிடிப்பதற்கும், மதவெறியை ஊட்டுவதற்குமான வாய்ப்பு. ஆனால் அந்த மதவெறிக்குத் தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் ஆதரவு அளிப்பதில்லை. எனவே, இதில் ஓட்டுக் கண்ணோட்டம் பார்ப்பதற்கும் எதுவுமில்லை என்பதை ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியினரும் உணரவேண்டும். சூழலியலைக் காக்க, அரசு துணிந்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். பொதுஒழுங்கும், அமைதியும், மக்கள் நலனுமே முக்கியம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *