ஒன்றிய பிஜேபி அமைச்சரின் மூடத்தனமான பேச்சு – கருத்து!

3 Min Read

இந்தியாவே கோடை வெப்பத்தில் தகித்து வரும் நிலையில், ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கோடை வெப்பத்தைத் தணிக்க ஒரு விநோதமான ஆலோசனையை வழங்கியுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்துக்காட்டி தொண்டர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

“வெயில் 124 டிகிரி அடித்தாலும் நான் காரில் ஏசி (AC) பயன்படுத்துவதில்லை.” “பாக்கெட்டில் ஒரு வெங்காயத்தை வைத்திருந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்; இது பழைய காலத்து டெக்னிக்.” என்றார்

அமைச்சரின் இந்த “வெங்காய ஏசி” தத்துவத்தை மருத்துவர்கள் முற்றிலுமாக மறுக்கின்றனர். “வெங்காயத்தைப் பாக்கெட்டில் வைப்பதற்கும் உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கும் எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. வெய்யிலில் இருந்து தப்பிக்கத் தண்ணீர் குடிப்பது மற்றும் பருத்தி ஆடைகளை அணிவது மட்டுமே சரியான வழி” என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டு போன்ற உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயின்ற ஓர் ஒன்றிய அமைச்சர், அறிவியல் ஆதாரமற்ற கருத்துகளைப் பேசுவது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.  மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ.வில் இணைந்த சிந்தியாவுக்கு, தற்போது ஒன்றிய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் செல்வச் செழிப்பு மிக்க ‘சமஸ்தானங்களில் ஒன்றாக குவாலியர் திகழ்ந்தது.

ஜோதிராதித்ய சிந்தியாவின் தாத்தா ஜிவாராவ் சிந்தியா குவாலியரின் கடைசி மகாராஜாவாக இருந்தார். அவரது மனைவி விஜயராஜே சிந்தியா (ஜோதிராதித்யாவின் பாட்டி) தான் இந்த குடும்பத்தை அரசியலுக்குக் கொண்டு வந்தவர்.ஜோதிராதித்ய சிந்தியாவின் வசிப்பிடமான ஜெய் விலாஸ் அரண்மனை, இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் ஆடம்பரமான அரண்மனைகளில் ஒன்றாகும். 407 பெரும் அறைகளைக் கொண்ட இந்த அரண்மனையில் அனைத்து அறையிலும் குளிர்சாதன வசதி உள்ளது. இந்தியாவில் இன்றுவரை பொதுமக்களின் பார்வைக்கு அனுமதி இல்லாத ஒரே அரண்மனை இது!

குவாலியர் அரண்மனை தவிர, இவர்களுக்கு மும்பை, டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் பல கோடி மதிப்புள்ள நிலங்களும், கட்டடங்களும் உள்ளன.

ஜோதிராதித்யாவின் தந்தை மாதவ்ராவ் சிந்தியா ஒரு வலிமையான காங்கிரஸ் தலைவராக இருந்தார். தற்போது ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க-வில் முக்கிய அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.

முதலில் மராட்டியர்களோடு நட்புப் பாராட்டி முகலாயர் வலிமையடைந்த பிறகு அவர்களோடு சேர்ந்து மராட்டியர்களை தோற்கடித்தனர். பின்னர் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்து ஜான்சிராணியை கைவிட்டனர். அதன் பிறகு இந்திய விடுதலையின் போது ‘தனி ராஜ்ஜியமாகவே இருப்போம்’ என்று பிரச்சினை செய்ய இந்திய ராணுவம் தலையிட்டபிறகு இதனை இந்தியாவோடு இணைத்தார்கள். காங்கிரஸ் வலிமையாக இருந்த போது அக்கட்சியில் இருந்த இந்த ராஜவம்சம் இப்போது பாஜகவிடம் சரணடைந்துள்ளது!

இப்படி வலிமையானவர்கள் பக்கம் மட்டுமே சாய்ந்துகொண்டு காலத்தை ஒட்டியவர்கள் ‘வெங்காய’ ஆலோசனை சொல்கிறார்கள்.

பிரதமர் மோடி முதல் பிஜேபியில் உள்ள பிரபலமானவர்கள் எல்லாம் விஞ்ஞானத்திற்கு விரோதமாக வாயில் வந்ததையெல்லாம் உளறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

‘விநாயகரின் தலை பொருத்தப்பட்டது பண்டைய இந்தியாவில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைக்கு ஆதாரம்!’ என்று அறிவியல் மாநாட்டிலேயே பிரதமர் நரேந்திர மோடி பேசினாரல்லவா?

பசுவின் மூத்திரம் உடலுக்கு மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும் என்பது மருத்துவ ஆய்வில் நிரூபணமான ஒன்று!

ஆனால், பசுவின் மூத்திரம் பல நோய்களையும் போக்கக் கூடியது என்று பிரக்யாசிங் தாக்கூர் எம்.பி. கூறியதுண்டே! (சென்னை அய்.அய்.டி. இயக்குநர் காமகோடியும் இவ்வாறு பேசினார் என்பதும் நினைவில் இருக்கலாம்!)

மேனாள் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘அறிவியலைவிட ஜோதிடம் உண்மையானது’ என்றார்.  (அடேயப்பா!)

போகிற போக்கைப் பார்த்தால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மையையும் சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டும் என்ற 51A(h)  பிரிவையே நீக்கிவிடுவார்களோ? வெட்கக் கேடு!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *